ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளதாகித்
தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வமாகி
எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈசனான
திண்டிறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க

ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன் நாசியை நயந்து காக்க

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பல் முழுதும் நற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ரமணியன் காக்க

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள்விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை ஈராறாயுதன் காக்க வென்றன்
ஏசிலா முழங்கை தன்னை எழிற் குறிஞ்சிக்கோன் காக்க

உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
தறுகணேறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமான் மருகன் காக்க பின்முதுகைச் சேய் காக்க

ஊணிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத்
தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ
ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க
அஞ்சகனம் ஒரிரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருட் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சர ணேச வாசான் திமிருமுன் தொடையைக் காக்க

ஏரகத் தேவன் என்தாள் இருமுழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடிரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க

ஐயுறு மலையன் பாதத் தமர் பத்துவிரலுங் காக்க
பையுறு பழநி நாத பரன் அகங் காலைக் காக்க
மெய்யுடல் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வநாயக விசாகன் தினமுமென் நெஞ்சைக் காக்க

ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரும் பூதப் பிரேதம்
பலிகொள் இராக்கதப் பேய் பலகணத் தெவையா னாலும்
கிலிகொள எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க

ஓங்கிய சீற்றமே கொண்டு உவனிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடிபரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

ஒளவியம் உளர் ஊண் உண்போர், அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவரானுலும் திடமுட எனைமற் கட்டத்
தவ்வியே வருவாராயிற் சராசரமெலாம் புரக்குங்
கவ்வுடைச் சூர சண்டன் கை அயில் காக்க காக்க

கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடிநாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை எதனாலேனும் நானிடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க

ஙகரமே போற் றழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யனேறு ஆலப் பல்லி
நகமுடை யோந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையா வெற்கோர் ஊறிலா தைவேல் காக்க

சலத்திலுய்வன் மீனேறு தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலுஞ் சலத்திலுந்தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க

ஞமலியம் பரியன் கைவேல் நவக்கிரகக் கோள் காக்க
சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை சிரமடி கர்ண ரோகம்
எமையணு காமலே பன்னிரு புயன் சயவேல் காக்க

டமருகத் தடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம் குடல்வலி ஈழை காசம்
நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப் பிரமேக மெல்லாம்
எமையடை யாமலே குன்றெறிந்தவன் கைவேல் காக்க

(இ)ணக்கமில்லாத பித்த எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம் மூலவெண் முளை தீமந்தஞ்
சணத்திலே கொல்லும் சன்னி சாலமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனையாளாமல் பெருஞ்சத்தி வடிவேல் காக்க

தவனமா ரோகம் வாதஞ் சயித்தியம் அரோசகம் மெய்
சுவறவே செய்யும் மூலச் சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய் அண்டவாதங்கள் சூலை
எவையும் என்னிடத்தெய் தாமல் எம்பிரான் திணிவேல் காக்க

நமைப்புறு கிரந்தி வீக்கம் நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகு பல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவலிப்போ டெழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை யெய்தாமல் அருள்வேல் காக்க

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம்ஐம் ரீம் வேல் காக்க

மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த இடத்தும் என்னை
நண்ணி வந்தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க

யகரமே போல் சூலேந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலா மீராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோ டாறும் ஆனோன் தன்கைவேல் நடுவிற் காக்க
சிகரமின் தேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திடமுடன் காக்க வங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக் கரவேல் காக்க

லகரமே போல் காளிங்கன் நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க மேற்கில்
இகலயில் காக்க வாயு வினிற் குகன் கதிர்வேல் காக்க

வடதிசை தன்னில் ஈசன் மகனருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேதபோதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும் ஞான்று நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க

(இ)ழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கு நல் ஊணுண் போதும் மால் விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க திடமுடன் மயிலுங் காக்க

(இ)ளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச்சிவன் தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளியெழு காலை முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளி நடு பிற்பகல் கால் சிவகுருநாதன் காக்க

(இ)றகுடைக் கோழித் தோகைக் கிறை முன் ராவில் காக்க
திறலுடைச் சூர்ப்பகைத்தே திகழ்பின் ராவில் காக்க
நறவிசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னிற் காக்க
மறைதொழு குழகன் எங்கோன் மாறாது காக்க காக்க

(இ)னமெனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுடள் தான் காக்க வந்தே

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Posts

Pin It on Pinterest

Shares
Share This