Fb. In. Tw. Be.

அண்ணாமலை மகிமை!

திருக்கார்த்திகை தீப நாளில் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டும் உண்டு. பனம் பூளை எனப்படும் பனம் பூக்கள் மலரும் காம்பை, நன்கு காய வைத்து, காற்றுப் புகாமல் பள்ளத்த்தில் வைத்து, தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டிக் கட்டிக் கொள்வார்கள். பிறகு, பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்துக் கட்டுவர். பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள்.

அதையடுத்து, துணிப்பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவார்கள். கயிற்றைப் பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு, எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடுவது போல் காட்சியளிக் கும்.அப்போது மாவளியோ மாவளி என்று குரல் எழுப்பி, ஆனந்தக் கூத்தாடுவார்கள் மக்கள்!

மா ஒளி என்றால் மிகப்பெரிய ஒளி என்று அர்த்தம். இதுவே மருவி மாவளி ஆனது என்றும், பாதாளத்தில் வசிக்கும் மாவலி, தீபத் திருநாளில் மண்ணுலகம் வந்து தீபாலங்காரத்தைக் கண்டு மகிழ்கிறார் என்கிற ஐதீகத்தால் அவர் பெயரால் இது ‘மாவலி’ ஆனது என்றும் சொல்வார்கள்!

மகாதீபத்திற்கு என்றே செப்பினால் ஆன கொப்பரையைப் பயன்படுத்துகிறார்கள், திருவண்ணாமலை திருத்தலத்தில்! இந்த கொப்பரை நாலரை முதல் ஐந்து அடி உயரம் கொண்டது. மேலே 4 அடி அகலமும் அடிப்பாகம் 2 அடி அகலமும் கொண்டிருக்கும்.

வருடந்தோறும் தீபத்திருநாளின் போது, இதில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. விளக்கினை போல் எண்ணெய் ஊற்றி திரியிட்டு ஏற்றுவதல்ல மகாதீபம். காடா என்ற ஒரு வகைத் துணியையே திரியாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்காக சுமார் 2000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்படுகி றது! மேலும் பக்தர்கள் கொடுக்கும் துணியும் பயன்படுத்தப்படும்.

மகாதீபம் தூய பசுநெய்யைக் கொண்டு ஏற்றப்படுகிறது. நெய், தரமானதாகப் பார்த்து பயன்படுத்தப்படுகிறது. சுமாராக 350 லிட்டர் நெய், ஆலயத்தின் சார்பில் வருடாவருடம் வாங்குகிறார் கள். அது போக பக்தர்கள் காணிக்கையாகவும் பசுநெய்யை வழங்குவார்கள்! இதனால், 11 நாட்கள் தீபம் ஒளிர்கிறது என்கிறார்கள் பக்தர்கள்!

கொப்பரையில் பசுநெய்யில் ஊறவைத்த காடாதுணியை அடைத்து அதன் மேல் சூடம் வைத்து மகாதீபம் ஏற்றப்படுகிறது. பக்தர்கள் நெய் காணிக்கை அளிக்க சீட்டுத் தருகிறார்கள். நம் இஷ்டப்படி எவ்வளவு நெய் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

நேரடியாக நெய் வாங்கி வந்தும் கொடுக்கலாம் இல்லையெனில் எவ்வளவு நெய் என்று சொல்லி அதற்கு உரிய கட்டணம் கொடுத்துவிட்டால் பக்தர்கள் பெயரால் அண்ணாமலையாருக்கு கோவில் நிர்வாகத்தினரே வாங்கி பயன்படுத்திக்கொள்வர்.

பசுநெய் அளித்த ஒவ்வொருவருக்கும் தீபம் முடிந்தப்பின் அண்ணாமலையாரின் மகாதீபப் பிரசாதமாக கொப்பரையில் சேர்ந்த மை, பிரசாதமாக வழங்கப்படுகிறது!

மகாதீபத்தினை கண்டாலே புண்ணியம் நம்மைத் தேடி வரும் என்றால் அதனை ஏற்றுபவர் உண்மையில் எவ்வளவு பாக்கியசாலி. நாம் நினைப்பது போல் நினைத்தவரெல்லாம் தீபமேற்ற முடியாது.

காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கார்த்திகை மகாதீபமேற்ற பணிக்கப்பட்டி ருக்கிறார்கள். அடிப்படையில் மீனவ குலத்தை சார்ந்த இவர்கள், பர்வத மகாராஜாவின் வம்சாவளியில் வந்தவர்கள். எனவே, இவர்களை பர்வத ராஜகுலத்தினர் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார்கள்! திருவண்ணாமலையைப் பூர்விகமாகக் கொண்ட பர்வதராஜகுலப் பிரிவினரே, தீபமேற்ற வேண்டுமென்பது புராணகாலத்து சம்பிரதாயம்.

திருக்கார்த்திகை தீபத்திருநாள் முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கும் தினமும் மாலை இவர்கள் கொப்பரையை சுத்தம் செய்து மீண்டும் நெய் மற்றும் துணி வைத்து தீபமேற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் கொப்பரையில் இருக்கும் மையினை சேகரிக்கிறார்கள்.

இத்தனைப் பெருமைகள் கொண்ட திருவண்ணா மலையில், தீபத் திருவிழாவின் போது இன்னுமொரு சிறப்பும் உண்டு. அன்றைய நாளில், அர்த்தநாரி தாண்டவமாடுதல் எனும் நிகழ்ச்சி, வேறு எந்த திருத்தலத்திலும் நடைபெறாத அற்புதமான நிகழ்வு!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி !!

அண்ணாமலையாருக்கு அரோகரா !

தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் !

Post a Comment

You don't have permission to register