Fb. In. Tw. Be.

அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன் வைத்திருக்கிறார்கள்?

அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், ஸப்தபதி போன்ற சடங்குகளை திருமணத்தில் ஏன் வைத்திருக்கிறார்கள்? – அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.

அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை ‘அச்மாரோஹணம்’ என்று குறிப்பிடுவார்கள். இந்து மதத்தில் திருமணத்தின்போது செய்யப்பட வேண்டிய முக்கியமான சடங்கு இது. அச்மன் என்றால் கல் என்று பொருள். அசைவற்ற ஒரு கல்லின் மீது மணப்பெண்ணை நிற்க வைத்து மணமகன் ‘ஆதிஷ்டேமம்…’ என்று துவங்கும் மந்திரத்தைச் சொல்வார். “வாழ்க்கை என்பது கரடு முரடாக இருக்கும், சுகம் வரும்போதும் சரி, துக்கம் வரும்போதும் சரி, சோதனைக்குரிய தருணத்திலும் சரி, மனதில் எந்தவித சஞ்சலமும் இன்றி இந்தக் கல் போல ஸ்திரமான, திடமான மன உறுதியை நீ பெற்றிருக்க வேண்டும்” என்று மணமகன், மணப்பெண்ணை நோக்கிச் சொல்வதே இந்த மந்திரத்தின் பொருள்.

அம்மியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அக்காலத்தில் திருமணத்தை அவரவர் இல்லத்திலேயே நடத்தினார்கள். வீடுகளில் பயன்படுத்தக் கூடிய கல்லாக அம்மி இருந்ததால் அதனைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அச்மன் என்ற வார்த்தை மருவி தமிழில் அம்மி என்று ஆகியிருக்கலாம். ஒரு கருங்கல்லின் மீது நிற்க வைத்து இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்பதே விதி.

அருந்ததி என்பவர் வசிஷ்ட மகரிஷியின் பத்னி. அருந்ததி என்ற வார்த்தைக்கு தர்மத்திற்கு விரோதமான காரியத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் செய்யாதவள் என்று பொருள். அருந்ததி பார்ப்பது என்கிற நிகழ்வு திருமண நாள் அன்று மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யப்பட வேண்டிய ஒன்று. தற்காலத்தில் நேரமின்மை காரணமாக மண்டபத்திற்கு உள்ளேயே இந்த சம்பிரதாயத்தையும் முடித்துவிடுகிறார்கள்.

சூரியன் அஸ்தமனமானதும், ஆகாயத்தில் வடக்கு திசையில் கிழக்கு நுனியாக ஸப்தரிஷி மண்டலம் காணப்படும். அவற்றில் கிழக்கு மூலையில் இருப்பது மரீசி என்ற ரிஷியைக் குறிக்கும். அவருக்கு மேற்கு திசையில் சற்று கீழே காணப்படுவது வசிஷ்ட மகரிஷி. வசிஷ்டருக்கு தென்கிழக்கில் சற்று மங்கலாகத் தெரிவது அருந்ததி நட்சத்திரம். ஸப்தரிஷி பத்னிகளில் அருந்ததி மட்டுமே தனது கணவருடன் காட்சியளிக்கிறார். ஸப்தரிஷி பத்னிகளிலேயே சிறந்தவர் என்று மற்ற ஆறு ரிஷிபத்னிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வர் அருந்ததி. அப்பேற்பட்ட அருந்ததியை நோக்கி புதுமணத் தம்பதியர் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

மணமகன் அருந்ததி நட்சத்திரத்தை தனது இளம் மனைவிக்கு காண்பித்து இவளைப்போல் நீயும் கற்புக்கரசியாகவும், எந்தச் சூழலிலும் தர்ம நெறி மாறாதவளாகவும் நடந்து கொள்ள பிரார்த்தனை செய்துகொள் என்று அறிவுறுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு இது. இந்து திருமண சாஸ்திரத்தின்படி மாங்கல்யதாரணத்தை விட மிக மிக முக்கியமானது பாணிக்ரஹணமும், ஸப்தபதியுமே ஆகும். வேதோக்தமான திருமணத்தில் மாங்கல்யதாரணத்திற்கான பிரமாணம் ஏதும் கிடையாது. மீனாக்ஷி கல்யாணத்தில் மங்கல நாண் எனப்படும் தாலி கட்டுதல் சம்பிரதாயம் காணப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

தாலி கட்டிவிடுவதால் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக சாஸ்திரம் மட்டுமல்ல, சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாங்கல்யதாரணம் என்றழைக்கப்படும் தாலி கட்டுதல் என்ற சம்பிரதாயம் முடிந்தவுடன் பெண்ணின் கரத்தினைப் பற்றி மாப்பிள்ளை மந்திரம் சொல்லி அந்தப்பெண்ணை தன் வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்றுவதாக உறுதியளிப்பார். இந்த நிகழ்விற்கு பாணிக்ரஹணம் என்று பெயர். பாணி என்றால் கரம் என்று பொருள்.

பாணிக்ரஹணம் என்றால் கரத்தினைப் பற்றுதல் என்று பொருள். இதனைத் தொடர்ந்து அந்த ஆண்மகன் சபையோர் முன்னிலையில் தான் கரம் பற்றிய பெண்ணின் கால்விரலைப் பிடித்து ஒவ்வொரு அடியாக ஏழு அடி எடுத்து வைக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் உரிய மந்திரத்தைச் சொல்லி ஊரறிய அவளது பாதத்தினைப் பற்றி அவன் அந்தப் பெண்ணிற்குச் செய்யும் உபதேசம் ‘ஸப்தபதி’ என்று அழைக்கப்படும்.

இந்த இரண்டும் முறையாக நடந்தால் மட்டுமே இந்து திருமணச் சட்டத்தின்படியும், சாஸ்திரப்படியும் அவர்களது திருமணம் நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். நமது இந்து மதத்தில் உள்ள சடங்குகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை மட்டுமல்ல., மனித உணர்வுகளோடு ஒன்றிணைந்தவை என்பதற்கு சிறந்த உதாரணமே மேற்சொன்ன இந்த நிகழ்வுகள். அவை கூறும் கருத்துக்களைப் பின்பற்றி நடந்தால் வாழ்க்கை சிறப்பானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

* காலண்டர்களில், பைகளில், பாக்கெட்டுகளில் பகவானின் திருவுருவப் படம் அச்சிடப்படுகிறது. இவைகளின் உபயோகம் முடிந்தபின் குப்பைத்தொட்டியில் காண நேரிடும்போது மனம் வேதனை கொள்கிறது. இதனை எப்படிக் கையாளலாம் என கூறுங்கள். – கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

உங்கள் உள்ளுணர்வு நியாயமானதே. ஆயினும் இதில் வேதனைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ‘இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்’ என்பது அசைக்க முடியாத உண்மை. ஆவாஹனம் செய்யப்பட்ட விக்கிரகங்கள் அல்லது நம் பூஜையறையில் நாம் தினமும் பூஜித்து வரும் உருவகங்கள் இவைகள் பின்னமானால் அதாவது உடைந்துபோனால் அவற்றை ஜலத்தில் அதாவது சமுத்திரத்திலோ அல்லது ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றிலோ சேர்ப்பித்து விட வேண்டும்.

மாறாக நீங்கள் குறிப்பிடுவது போன்ற காலண்டர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் இவற்றிற்கு எந்த விதமான விதிமுறையும் இல்லை. காலண்டர்கள், அட்டைகள் அல்லது நல்ல தரமான காகிதத்தில் அச்சிடப்பட்டிருப்பதால் காலில் மிதிபடாத வகையில் அவற்றை எடைக்குப் போடுவதில் எவ்வித தவறும் இல்லை. தினசரி நாள்காட்டி முதல் மாதாந்திர காலண்டர்கள் வரை அனைத்திலும் சுவாமி படங்களை அச்சடிக்கிறார்கள்.

வீட்டிலும், அலுவலகத்திலும், வியாபார நிறுவனங்களிலும் நம் கண் முன்னே சுவாமி படங்களைக் கொண்ட காலண்டர்கள் தொங்கும்போது இறைவன் நம் கூடவே இருப்பதாக நமக்கு ஒரு நம்பிக்கை உண்டாகிறது. அதே போன்று திருமணம், க்ருஹப்ரவேசம் முதலான சுபநிகழ்வுகளின் தாம்பூலப் பைகளிலும் இறைவனின் திருவுருவம் அச்சிட்ட பைகளை வழங்குகிறார்கள். அவற்றின் உபயோகம் முடிந்தவுடன் தூக்கி எறிவதால் இறைவனை புறக்கணித்துவிட்டதாகக் கருத முடியாது. இறைவனுக்கு அணிவித்த புஷ்பங்களை மறுநாள் எவ்வாறு நிர்மால்யம் என்ற கணக்கில் தூக்கி எறிந்துவிடுகிறோமோ அதே போல் இவற்றையும் செய்வதில் தவறில்லை. இது -குறித்து கவலைப்பட வேண்டிய
அவசியமும் இல்லை.

* பெண்கள் மாதவிலக்கு ஆன நாளில் ஆண்கள் கோவிலுக்கு போகலாமா? – கே. விஸ்வநாத், பெங்களூரு.

போகலாம். ஆனால் மாதவிலக்கு ஆன பெண்ணைத் தொடாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது அந்த ஆண் உட்கொள்ளும் உணவினைச் சமைத்ததில் மாதவிலக்கு ஆன பெண்ணிற்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது. உணவு மட்டுமல்லாது அவர் உடுத்திக்கொள்ளும் உடையானது மாதவிலக்கு நேரத்தில் அந்தப் பெண் துவைத்ததாக இருக்கக் கூடாது. மொத்தத்தில் மாதவிலக்கு ஆன பெண் குடும்பப் பணிகளில் இருந்து ஒதுங்கி தனித்து அமர்ந்திருக்கும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் கோயிலுக்குச் செல்லலாம். ஆண்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள இதர பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருக்கும் இந்த விதி பொருந்தும்.

* பிரதோஷ நாளில் மூலவரை விட நந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது ஏன்? – மு. மதிவாணன், அரூர்.

மூலவரைவிட நந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற கருத்தினை ஏற்க முடியாது. பிரதோஷ நாளில் நந்திக்கு மற்ற நாட்களை விட விசேஷ பூஜை செய்யப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் இறைவனின் ஆனந்த தாண்டவம் நிகழ்கிறது என்கிறது சிவபுராணம். அந்த திருக்காட்சியினைக் காண்பதற்காகத்தான் அத்தனை கூட்டம் கூடுகிறது.

நந்தியின் கொம்புகளுக்கு இடையில் இறைவன் வந்து நிற்பதால் அந்த நேரத்தில் நந்திக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் நந்திக்கு செய்யப்படுகின்ற அபிஷேகமானது இறைவனுக்குச் செய்யப்படுவதாகவே பொருள் காண வேண்டும். இறைவன் வந்து அமருகின்ற, ஆனந்த தாண்டவம் புரிகின்ற இடம் என்பதால் அந்த இடத்தினை பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகத்தின் மூலம் சுத்தப்படுத்தி விசேஷ அலங்காரத்தினைச் செய்து வைக்கிறார்கள்.

அங்கு நடத்தப்படும் விசேஷ தீபாராதனைகளும், ஷோடஸ உபச்சாரங்களும் ஆனந்த நடனம் புரிகின்ற இறைவனுக்கே செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் மூலவருக்கும் விசேஷ அலங்காரத்தினைச் செய்து இருப்பார்கள். நந்தியம்பெருமானுக்குச் செய்யப்படுகின்ற ஆராதனையானது ஆண்டவனுக்குச் செய்யப்படுகின்ற ஆராதனையே என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

* நாட்டில் தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது. மழையும் சரிவர பெய்யவில்லை. குடிநீருக்காக மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மழை பெய்யக்கூடிய ஸ்லோகங்களை தெரிவித்தால் அதை இறை நம்பிக்கை உள்ளவர்கள் ஜபம் செய்வார்கள் அல்லவா.. மழை வருவதற்கான வருண ஜபம் குறித்த விவரத்தினை தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். – எஸ். வெற்றிச்செல்வி, ஹஸ்தினாபுரம்.

Post a Comment

You don't have permission to register