Fb. In. Tw. Be.

அஷ்டமி

சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரும், சிவகணங்களுக்கு தலைவருமானவர் பைரவர்.

தீயோர்களுக்கு பயத்தை ஏற்படுத்தவும், அத்தீயோரால் பயம் கண்டோரின் பயத்தைப் போக்கவும் வெளிப்பட்டது பைரவர் அவதாரம்.

பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமானின் ஆணைப்படி ருத்திரர், உருக்கொண்டு பிரம்மனின் ஐந்தாவது தலையை துண்டித்தவர்.

அறுபத்து நான்கு திருவடிவங்களாகக் கூறப்பட்டுள்ள பைரவரின் தலை மீது தீ ஜுவாலை, திருவடிகளில் சிலம்பு, மார்பில் கபால மாலை துலங்குவதைக் காணலாம்.

இவர் முக்கண் கொண்டவர். திரிசூலம், கபாலம், நாகபாசம், உடுக்கை, டமருகம் போன்றவற்றை கரங்களில் ஏந்தி நாகத்தையே பூணூலாகத் தரித்தவர். ஆடை அணியா அழகராகக் காட்சி தருபவர். சிவன்கோயில்களில் வடகிழக்கு மூலையில் அருள்பாலிப்பவர்.

காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்தஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் பூட்டிய திருச்சன்னிதிகளின் அனைத்து சாவிகளையும் பைரவரின் திருவடிகளில் சமர்ப்பித்த பின்னரே கோயிலைச் சாத்துவது மரபு.

கோயிலில் காவலராக இருந்து எந்த இடையூறோ, இழப்போ ஏற்படாமல் பாதுகாப்பதால் இவரை க்ஷேத்ரபாலகர் என்று பக்தர்கள் வணங்குகின்றனர்.

பைரவரை செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, தேன், அவல் பாயசம், தயிர்சாதம், செவ்வாழை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபட, மனதில் ஏற்படும் பயம், கடன் தொல்லை நீங்கும், திருமணம், வீடு கட்டுதல், வேலை வாய்ப்பு, வியாபார முன்னேற்றமும் ஏற்படும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பைரவருக்கு உகந்தது வெள்ளை வஸ்திரம். தயிர் அன்னம், தேங்காய் போன்ற வெண்ணிற உணவுகள்.

எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட பைரவர் வழிபாடு சிறந்தது.

“விரிந்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.”
– (#திருநாவுக்கரசர்)

இந்த பாடலில் கால பைரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.

பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பைரவ மூர்த்தியாக கோலம் கொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்; யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டததையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள்.

தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.

பைரவ வழிபாடு பல்வகையான துன்பங்களையும் துயரங்களையும் நீக்கி வாழ்வினைச் செம்மைப்படுத்தி நல்வழி காட்டும்.

Post a Comment

You don't have permission to register