Fb. In. Tw. Be.

காருண்யம்

சீதா பிராட்டியின் காருண்யம்தான் அத்தனை கொடிய ராக்ஷஸ ஸ்திரீகளையும் ஆஞ்சநேயனிடம் இருந்து காப்பாற்றியது.

திரிசடை ஒருத்தி சரணாகதியினுள்ளேயே அத்தனை பேரையும் அடக்கி, சரணாகத ரக்ஷணம் பண்ணி விட்டாளே தாயார்!

எனவே, அந்த மஹாலக்ஷ்மியின் காருண்யமே உயர்ந்தது என்று அபயப் பிரதான காரத்தில் எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது.

ராமாயணம் வேத சமானம் என்று சொன்னால், அதில் வருகிற விபீஷண சரணாகதிக்கு உபநிஷத் ஸ்தானம் இருக்கிறது. வேதாந்தம் அது! உபநிஷத் இல்லாமல் வேதம் இல்லை அல்லவா..!

சரணாகதி வித்யையே எல்லாவற்றைக் காட்டிலும் மேம்பட்ட வித்யை என்பதை விளக்குகிறது விபீஷண சரணாகதி.

ஒருத்தர் பக்தி யோகம் பண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதன் முடிவிலேயே, இந்த ஜென்மத்திலேயே அவருக்கு மோக்ஷம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

இன்னொரு ஜன்மாவுக்கு அது தொடரலாம்..! பல ஜன்ம பரம்பரைகளுக்குக் கூட பிறவியை சகிக்க வேண்டியிருக்கும். ஆனால், சரணாகதி பண்ணினால் பரமாத்மா மோக்ஷத்தை உடனே கொடுத்து விடுகிறான்.

இப்படிச் சொன்னால் சந்தேகம் வரும் – நியாயமான சந்தேகம் – ஏற்கனவே நாம் செய்த பாவ மூட்டைகள்.. இனிமேல் வரும் பாவங்கள் எல்லாம் என்ன ஆகும்..

சரணாகதியினாலே அவற்றின் துர்ப்பலன் எல்லாம் போய்விடுமா..?

பக்தி யோகமே இந்தப் பாவ மூட்டைகளை அழித்து விடும். அப்படி இருக்கும் போது சரணாகதி யோகத்தால் இவற்றை அழிக்க முடியும் என்று சொல்லத் தேவை இல்லை…

சரணாகதியிலே இன்னொரு ஏற்றம் என்னவென்றால் அது பாவ மூட்டைகளையும் அழித்து மோக்ஷத்தை வாங்கிக் கொடுத்து விடும்.

ஆசார்யர்கள் சரணாகதியை நான்கு விதமாகப் பேசினார்கள்.

1. உக்தி நிஷ்டா என்பது ஒரு வகை. ஆசார்யராய் இருக்கும்படியான ஒருவர், எம்பெருமான் எதிரிலே நம்மை நிறுத்தி, நம்மைக் குறித்து அவனிடத்திலே எடுத்துச் சொல்லி, நம்மையும் சொல்ல வைத்து, இந்த ஆத்மாவை அவன்திருவடியிலே சேர்ப்பிக்கும்படியான சரணாகதி உக்தி நிஷ்டை.

2. தனக்கே சக்தி இருந்தால், தானே பகவானை சரணாகதி பண்ணாலாம். இது சுவநிஷ்டை.

3. தனக்காக ஆசார்யனையும் பண்ணச் சொல்லி வேண்டலாம். அதற்கு ஆசார்யநிஷ்டை என்று பெயர்.

4. பாகவதோத்தமர்களை முன்னிட்டுக் கொண்டு எம்பெருமானிடத்திலே சரணாகதி பண்ணலாம். அதற்கு பாகவத நிஷ்டை என்று பெயர்.

இப்படி சரணாகதியிலே பல நிலைகள்.. அத்தனை நிலைகளையும் ராமாயணத்திலே எடுத்துக்காட்டி இருக்கிறது!

அதனால்தான் கொல்லத் தகுந்த குற்றமே பண்ணியவனாக இருப்பினும் அவன் சரணாகதி பண்ணி விட்டானானால் ஒருத்தனைக் காட்டிக் கொடுப்பதில்லை. அத்தகையவனையும் ரக்ஷித்தே தீர வேண்டும் என்பதற்காகவே பகவான் ராமவதாரம் பண்ணினான்.

மனத்திலே துஷ்டி (மன நிறைவு) இருந்தால் ஒருத்தருக்குப் புஷ்டி தானாக வந்து விடும். ஆனால், மனத்தில் வியாகூலம் இருப்பின் எவ்வளவுதான் நன்றாகச் சாப்பிட்டாலும் புஷ்டி ஏற்படுமா? ஒருநாளும் ஏற்படாது.

ராமாவதராத்திலே பரமாத்மா எப்போதுமே புஷ்டியாகவே இருந்தானாம்!

ஆஞ்சநேயன் ராமனைப் பார்த்த சமயம் அவன் “ஹா சீதே! ஹா சீதே!” என்று அரற்றியபடி இருந்தானாம். அந்த நேரத்திலே ஆஞ்சநேயனுக்கு ராமனைக் குறித்து ஒரு தப்பு அபிப்ராயம் ஏற்பட்டதாம்.

இவன் என்ன இப்படி அரற்றுகிரானே! ஸ்திரீ லோலனாக இருப்பான் போல் இருக்கிறேதே! எப்போது பார்த்தாலும் “சீதே, சீதே” என்று சொல்லிக் கொண்டிருக்கிறானே.. என தப்பாக எடை போட்டு விட்டானாம்.

அதே ஆஞ்சநேயன் அசோகவனத்திலே சீதையைப் பார்க்கிறான். ராமனையும் சீதையையும் தராசிலே நிறுத்தால் அழகிலே சமமாக இருப்பார்கள் என்பதை உணர்கிறான்.

பங்குனி திருநாளில் ரங்கநாதரும் ரங்கநாயகி தாயாரும் ஒரே இருக்கையில் சேர்ந்து எழுந்தருளியிருக்க, எம்பெருமான் பாஷ்யக்காரர், அந்த திருக்கோலத்தை ஆச்சர்யத்துடன் பாடுகிறார். ஆஞ்சநேயர் ஆச்சர்யப்பட்டது மாதிரி அவரும் ஆச்சர்யப்படுகிறார். பகவானுக்கு சமமான ரூபம், குணம், சீலம் எல்லாம் நிரம்பியவளாக தாயார் தெரிகிறாளாம்!

ஆஞ்சநேயனும் அப்படித்தான் ஆச்சர்யப் பட்டான். அவனுக்குக் கூடுதலாக இன்னொரு ஆச்சர்யம் – சீதாபிராட்டியைப் பிரிந்தும் ராமன் இப்படி புஷ்டியாக இருக்கிறானே என்று ஆச்சர்யம்.
இதில் இருந்து தெரிகிறதல்லவா, ஸ்ரீ ராமபிரான் எப்போதுமே புஷ்டியாக இருந்தான் என்று!
ராமபிரானுக்கு இந்த அவதாரத்திலே ரொம்ப விஷேசம் நேத்திரத்தினுடைய அழகு. மகான்களை எல்லாம் ஈர்த்திருக்கிறது அந்த நேத்ரம்.
ராமாயணத்திலே அவன் நேத்திரத்திற்குத் தோற்றவர்கள் மூன்று பேர் – ஆஞ்சநேயன், தசரதன், சபரி.

விச்வாமித்ரர் ராமனை அனுப்பச் சொல்லிக் கேட்கிறார் தசரதனிடம். தசரதன் கதறி அழுகிறான். “நீங்கள் திருவடியால் ஆக்ஜாபிப்பதை சிரஸினால் செய்யக்காத்திருக்கிறேன்”.. என்று விச்வாமித்ரரிடம் சொன்னவன் கலங்கிப் போய் அழுகிறான்! மகரிஷியைப் பார்த்துச் சொல்கிறான்.

“இது நியாயமா? நீங்கள் என் குழந்தையைக் கேட்கிறீர்களே. இது நியாயமில்லை. நான் சேவிக்கும் போது அட்ஷதையை எடுத்து, என் தலையில் போட்டு “தீர்காயுஷ்மான் பவ” என்று என்று ஆசீர்வாதம் பண்ணிணீரே… .இப்போது மறை முகமாக என் பிராணனை அல்லவா கேட்கிறீர்கள்! என் தலையில் போட்ட அட்ஷதைக்கு என்ன அர்த்தம்? நான் ராமனை அனுப்ப மாட்டேன்” என்று புலம்புகிறான்.

“சின்னக் குழந்தை அவன். அஸ்தமனமானால் தூங்கிப் போய்விடுவான்! நீர் அவனைக் கூப்பிடுவதோ ராட்க்ஷஸர்களை எதிர்ப்பதற்கு.. ராத்திரி வேளையிலே கண் விழித்துச் சண்டை போடுகிற அளவுக்கு இவனுக்கு வயசில்லையே”

ராமன் பிறந்த பிற்பாடு தசரதனுக்கு வேறு வேலையே கிடையாதாம். சிம்மாசனத்தில் அமர்ந்தபடி சுமந்திரனை அழைத்து, ராமனைக் கூட்டி வரச் சொல்லுவானாம்.

“அப்பா கூப்பிட்டீர்களா?” என்று ராமன் வருவான்.

“போ, போ, என்பானாம் தசரதன்.

பவனத்தை விட்டு ராமன் வெளியேறும் நேரம் பார்த்து”வா” என்பானாம் மீண்டும்.

திரும்பவும் போ, வா, இப்படியே..!

குலசேகராழ்வாருடைய அனுபவம் இது!

அந்த ராமாவதாரத்திலே ஈடுபட்டு தசரதன், ராமனின் முன்னழகையும் பின்னழகையும் மாறி மாறிச் சேவித்தான். அந்த நேத்திர அழகிலே ஈடுபட்டுத்தான் அப்படிச் சேவித்தான்.

சபரியும் இந்த நேத்ர விஷேசத்தைப் பாராட்டுகிறாள்!

“தங்கள் திவ்யமான பார்வை என்மீது பட்டது. உத்தமமான உலகத்துக்குப் போய்க் கொண்டே இருக்கிறேன்” என்றாள்.

அப்படியெனில் அந்த கடாஷம் எப்பேர்ப்பட்டதாயிருக்கும்!

ஆஞ்சநேயருடைய அனுபவத்தைப் பாருங்கள்..

சீதை அவனிடம் கேட்டாளாம்..”ராமன் எப்படி இருக்கிறான்? அவனுடைய புஜங்கள் எப்படியிருக்கின்றன..?

ஆஞ்சநேயன் உடனே ஆரம்பித்து ராமனின் கண்களைத்தான் வர்ணிக்கிறார்! கண்கள் தான் அவனை ஆகர்ஷித்தன என்பதால்.
“மரத்துக்கு மரம் தத்தித் திரியும் ஒரு குரங்கினைப் போல் திரியக்கூடிய என் உள்ளத்தையே கொள்ளை கொண்டு விட்டதே அந்த நேத்ரம்! யோகிகளின் உள்ளத்தை அது எவ்வாறு கொள்ளை கொள்ளும் என்று சொல்லவும் வேண்டுமோ? என்று எண்ணுகிறான்.

சுபமான பார்வை பகவானின் பார்வை!

“அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்”

என்று பாடுகிறாள் ஆண்டாள்.

நம்மாழ்வார் சொல்கிறார்: “ஒரு யமனுடைய விஷேசமான தன்மையை உலகத்திலே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உன்னிடத்திலே இரண்டு யமன்கள் வைத்துக் கொண்டிருக்கிறாயே? என்கிறார்.
இரண்டு யமன்கள்..?

ஆம்! உன் திருவடி பற்றக்கூடியவர்களின் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்கொலோ..? என்கிறார்.

திருநேத்திரங்களைக் கடல் என்கிறார்; நதி என்கிறார். நேத்திர நதியிலே எழக்கூடிய சுழிகள் எத்தனை பாகவதோத்தமர்கள் வந்தாலும் ஏற்கக் கூடிய சக்தி வாய்ந்தவை!
சூர்யா ரச்மி பட்டதும் அன்றலர்ந்த தாமரை எப்படி சோபாயமானமாக இருக்குமோ அப்படி காணப்படுகிறாராம் ஸ்ரீ ராமர்.

அவர் முகம் தாமரை:
நேத்திரங்கள் தாமரை:
நாபி தாமரை:
திருவடி தாமரை!

தாமரைக் காடு பூத்தது போல இருக்கிறான். அந்த பத்ம வனத்திலே வாசம் பண்ணுகிறாள் மஹாலக்ஷ்மி!

எம்பெருமானின் திருமுடியிலிருந்து திருவடிவரையில் எல்லாம் பத்ம மயம். மஹாலக்ஷ்மி வாசம் பண்ணுவது அவன் ஹ்ருதய பத்மத்தில்!

இப்படி ஹ்ருதய பத்மத்தில் ஸ்ரீயைத் தாங்கி, பத்மவனமாகவே விளங்கும் பகவானிடம் சரணாகதி பண்ணி அவன் தாமரை நேத்திரங்களால் கடாக்ஷிக்கப்படுகிறவர்கள் எல்லாம் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

Post a Comment

You don't have permission to register