Fb. In. Tw. Be.

கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா?

நவக்கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள், மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நவகிரகம்ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு வரும்போதெல்லாம், அனைவரின் எதிர்பார்ப்பும், ‘இந்த புதிய வருடம் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன?’ என்பதே ஆகும். புத்தாண்டு பலனை தீர்மானம் செய்வதில் நவக்கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. நவக்கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள், மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

காலை எழுந்தவுடன் டி.வி, பத்திரிகை என அனைத்து மீடியாக்களிலும் ராசி பலனுடன் கிரகப் பெயர்ச்சி பற்றிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பகுத்தறிவாளர்கள், ‘கிரகங்களின் நகர்வு இயற்கையானது. குரு, சனி, ராகு- கேதுப் பெயர்ச்சியெல்லாம் இயற்கையின் வேலை. இதை நம்பாமல், பிழைக்கும் வழியை பாருங்கள்’ என்று எளிதாக கூறிவிடுவார்கள்.

ஆனால் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், எதையும் தாங்கும் மனப்பக்குவம் உள்ளவர்கள், கிரகப் பெயர்ச்சி பற்றிய பலனை படித்து விட்டு, ‘எல்லாம் படைத்தவன் பார்த்துக் கொள்வான். மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை. கடமையைச் செய்வோம்’ என்று அடுத்த வேலையில் கவனம் செலுத்துவார்கள்.

கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றிய சந்தேகம் பலருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது பற்றிய விளக்கத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கிரகங்களை வருட, மாத, தின கிரகம் என பிரித்து பலன் காணலாம்.

சந்திரன், ஒரு தினக் கோள். இது ஒரு ராசியில் இரண்டேகால் நாட்களே இருப்பதால், அதனால் ஏற்படும் தாக்கம் ஓரிரு நாட்களில் குறைந்து விடும்.

சூரியன், புதன், சுக்ரன் ஆகியவை மாத கிரகங்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் மாதம் ஒரு ராசியில் இருக்கும் என்பதால், இவற்றால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மாதம் வரை நீடிக்கும்.

செவ்வாய் கிரகமும் மாத கிரகம்தான் என்றாலும், அது 45 நாட்கள் முதல் 6 மாதம் வரை ஒரு ராசியில் இருக்கும் என்பதால், அதனால் ஏற்படும் மாற்றங்களும் ஒரு சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கலாம்.

குரு, சனி, ராகு-கேது ஆகிய 4 கிரகங்களும் வருட கிரகங்கள். இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால், அவற்றால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகரை பாதிக்கும்.

இவற்றில் குரு பகவான் ஒரு ராசியை கடக்க, தோராயமாக ஒரு வருடம் ஆகும். விருப்பம், ஆசை போன்றவை மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒருவருக்கு அன்றாட தேவைகள் நிறைவேறினால் போதும் என்ற எண்ணம் இருக்கும். இன்னொருவருக்கு வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இன்னும் சிலருக்கு திருமணம் நடைபெறும் காலம், குழந்தை பாக்கியம் பற்றிய சிந்தனை இருக்கும். மனிதர்களின் இந்த விருப்பம், எண்ணம், ஆசைகளை நிறைவு செய்பவர், குரு.

ராகுவும் கேதுவும் ஒரே நேரத்தில் பெயர்ச்சி ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள், அதாவது 18 மாதங்கள் தங்கி, சுப மற்றும் அசுப பலன்களைத் தருவார்கள். நிழல் கிரகங்களான இவர்கள், சனி பகவானின் பிரதிநிதிகள். மனித வாழ்வில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்து சனி பகவானுக்கு அனுப்பி விடுவார்கள்.

சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். ‘முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்மா என்ன?’ என்பதை கேது சுட்டிக் காட்டுவார். ‘முன் ஜென்மத்தில் செய்த கர்மாவிற்கு என்ன பலன்?’ என்பதை ராகு சுட்டிக்காட்டுவார். ராகு-கேதுக்களின் உதவியுடன் ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ற பலனை வழங்குபவரே சனி பகவான். கிரகப் பெயர்ச்சிகளிலேயே, சனிப் பெயர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி, ஜாதக கட்டத்தில் அமர்கின்றன. அந்த அமர்விற்கேற்ப தசைகள் அமைந்து, கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ்வு அமைகிறது. ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால், கோட்சார கிரகங்கள் சம்பவத்தை நடத்தி வைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது. உதாரணமாக ஒருவருக்கு திருமணத் தடை இருந்தால், ஜனன காலத்தில் உள்ள கிரகங்களுக்கு கோச்சார சனி அல்லது குருவும் தனது சாதகமான பார்வை பலத்தை கொடுத்தால் மட்டுமே திருமணத் தடை அகலும். விருப்பம், ஆசை எதுவாக இருந்தாலும் அதை அடையும் பாக்கிய பலன் ஜனன கால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோட்சார கிரகங்கள் அதற்கு உதவும்.

ஒரு கிரகம், கோட்சாரத்தில் ராசி விட்டு ராசி மாறும்போது, அது ஜென்ம ராசிக்கு எந்த இடம் என்பதை பொறுத்து கூறப்படும் ராசி பலனால் 25 சதவீத பலன் மட்டுமே. நடப்பு தசா-புத்திகள், லக்கின ரீதியான விதி பலன்கள் மற்றும் கோட்சார கிரகங்களின் நகர்வுகள் இவை எல்லாமே சேர்ந்த தான் அப்போதைய கோட்சார பலனை முடிவு செய்ய வேண்டும்.

ஒரு தனிநபரின் ஜாதகத்தினை கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சார பலனே துல்லியமாக இருக்கும். தசா புத்திகளுடன் சம்பந்தம் பெறும் கோட்சாரம் சம்பவத்தை 100 சதவீதம் கச்சிதமாக நடத்தி தரும்.

பல்வேறு பிறவிகளில் ஒரு ஆன்மா நிகழ்த்திய நல்வினை, தீவினை சேமிப்பான ‘சஞ்சித கர்மாவின்’ ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்கவே, ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. பிராப்த வினையால் ஏற்படும் இன்பம், துன்பங்களே ஒவ்வொரு ஆன்மாவையும் வந்தடையும். ஒரு கிரகம் சாதகமான இடத்தில் பெயர்ச்சியானால் பிராப்த வினையில் உள்ள நல்வினைப் பலன்கள் மிகுதியாகவும், பாதகமான இடத்தில் பெயர்ந்தால் அதே பிராப்தத்தின் தீவினைப் பலன்கள் மிகுதியாகவும் அந்தந்த ராசியினரை வந்துச் சேரும். அதனால் ஒருவரின் நல்வினை, தீவினைகளே துன்பத்தை தருகின்றன; கிரகங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே சோதனைகளை சாதனைகளாக மாற்ற இஷ்ட, குல தெய்வ வழிபாடு செய்து மகிழுங்கள்.

Post a Comment

You don't have permission to register