Fb. In. Tw. Be.

குரு பகவான் அருளும் திருத்தலங்கள்

தமிழகத்தில் உள்ள குரு பகவான் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற சிறப்பு தலங்களில் சிலவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம்.

குரு பகவான் அருளும் திருத்தலங்கள்நவக்கிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படுபவர், குரு பகவான். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பகவான் இருக்கும் இடத்தை விட அவரது பார்வை பதியும் இடங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் செய்தி.

குரு பெயர்ச்சி நாளன்று உங்களுக்கு அருகில் உள்ள குரு பரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வரலாம். வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். அன்றையதினம் அதிகாலையில் நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து குரு பகவானை வழிபட வேண்டும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை மற்றும் முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் முடிவில் மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையை தானமாக கொடுக்கலாம். அதே போல் கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நைவேத்தியம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வதும் சிறப்பு தரும்.

தமிழகத்தில் உள்ள குரு பகவான் அருள்பாலிக்கும் புகழ்பெற்ற சிறப்பு தலங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

குருவித்துறை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ளது, குருவித்துறை. இங்கு சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் கற்றிருந்தார். இதனால் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையில் இருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர். தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான்.

அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்து, அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர். கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுர லோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

பாடி திருவலிதாயம்

சென்னைக்கு அருகே பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாயநாதர் கோவில் குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது சகோதரரின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

தென்குடி திட்டை

திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ‘வசிஷ்டேஸ்வரர்’ என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் குருபகவான் சன்னிதி இருக்கிறது. இந்த குருவானவர், நின்ற நிலையில் ராஜ குருவாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

திருச்செந்தூர்

குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது திருச்செந்தூர். இது முருகப்பெருமானுக்குரிய ஆறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடாகும். தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, அசுரர்களுடன் போரிடுவதற்காக முருகப்பெருமான், இத்தலம் வந்தார். அப்போது இங்கு வைத்து, தேவர்களின் குருவான பிரகஸ்பதி, அசுரர்களைப் பற்றியும், அவர்களின் குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துரைத்தார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவரது வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

அகரம் கோவிந்தவாடி

காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது கம்மவார்பாளையம். இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே, குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலமாக திகழ்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, ‘வியாக்யான தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

பட்டமங்கலம்

சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், கிழக்கு நோக்கியபடி அனுக்கிரக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. இவரது சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக் கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 – 2 மணி), இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கிலோமீட்டர், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக 90 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புத்தூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பட்டமங்கலம் திருத்தலம் இருக்கிறது.

தக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணத்தில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் தக்கோலம் உள்ளது. இங்கு வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்தபடி குரு பகவான் வீற்றிருக்கிறார். இவர் தன்னுடைய தலையை சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இவரை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் விலகும். 

Post a Comment

You don't have permission to register