Fb. In. Tw. Be.

ஸ்ரீ மணக்குள விநாயகர், பாண்டிச்சேரி

மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும்.  மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது. தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.


600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது. 


இத்துடன் இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்புண்டு. புதுவை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழ்ந்த 41க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லைக்காது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு அவரை தினசரி தரிசனம் செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர். 

தலவரலாறு


ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; ‘மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில் கொண்டதால், ‘மணற்குள விநாயகர்’ எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது ‘ஸ்ரீமணக்குள விநாயகர்’ என்கிறோம்!

கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர்.  அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. 


அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக – ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர்.  பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங் களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். 


இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.


ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் ‘மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.


இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது. 


மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.
மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. 


மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, ‘வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

Post a Comment

You don't have permission to register