04.05.2019 | அக்னி நட்சத்திரம் ஆரம்பம் | Agni Natchathiram

0 54

 சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழைந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் இருப்பார்.

 இந்த சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் பிரவேசித்தவுடன் கோடை காலத்தின் ஆரம்பமாக சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டெரிக்கிறது. அதுவும் மேஷ ராசி செவ்வாயின் வீடாக இருப்பதால் அதன் தாக்கம் அதிகமாகின்றது. செவ்வாய் என்பது நெருப்புக் கோளாகும்.

 இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிகிறது. இந்த அக்னி நட்சத்திர காலமான 26 நாட்களும் தோஷ காலமாக கூறப்படுகிறது,இந்த நாட்களில் எந்த விதமான சுப காரியங்களும் தொடங்க மாட்டார்கள். புதிய பேச்சுவார்த்தைகளும் துவக்க மாட்டார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் இது ‘அக்னி நட்சத்திர தோஷம்’ எனப்படுகிறது.

 26 நாட்களுக்கு பிறகு அக்னி நட்சத்திர தோஷம் விலகுகிறது. அன்றைய தினம் கோயில்களில் விசேஷ வழிபாடுகள், சிறப்பு பூஜைகள் நடக்கும்.

 முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள்,யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன்.

 இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார்.

 அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, “உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார்.

“அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன்.

“உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதகி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார்.

 யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளதாக பிரம்ம தேவர் கூறினார்.

 எனவே, இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்” என்றார்.
“அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்றான் அர்ச்சுனன்.

“நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியை தடுத்துவிடுகிறான்” என்றான்.

 கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், “அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம்.
ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பறாத்தூணியும் அம்புகளும் வேண்டும்.

 ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை” என்றான். உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.

 அப்பொழுது கண்ணன், “அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார்.

 அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான்.

 மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க ‘சரக்கூடு’ ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான்.

 ஒரு கட்டத்தில் நாகர்களைக் காப்பாற்றுவதற்காக இந்திரன் தன் மகனான அர்ஜுனனையே மயக்கம் ஏற்படுத்தும் விதமாக தாக்குகிறான்,இப்போரின் இறுதியாக வசுக்கள், ருத்ரர்கள், காந்தவர்கள், யட்சர்கள், பூஷன், பவன், சாவித்ரி, மருத்துகள் யமன், இந்திரன், ஸ்கந்தன் என அனைத்து வேத தெய்வங்களும் இணைந்து அர்ஜுன-கிருஷ்ணனுக்கு எதிராக காண்டவ வன தகனத்தை எதிர்த்து போரில் இறங்குகிறார்கள். அனைவரையும் கண்ணனின் அருள் கொண்டு, தோற்கடிக்கிறான் அர்ஜுனன்.

 அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான்.

 இந்த காண்டவ வனத்தினை அழித்தே இந்திரபிரஸ்தத்தை நிர்மாணிக்க எண்ணம் கொண்டு அந்த சிந்தனையில் அங்கே அர்ஜுனனும், கிருஷ்ணரும் வந்த போது தன் அக்னி தேவன் தோன்றி இந்த உதவியைக் கேட்டார். எனவே தங்கள் வேலை எளிதானதைக் கண்டு அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.

 இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.

 பரிகாரம் : அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அக்னி ரூபாமாய் இருக்கும் சிவபெருமானையும், தீப்பொறியில் உதித்த முருகனையும், மீனாட்சி அம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

 மேலும் நாளை பிரதோஷம் . ஆகையால் சிவபெருமானை இளநீர் மற்றும் சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தல் நன்மையை தரும்,அக்னி நட்சத்திர காலத்தில் சூரிய பூஜையும், சூரிய நமஸ்காரமும் செய்வது சிறந்தது. குடை, விசிறி, காலணிகள் தானம் செய்யலாம். அத்துடன் அன்னதானமும் ஆடைதானமும் செய்வது நல்லது. தண்ணீர்ப் பந்தல் அமைத்த தண்ணீர், நீர்மோர் போன்றவற்றைத் தருவது நற்பலன் தரும்.

சித்திரை வெயிலிலிருந்துவிடுபட மகாவிஷ்ணுவை சாந்தப்படுத்த வேண்டும். விஷ்ணு நாமத்தை 108 முறை ஜபிக்கலாம். சீதளா தேவி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் நல்லது.

 எல்லோராலும் இயன்ற எளிய வழி, இக்காலத்தில் அகமும் புறமும் தூய்மையுடன் இருப்பதும், பிறர் மனம் குளிரும் வண்ணம் நடப்பதும், இயன்ற அளவில் தருமம் செய்வதும், மனம் உருகி இறைவனை வழிபடுவதும், கடவுள் அருள் மழையில் நம்மை நனைக்கும் என்பது நிச்சயம் இறைவன் கருணை மழையில் நனைந்து விட்டால் கத்திரி வெயிலும் நம்மை வாட்டாது குளிரும், வாழ்வும் மலரும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.