Fb. In. Tw. Be.

108 லிங்க சிவாலயம்

கோயிலுக்குப் போனால், மூலஸ்தானத்தில் ஒரு சிவலிங்கத்தையோ, பிரகாரத்தில் பரிவார மூர்த்திகளாக மேலும் சில லிங்கங்களையோ தான் தரிசித்திருப்பீர்கள்.

ஆனால், ஒரே கோயிலில் 108 லிங்கங்கள், மூலவர்களாக அருள்பாலிக்கும் அற்புத தலத்தை தரிசித்திருக்கிறீர்களா?

தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சென்றால் இந்த தரிசனம் பெறலாம். சிவராத்திரி திருவிழா இங்கு விசேஷமாக நடக்கும்.

*தல வரலாறு* :

இலங்கையில் சீதையை மீட்ட, ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து, அயோத்தி திரும்பினார்.

ஆனாலும், ராவணனின் சகோதரர்கள் கரண், தூஷணன் ஆகியோரைக் கொன்ற தோஷம், தங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தார். தோஷம் நீங்க 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார்.

அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால் “ராமலிங்கசுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது.

அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் “அனுமந்தலிங்கம்’ என்ற பெயரில் உள்ளது. இங்குள்ள அம்பிகைக்கும் பர்வதவர்த்தினி என்று பெயர்.

*சிவன் எதிரே பசு* : சிவசன்னதி எதிரே நந்தி மட்டுமே இருப்பது வாடிக்கை. இங்கு நந்தியுடன் காமதேனு பசுவும் இருக்கிறது.

இதற்கு அகத்தியரே பிரதோஷ பூஜை செய்ததாக தல வரலாறு கூறுகிறது.

மேற்கு நோக்கிய கோயில்களில் வேண்டுதல் வைத்தால் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதுவும் மேற்கு நோக்கிய கோயிலே ஆகும்.

108 லிங்கங்களும் மேற்கு நோக்கியே உள்ளன. ராமலிங்க சுவாமி சன்னதிக்கு வலப்புறமுள்ள மண்டபம் போன்ற அமைப்பிலுள்ள சன்னதியில் 3 வரிசையில் 106 லிங்கங்கள் உள்ளன.

*அனுமந்த லிங்கம் சன்னதி,* கோயிலுக்கு வெளியே உள்ளது. பக்தர்கள் மூலஸ்தான லிங்கம் தவிர, மற்ற 107 லிங்கங்களுக்கும் தாங்களே பூ தூவி வணங்கலாம். பிரதோஷத்தன்று மதியம் 107 லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடக்கும்.

*சிவராத்திரி சிறப்பு* : ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றலாம்.

சிவராத்திரியன்று 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி நான்கு கால பூஜை நடக்கும். ராமலிங்க சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்வர்.

அன்று இரவில் பக்தர்கள் கோயிலை 108 முறை சுற்றி வருவர். ஐப்பசி பவுர்ணமியன்று 108 லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும்.

*அனுமன், சுக்ரீவன்* : ராமபிரானின் பாவம் நீங்கப்பெற்றதால் இத்தலத்திற்கு “பாபநாசம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

கீழ்ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. கோயில் முகப்பில் சூரிய தீர்த்தம் உள்ளது. அறியாமல் செய்த பாவம், பிதுர்தோஷம் நீங்க சுவாமிக்கு தேன், பால் அபிஷேகம் செய்யலாம். மார்கழி திருவாதிரையன்று நடராஜர் புறப்பாடு உண்டு.

ராமர், லட்சுணர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் சிவலிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பமும் இங்கு உள்ளது. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் வணங்கியபடி நிற்கும் சிலைகள் உள்ளன.

பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர். மேலும், காசி விசாலாட்சி, அன்னபூரணி ஆகியோர் ஒரு சன்னதியிலும், காலபைரவர், சனீஸ்வரர், சூரியபகவான் ஆகியோர் இணைந்து மற்றொரு சன்னதியிலும் உள்ளனர்.

எதிர்மறை கிரகங்களான சூரியனும், சனியும் இணைந்திருப்பதால் சனிதோஷம் உள்ளவர்கள் இந்த சன்னதியை வழிபட்டு பைரவர் அருளால் நலம் பெறலாம்.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 25 கி.மீ., தூரத்தில் பாபநாசம் உள்ளது. பஸ் ஸ்டாப் அருகில் கோயில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., தூரம் மட்டுமே.

Post a Comment

You don't have permission to register