நாளை ஆடி அமாவாசை – முன்னோர்களை வழிபடுவது ஏன்?

0 1,826

ஆடி அமாவாசை முன்னோர்களை வழிபடுவது ஏன்?

 நாளை ஆடி அமாவாசை

திதிகளில் சிறப்பானதாக அமாவாசை திதி போற்றப்படுகிறது. அமாவாசை – சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் அடையும். ஆனால், அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால், சிறப்பான பலனைத் தரும். மேலும் மூதாதையர்களின் ஆசியும் கிடைக்கும்.

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த திதி

அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

 தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மைப் பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர். கருடப் புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.

பித்ரு தோஷம் என்றால் என்ன?

முன்னோர்களின் வருத்தத்தாலும், சாபத்தாலும் ஏற்படுவது பித்ரு தோஷம். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம் என்பதை அறியலாம். மேலும் ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும். லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5-ம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம்.

பித்ரு வழிபாட்டின் அவசியம்…

 பூமியில் பிறந்தவர்கள் யாருமே பாவ புண்ணியத்திலிருந்து தப்ப முடியாது. பாவங்களில் மகா பாவமாக சொல்லப்படுவது, நம்மைப் பெற்றவர்களையும் நம்முடைய முன்னோர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனிக்காமல் இருப்பதுதான். அவர்கள் உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் இருப்பது மகா பாவம் என்றால், அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து, பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது மகா மகா பாவம் ஆகும்.

இத்தகைய பாவங்களுக்கு ஆளாகும் அன்பர்கள், பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய சந்ததியினரும் பல வகையான துன்பங்களை அடைகின்றனர். எனவே, நம் முன்னோர்களுக்கு வருடாந்திர சிராத்தம் செய்வதுடன், ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

 முன்னோர்களை வழிபடுவது எப்படி?

அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், யமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து, மறைந்த முன்னோர்களின் படத்தைச் சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளைப் படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

காகத்துக்கு சாதம் படைப்பது ஏன்?

அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.

துயர் போக்கும் துளசி

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.