அக்கா – தங்கையான தையல் நாயகி அம்மன்!

160

அக்கா – தங்கையான தையல் நாயகி அம்மன்!

பொய் பேசாத மக்கள் வாழும் ஊர் என்பதால் பொய்யாத நல்லூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஊரில் வீற்றிருப்பவள் தான் தையல்நாயகி அம்மன்.

அரியலூர் மாவட்டம், பொய்யாத நல்லூர் பகுதியில் அமைந்துள்ள கோயில் தான் தையல்நாயகி அம்மன். இந்த கோயிலில் அம்மனுக்கு அருகிலேயே வைத்தீஸ்வரன் குதிரை வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும், சாமுண்டீஸ்வரர், காமாட்சியம்மன், பொன்னியம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்களும் இந்த கோயிலில் காணப்படுகின்றன. கோயில் சன்னதிக்கு மிகப்பெரிய குதிரை சிலையும் இருக்கிறது.

மருதையன், வீரமுத்தையா ஆகிய ஏவல் தெய்வங்களுக்கும் தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அக்கா, தங்கை என்று சகோதரிகள் இருவரும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து நடந்தே வந்தனர். ரொம்ப தூரம் நடந்து வந்த அசதியில் அக்கா கரிசல் மண் பகுதியிலேயே அயர்ந்து தூங்கிவிட்டாள். தங்கை மட்டும் விடிய விடிய நடந்து வந்து வளமான நஞ்சை மண் இருக்கும் பகுதியை அடைந்தாள்.

ஆனால், அதன் பிறகு தனது அக்கா தன்னுடன் இல்லை என்பதை அறிந்து அக்கா என்று அழைத்தாள். அவளோ, எனக்கு இந்த கரிசல் மண் பிடித்துவிட்டது. நான் இங்கேயே கோயில் கொள்கிறேன் என்று சொல்ல்விட்டாள்.

அக்காவான மூத்த தையல்நாயகி கோயில் கொண்ட இடம் தான் பொய்யாத நல்லூர். வேறு வழியின்றி தங்கை நஞ்சை நிலமான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்தாள். அப்போது, அக்கா, உன் விருப்பம் போல் நீ இங்கேயே தங்கிக் கொள். ஆனால், எனது ஊரில் மக்கள் எனக்கு திருவிழா கொண்டாடும் போது நீயும் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

வைத்தீஸ்வரன் கோயிலில் திருவிழா நடைபெறும் போது தையல்நாயகி அம்மனை மக்கள் தோளில் சுமந்து சென்று சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அதன் பின்னர் திரும்புவர். உண்மையில், இந்த இரு தையல் நாயகிகளும் அக்கா – தங்கை என்பது பலரும் அறியாத ஒன்றாக கூறப்படுகிறது.

தையல்நாயகி அம்மனை வழிபாடு செய்தால், சொத்துப் பிரச்சனை தீரும், நோய்கள் குணமாகும், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.