அதிதீஸ்வரர் கோயில்!

194

அதிதீஸ்வரர் கோயில்!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி என்ற பகுதியில் உள்ளது அதிதீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் அதிதீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மேலும், தாயார் பெரியநாயகி, பிரகன் நாயகி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்: எப்போதும் கல்வியில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். பேச்சுத்திறமை மிக்கவர்களாகவும், பல இடங்களை சுற்றிப் பார்க்கவும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் தன்மை இவர்களிடம் கிடையாது. மற்றவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. எப்போதும் நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் பற்றி பேசும் குணம் கொண்டவர்கள்.

தலச்சிறப்பு:

இந்தக் கோயில் பல்லவ பேரர்சர்களால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் 3 நிலை மேற்கு ராஜகோபுரம், 5 நிலை கிழக்கு ராஜகோபுரம் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

தல பெருமை:

மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபடுவதன் மூலம் கிழக்கு பார்த்த ஆயிரம் கோயிலை வழிபட்டதற்குரிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பெரியநாயகி அம்மன் தெற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். ராமபிரான் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

காச்ய முனிவரின் தர்ம பத்தினியான அதிதி புனர்பூசம் நட்சத்திர நாளில் இத்தலத்தில் விரமிருந்து தேவர்களைப் பெற்றாள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகவே, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி சென்று வர வேண்டிய கோயில். அப்படியில்லை என்றால், புனர்பூசம் நட்சத்திரத்தன்று இந்தக் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

ஒவ்வொரு மாதமும் புனர்பூசம் நட்சத்திர நாளின் போது வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும். புதுவீடு, வாடகை வீட்டிற்கு பால் காய்ச்சுதல் ஆகிய நிகழ்ச்சிகளை இந்த நட்சத்திர நாளில் செய்தால் விருத்தியடையும்.

இந்தக் கோயிலில் வாணி (சரஸ்வதி) வழிபட்டு இறைவனின் அருள் பெற்றதால், குழந்தைகள் பள்ளியில் சேர்வதற்கு முன்னரோ அல்லது பள்ளி மாணவர்களோ தேர்வு எழுதும் முன்பு இந்தக் கோயிலுக்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். ஆசிரியர்கள் தங்களது தொழிலை துவங்குவதற்கு முன்னதாக இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு.

ஹோட்டல் தொழில் செய்பவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதன் மூலமாக தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

உலத்தில் உள்ள உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன் என்று பிரம்மா, சரஸ்வதியிடம் கூறினார். மேலும், ஆகையால் தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எனது பெயரை முதலில் குறிப்பிட்டு கூறுகிறார்கள் என்றார். இதைக்கேட்ட சரஸ்வதி தேவி சிரிக்கவே, ஆத்திரமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார்.

இதையடுத்து, மனம் வருந்திய வாணி, பூலோகம் வந்து சிருங்கேரி என்ற பகுதியில் கடும் தவம் புரிந்தாள். தனது மனைவியான வாணியை பிரிந்த பிரம்ம தேவரோ, தேவர்களை திருப்திபடுத்தி யாகம் செய்து தனது மனைவி வாணி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனை தங்களால் பெற முடியாது என்று தேவர்கள் கூறி விட்டனர்.

பல இடங்களில் தேடி பின்னர் சிருங்கேரியில் சரஸ்வதியை கண்டுபிடித்தார். மேலும் மனைவியை சமரசம் செய்து தன்னோடு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் உள்ள பாலாற்றின் வடகரையில் உள்ள சிவன் கோயிலில் தங்கினார். தங்களது தலத்தில் தங்கிய வாணியைக் கண்டு மனமகிழ்ந்த சிவன் மற்றும் பார்வதி ஆகிய இருவரும் வாணிக்கு அருள் புரிந்து அவளைப் பாடும்படி கூறினர். பிரம்மாவால் ஏற்பட்ட சாபம் நீங்கி வாணியோ பேசும் சக்தி பெற்று தனது இனிமையான குரலில் பாடினாள். கலைவாணி (வாணி – சரஸ்வதி) பாடிய தலம் என்பதால், இந்த ஊர் வாணியம்பாடி என்றானது.

சிறப்பம்சம்:

இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி யோக பட்டை சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். புனர்பூசம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபடுகின்றனர். கல்வியில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். மகா சிவராத்திரி, திருவாதிர, சித்திரை பிரமோற்சவம் ஆகிய நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.