அநீதிகளை அழிக்கும் கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன்!

227

அநீதிகளை அழிக்கும் கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன்!

குற்றவாளிகளை நீதிமன்றம் தண்டிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பா தப்பு செய்தவர்களை கொல்லங்குடியில் வீற்றியிருக்கும் வெட்டுடைய காளியம்மன் (வெட்டுடையார் காளியம்மன், வெட்டுடையார், வெட்டுடைய காளி) தண்டிப்பாள் என்பது நம்பிக்கை.

நீதி, நேர்மை என்று இருப்பவர் சனீஸ்வரன் தான். ஆனால், இவரோ, கிரக நிலைகளை வைத்து தான் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பார். ஏழரை ஆண்டுகள் ஒரு ஜாகத்தில் இருந்து கொண்டு அவருக்கு சோதனை மேல் சோதனை கொடுத்து, கஷ்டம் மேல் கஷ்டம் கொடுத்து ஜாதகக்காரரை பக்குவப்படுத்துவார். அவர் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப அவருக்கு தண்டனை கொடுப்பார். இவரைத் தொடர்ந்து கொல்லங்குடியில் வீற்றியிருக்கும் வெட்டுடைய காளியம்மன் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதில், சனி பகவானை மிஞ்சிவிடுவார் போல. இவரது பார்வையில் தப்பு செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது.

உலகில் எப்போதெல்லாம் அநீதி தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் அன்னை பராசக்தி அவதரித்து நீதி வழங்குவாள் என்பது நம்பிக்கை. அப்படி தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் மகா சக்தியாக சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் வெட்டுடைய காளியம்மன் வீற்றியிருக்கிறாள்.

வெட்டுடையார் காளியம்மன் வரலாறு:

கொல்லங்குடியில் வசித்து வந்த ஒரு பக்தரின் கனவில் அய்யனார் தோன்றியுள்ளார். அவர், ஒரு ஈச்சமரக்காட்டில் தனது சிலை ஒன்று இருப்பதாக உணர்த்தினார். இதையடுத்து, பக்தனோ அய்யனார் சொன்ன இடத்தில் தோண்டினார். அப்போது, கோடரி வெட்டுபட்டு சிலை ஒன்று கிடைத்துள்ளது. வெட்டுபட்டு இருந்ததைத் தொடர்ந்து அந்த சிலைக்கு வெட்டுடைய அய்யனார் என்று பெயரிட்டு வழிபட்டனர்.

வெட்டுடைய அய்யனாரை கருப்பவேளார், காரிவேளார் என்று பூஜித்து வந்தனர். ஒருநாள் வெட்டுடைய அய்யனா சன்னதிக்கு அருகில் ஈச்சமரத்தடியில் ஒரு ஒளி மின்னியதை அனைவரும் கண்டுள்ளனர்.

அடுத்த நாள் காலையில், அங்கு அம்பிகையின் யந்திரம் ஒன்று இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து யந்திரம் இருந்த இடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிஷ்டை செய்தனர். வெட்டுடைய அய்யனார் பேரிலேயே அம்பிகைக்கு வெட்டுடையார் காளி என்று பெயர் வந்தது. காளி கோயில் புகழ் பெறவே நாளடைவில் வெட்டுடையார் காளியம்மன் பெயரிலேயே கொல்லங்குடி அழைக்கப்படுகிறது. அதுவும் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது.

வெட்டுடையார் காளியம்மன்:

சிவகங்கையை ஆண்ட மன்னர் முத்து வடுகநாதர், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, அவர்களால் கொல்லப்பட்டார். இதையடுத்து, முத்து வடுகநாதர் தேவரின் மனைவியான வேலு நாச்சியார், அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரை தேடிச் சென்ற ஆங்கிலேயர்கள், செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் பெண் ஒருத்தியிடம், தகவல் கேட்டுள்ளனர். ஆனால், அவளோ தகவல் தர மறுப்பு தெரிவிக்கவே, அவளது சிரத்தை வெட்டி எறிந்து அவளையும் கொன்று குவித்தனர்.

இதையறிந்த வேலு நாச்சியார், அப்பெண்ணிற்கு வீரக்கல் நட்டு வைத்து வழிபட்டாள். மேலும், அப்பெண்ணிற்கு தனது தாலியை முதல் காணிக்கையாக செலுத்தி வழிபட்டாள். அந்த பெண்ணே வெட்டுடையார் காளியாக உருவெடுத்தாள் என்று பலரும் கூறுவதாக சொல்லப்படுகிறது.

வெட்டுடையார் காளியம்மன் தனது 8 கைகளுடனும், வலது காலை மடக்கி வைத்து இடது காலை அரக்கன் மீது ஊன்றியவாறு காட்சியளிக்கிறாள். பெண்கள் தங்களது பிரச்சனைகளை சொல்லி முறையிட்டால் உடனே அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

நீதி வழங்கும் வெட்டுடையார் காளியம்மன்:

பொதுவாக ஒரு சிலரது பேச்சு வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டுனு தான் பேசுவார்கள். இது பழமொழியும் கூட. இந்த பழமொழிக்கு ஏற்ப இந்தக் கோயிலில் காளியம்மன், தப்பு செய்தவர்கள், செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை அளிக்கிறாள். இந்தக் கோயிலில் காசு வெட்டி போடும் பழக்கமும் இருக்கிறது. சரியான நோக்கத்திற்காக முறையிடுவோரின் கோரிக்கையானது நியாயமாக இருந்தால், வெட்டுடையார் காளியிடம் முறையிட்டால் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தப்பு செய்தவர்கள், செய்பவர்களை தண்டிப்பதோடு, தன்னை வேண்டி வரும் பக்தர்களையும் காத்தருள்கிறாள். மேலும், பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறவும் வெட்டுடைய காளியம்மன் அருள் புரிகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்:

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலானது, சிவகங்கை மாவட்டம் மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் காளையார் கோயில் அருகில் உள்ளது.