ஆடி 2ஆவது வெள்ளி: அங்காள பரமேஸ்வரி வழிபாடு!

193

ஆடி 2ஆவது வெள்ளி: அங்காள பரமேஸ்வரி வழிபாடு!

பொதுவாக ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் தான். செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுமே மங்களகரமான நாட்கள். அதிலேயும், ஆடி மாதம் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுமே இன்னும் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், தீமிதித்தல் என்று அனைத்தும் அம்மன் கோயி ல்களில் திருவிழாவாக இருக்கும்.

பொதுவாக ஒரு மாசத்த்தில் 4 வெள்ளிக்கிழமைகள் வரும். சில மாதங்களில் 5 வெள்ளி கூட வரும். இந்த மாதத்தில் 4 வெள்ளி மட்டுமே. ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விஷேசமானது. ஆடி முதல் வெள்ளி சொர்ணாம்பிகைக்கும், 2ஆவது வெள்ளி அங்காள பரமேஸ்வரிக்கும், 3ஆவது வெள்ளி அன்னை காளிகாம்பாளுக்கும், 4ஆவது வெள்ளி காமாட்சி அம்மனுக்கும் உகந்த நாள். இதுவே 5ஆவது வெள்ளியாக இருந்தால், அது வரலட்சுமிக்கு உகந்த நாள்.

இப்படி விஷேசமான ஆடி மாதத்தில் அம்மனை நினைத்து வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சரி, ஆடி 2ஆவது வெள்ளியான இன்று நாம், மேல்மலையனூரில் குடி கொண்டுள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் வரலாறு பற்று பார்ப்போம்… விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

தல வரலாறு:

தன் மகளான தாட்சாயினையை தட்சன் சிவபெருமானுக்கு மணமுடித்துக் கொடுத்தார். அதன் பிறகு ஒரு நாள் சிவனைப் பார்க்க கைலாய மலைக்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த தட்சன் யாகம் நடத்தினார். தனது தந்தையின் ஆணவத்தையும், கர்வத்தையும் போக்க நினைத்த தாட்சாயினி, அகோர உருவம் கொண்டு தனது தந்தை நடத்திய யாகத்தை அழித்ததோடு தந்தையையும் அழித்தாள். அதோடு, அதே யாகத்தில் விழுந்து தனது உடலையும் அழித்துக் கொண்டாள். அப்படி உருவமே இல்லாமல் நின்ற அம்சமே அங்காளி சக்தி.

இதையறிந்து கோபம் கொண்ட சிவபெருமான், உருவமற்று இருந்த அங்காளியை தனது தோளில் சுமந்து ஆங்காரமாக நடனம் ஆடினார். கோபத்தின் உச்சிக்கு சென்ற நடனம் ஆடியதில், அங்காளியின் ஒரு கை துண்டாகி கீழே விழுந்தது. அங்காளியின் கை கீழே விழுந்த இடம் தான் தண்டகாருண்யம். தாட்சாயினி யாகத்தில் விழுந்து எரிந்து சாம்பலானதால், அங்காள பரமேஸ்வரி கோயில் பிரசாதமாக சாம்பலைத்தான் தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்காள பரமேஸ்வரி தல பெருமை:

ஆதிபராசக்தியின் அம்சமாக விளங்க அங்காள பரமேஸ்வரி, பர்வதராஜனுக்கு மகளாக பிறந்தார். அப்படி பிறந்தவர் தான் பார்வதி. அதன் பிறகு சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு கயிலாய மலைக்கு சென்றார். அப்போதெல்லாம், சிவன் மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்குமே 5 தலை தான் இருந்துள்ளது. சிவனைப் பார்ப்பதற்காக கயிலாய மலைக்கு வந்த பிரம்ம தேவனைப் பார்த்து, குழப்ப நிலையிலிருந்த பார்வதி தேவி, தனது கணவர் தான் வந்துவிட்டார் என்று கருதி பிரம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

அதன் பிறகு வந்தது பிரம்மா என்பதை உணர்ந்து அதற்கு மிகவும் வருந்தினார். இதையடுத்து பிரம்மாவின் ஒரு தலையை எடுத்துவிடும்படி பார்வதி தேவி கூறவே, சிவனும், பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால், ஆத்திரமடைந்த பிரம்மாவோ, சிவனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்படும் என்று சாபம் விட்டார். பிரமமவின் ஒரு தலையானது, சிவனின் கையில் திருவோடாக வந்து பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. சிவனின், இந்த தோஷத்தை நீக்கவே, இந்த கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவும் அன்னை பராசக்தி சுயம்புவாக புற்று வடிவத்தில் அங்காள பரமேஸ்வரியாக மேல்மலையனூரில் அவதாரம் எடுத்தார்.

பிரம்மாவின் ஒரு தலை கிள்ளி எறியப்பட்டதை அறிந்த அவரது மனைவி சரஸ்வதி, தனது கணவரின் அகோர உருவத்திற்கு காரணமாக பார்வதி நீயும் அகோரமாக போவாய் என்று சாபமிட்டார். சரஸ்வதியின் இந்த சாபத்தின் பலனாக மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காள பரமேஸ்வரியாக அமர்ந்தாள்.

அதன் பின் திருவண்ணாமலைக்கு சென்று பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாப விமோட்சனம் பெற்று மீண்டும் மேல்மலையனூர் வந்து தங்கினார். ஆனால், அப்போது அவர் மூதாட்டியின் வடிவம் பெற்றிருந்தார். இதையடுத்து மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காள பரமேஸ்வரிக்கு கோயில் கட்டி வழிபட்டனர்.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான பிரச்சனை நீங்க இங்கு வந்து அங்காள பரமேஸ்வரியை வழிபட்டு சென்றால், பிரச்ச்னை தீரும் என்பது ஐதீகம்.