ஆதி துலுக்காணத்தம்மன் கோயில்!

48

ஆதி துலுக்காணத்தம்மன் கோயில்!

சென்னை மாவட்டம் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கோயில் தான் ஆதி துலுக்காணத்தம்மன் கோயில். இந்தக் கோயிலில் ஆதி துலுக்காணத்தம்மன் மூலவராக காட்சி தருகிறாள். மேலும், அம்மனின் சிரசு (தலை) ஓடையில் கண்டெடுக்கப்பட்டது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், ஐயப்பன், பைரவர், சப்த கன்னியர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் இந்தக் கோயிலில் அம்மனை வேண்டிக் கொள்கின்றனர்.

தல பெருமை:

இந்தக் கோயிலில் உள்ள அம்மன் உக்கிரத்துடன் சிரசு மட்டுமே கொண்ட ஆதி துலுக்காணத்தம்மன். அதன் பிறகு நாளடைவில் அம்மனின் முழு திருவுருவத்தையும் பிரதிஷ்டைச் செய்து வழிபட தொடங்கியுள்ளனர். கோயில் பிரகாரத்தில் விநாயகர், ஐயப்பன், பைரவர், சப்த கன்னியர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. சங்கட சதுர்த்தி நாளில் விநாயகருக்கு பூஜை, அஷ்டமி நாளில் பைரவருக்கு சிறப்பு பூஜை, ஐயப்பனுக்கு பஜனை என்று எப்போதும் கோயிலில் விசேஷம் தான்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அதுவும், ஆடி 3ஆவது வெள்ளியன்று விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது தினந்தோறும் இந்தக் கோயிலில் அம்மன் வீதி உலா வருகிறது. அதன் பிறகு அம்மனுக்கு படையல் போட்டு, அன்னதானம் நடைபெறும். இதனை உட்கொண்டால் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் 4ஆவது ஞாயிற்றுக்கிழமை நாளில் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது தங்களது மனக்குறையை சொல்லி வழிபட வாழ்வில், நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க அருள் புரிவாள் துலுக்காணத்தம்மன்.

தல வரலாறு:

தனது மகனுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்று ஒரு இஸ்லாமிய பெண்மணி அம்மனிடம் வேண்டினாள். அவளது பிரார்த்தனையை ஏற்ற அம்மன், அந்தப் பெண்மணியின் மகனுக்கு பார்வை கிடைக்க அருள் புரிந்தாள். அன்று முதல் அம்மனின் திருநாமம் ஆதி துலுக்காணத்தம்மன் என்று அமைந்ததாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஒரு ஓடை இருந்த தாக கூறப்படுகிறது.

அந்த ஓடையிலிருந்து ஒரு நாள் அம்மனின் சிரசு (தலை) மட்டும் கண்டெடுக்கப்பட்டு அதை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அண்ணாசாமி என்பவரால் பனை ஓலைக் கொண்டு இந்தக் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அம்மனுக்கு கட்டடமாக கோயில் எழுப்பபட்டது.