ஆரோக்கிய வாழ்வு தரும் திருமேனி அழகேஸ்வரர் கோவில்

263

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமேனி அழகேஸ்வரர் ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

கோவில் தோற்றம், திருமேனி அழகேஸ்வரர்கர்நாடக தேசத்தை வல்லபராஜா என்ற மன்னன் ஆண்டு வந்த நேரம் அது. குழந்தை இல்லையே எனத் தவித்த அந்த மன்னனுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறப்பிலேயே ஊமையாகவும், முடமாகவும் இருந்ததால், மன்னனின் வேதனை அதிகரித்தது. குழந்தை வளர்ந்து சிறுவனானதும், அவனுக்கு குஷ்டரோக நோய் பற்றியது. நாளாக ஆக அந்த நோயின் வீரியம் அதிகமாகியது.

சிறுவனின் உருவம் மாறியது. பார்க்கவே அருவருப்பான நிலையை அடைந்தான் அந்தச் சிறுவன். மகனின் ஊனத்தால் மன வேதனையில் இருந்த மன்னன், இப்போது மீளாத் துயரில் ஆழ்ந்தான். ஒரு காவலாளியை அழைத்த மன்னன், தன் மகனை தண்டகாவனத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி பணித்தான். காவலாளியும் மன்னன் கூற்றுப்படி அந்தச் சிறுவனை தண்டகாவனத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு திரும்பினான்.

வனத்தில் விடப்பட்ட சிறுவன் அங்கிருந்து நடந்தபடியே மதங்காசிரமம் என்னும் மணிக்கிராமம் பகுதிக்கு வந்தான். அங்கு அருள்பாலிக்கும் அழகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கினான். அங்கேயே தங்கினான். கோவில் பூஜைக்காக வரும் அர்ச்சகர், அந்தச் சிறுவனை தினமும் கண்டு வந்தார். ஒரு நாள் இறைவனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அச்சிறுவனுக்குக் கொடுத்து அருந்த செய்தார். தினசரி அச்சிறுவன் அபிஷேக தீர்த்தத்தை அருந்த அவன் நோய் மெல்ல மெல்ல குணமாகத் தொடங்கியது. அவனது உருவம் மாறத் தொடங்கியது. பேசத் தொடங்கினான். முட நோய் நீங்கியது. கண்டவர் வியக்கும் மன்மதனாக மாறினான்.

தனக்கு பேரழகைக் கொடுத்த திருமேனி அழகேஸ்வரரை வணங்கி நின்றான். பின்னர் அவன் தன் நாட்டிற்குத் திரும்பி பெற்றோருடன் இணைந்தான் என்பது செவி வழித் தல வரலாறு.

இந்த திருமேனி அழகேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பைத் தாண்டியதும் நீண்ட பிரகாரம். நடுவே பலிபீடம் இருக்க, அடுத்து நந்தி பகவான் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் அன்னை சவுந்திர நாயகி நின்ற கோலத்தில் இளநகை தவழ அருள் பாலிக்கிறாள். இங்கு அன்னையின் திருமேனி கருவறைப் பக்கம் சற்றே திரும்பியபடி அமைந்துள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் அன்னை பத்மத்தையும், அட்ச மாலையையும் சுமந்து நிற்க, கீழே உள்ள வலது கரம் அபய ஹஸ்த முத்திரையுடன் காணப்படுகிறது. அன்னையின் இடது கரம் இடையில் பதிந்துள்ளது.

அடுத்துள்ள கருவறையில் இறைவன் திருமேனி அழகேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் கீழ் திசையில் நாகர், விநாயகர், சிவலிங்கம் திருமேனிகள் உள்ளன. தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி அருள்புரிகிறார். திருச்சுற்றில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டிகேசுவரர், மகாலட்சுமி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

கிழக்குப் பிரகாரத்தில் நவக்கிரக நாயகர்களின் சன்னிதி உள்ளது. இங்கு நவக்கிரக நாயகர்கள் இரண்டு சூரியனுடன் வரிசையாக இருந்து அருள்பாலிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. கிழக்கு பிரகாரத்தில் உள்ள துர்க்கை மேற்கு திசை நோக்கி அருள்பாலிப்பதும் இங்கு சிறப்பான அமைப்புதான். ஆலயத்தின் தல விருட்சம் பன்னீர் மரம். தீர்த்தம் ஆலயத்தின் தெற்கே உள்ள வேட்டை குளம்.

தன்வந்திரி பகவான், மருத்துவத்துக்கு அதிபதி. தன்வந்திரியாக அவதரித்த மகாவிஷ்ணு இத்தல இறைவனை ஆராதித்து பேறு பெற்றாராம். எனவே இத்தல இறைவனை ஆராதிப்பதால் தீராத வியாதிகள் தீரும் என்கின்றனர் பக்தர்கள். ஒரு சமயம் சமயக் குரவரான திருநாவுக்கரசர், மணிக்கிராமம் வழியே சாயாவனம் சென்றார். சாயாவனம் சென்றதும், அவரோடு வந்த பக்தர்கள் வரும் வழியில் உள்ள தொன்மை வாய்ந்த மணிக்கிராமம் ஆலயத்தை பார்க்கவில்லையே எனக்கூற அவர் அங்கிருந்தபடியே இத்தல இறைவனை பாடியுள்ளார். இத்தல இறைவனை வழிபாடு செய்வதன் மூலம், முன்னோர்கள் செய்த பாவம் நம்மை அண்டாது என்கின்றனர் பக்தர்கள்.

இந்த ஆலயத்தில் நவராத்திரி, சிவராத்திரி, சோமவார தினங்களில் இறைவன் இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கார்த்திகை மாதம் மூன்றாவது வியாழக்கிழமை ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. இங்கு குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அன்னையின் சன்னிதியில் தரப்படும் ஐந்து மஞ்சள் பலகைகளை தேய்த்து குளித்து வர, அவர்கள் பலன் காண்பது உறுதி என்கிறார்கள்.

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தினசரி ஒரு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி – திருவெண்காடு – பூம்புகார் பேருந்து தடத்தில், சீர்காழியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது மணிக்கிராமம். இங்கு செல்வதற்கு பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.