இன்பத்தை வாரி வழங்கும் இங்கிலாந்து துர்க்கை அம்மன் கோவில்

263

இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் மாநகரின் ஒரு பகுதி ஈலிங். இங்கே கனகதுர்க்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

துர்க்கை அம்மன், கோவில் முகப்புத் தோற்றம்இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன் மாநகரின் ஒரு பகுதி ஈலிங். இங்கே கனகதுர்க்கை அம்மன் கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தை ‘ஈலிங் அம்மன் கோவில்’ என்றே அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தை தமிழா்கள், குறிப்பாக ஈழத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கி வழிபட்டு வருகின்றனர்.

இந்த ஆலயத்தை சென்னை காளிகாம்பாள் ஆலயத்தின் தலைமை குருக்கள் சாம்பமூர்த்தி என்பவர், இங்கு வந்து அம்பாளின் திருவுருவப் படத்தை வைத்து, திருவிளக்கு பூஜை செய்து ஆலயம் அமைக்க வழிகாட்டியதாக கூறப்படுகிறது.

லண்டன் மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாப்பல் வீதியில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் அடையாளமாக சிறிய கோபுரம் நிறுவப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விழாக்கள் நடக்கும் மண்டபம். அவற்றின் சுவர்களில் கணபதி, சிவ குடும்பம், முருகன் திருமண வைபவம் போன்ற புராணச் சிற்பங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

அதனுள் நுழைந்து சென்றால் தெய் வீகம் ஒளிவிடும் திருக்கோவில் கண்முன்னே தோன்ற, நாம் தமிழகத்துக்கு வந்து விட்டோமா என்ற பிரமிப்பை ஏற் படுத்துகிறது. கொடிமரம், பலிபீடம், அம்பிகையை நோக்கிய சிம்ம வாகனம் இருக்கின்றன.

வண்ணங்களில் மின்னும் சிற்பங்களுடன் கூடிய விமானம் உள்ளது. துவாரபாலகிகள் இருபுறமும் நிற்க கரு வறைக்குள் கிழக்கு நோக்கியபடி கனக துர்க்கை அம்மன், மகிஷனின் தலை மீது நின்ற கோலத்தில் இளநகை பூக்க காட்சி தருகிறாள். மேல் இருகரங்களிலும் சங்கு, சக்கரத்துடனும், கீழ் இடக்கரத்தை இடையில் வைத்தும் வலக்கரத்தை அபய ஹஸ்தமாகவும் காட்டி வசீ கரிக்கிறாள். திரிசூலம் ஏந்திய இந்த விஷ்ணு துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள் என்று கூறுகிறார்கள்.

ஆலய திருச்சுற்றின் கன்னி மூலையில் மூஷிக வாகனத்துடன் மகாகணபதி சிறுகோவிலில் திரு வருள் புரிகிறார். அவர் பக்கத்தில் நந்தி முன்னிற்க லிங்கத் திருமேனியுடன் சுந்தரேசரும், மீனாட்சி அம்மனும் கோவில் கொண்டுள்ளனர். லட்சுமி சமேத நாராயணர் அடுத்த சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். வள்ளி- தெய்வானை இருவரும் இருபுறம் இருக்க, முருகப்பெருமான் வேல் ஏந்தி நின்ற கோலத்தில் திருக்காட்சி நல்குகிறார். இங்கே ருக்மணி சமேத கிருஷ்ணர், ஆஞ்சநேயர் தனித்தனி சன்னிதிகளில் அருள் பொழிகின்றனர்.

தெற்கு பிரகாரத்தில் குருவாயூரப்பன், சிவகாமி சமேத நடராசர், சபரிமலை ஐயப்பன், தேவாரம் பாடிய நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தெற்கு நோக்கியபடி ஆலமரச் செல்வனாக தட்சிணாமூர்த்தி, மேல் இரு கைகளில் உடுக்கையும், அக்னியும் ஏந்தியிருக்கிறார். கீழ் இடது கரத்தில் சுவடி ஏந்தியும், வலக் கரத்தால் ஆசி வழங்கும் விதமாகவும் அமைந்த அந்த பஞ்சலோகச் சிலை அற்புதமானது.

சுதை வேலைப்பாடு அமைந்த கொலு மண்டபத்தில் எல்லா தெய்வங்களின் ஐம்பொன் உற்சவ மூர்த்தங்களும் பிரகாசிக்கின்றன. கோவிலின் ஈசானிய மூலையில் ஒன்பது கோள்களும் நின்ற நிலையில் தோன்றி, தன்னை வழிபடுவோரின் கிரகதோஷம் போக்குகின்றன. மேற்கு நோக்கியபடி காலபைரவர் சூலமேந்தி நிற் கிறார்.

அம்பாளின் விமானத்தின் கோஷ்டத்தில் தெற்கே லட்சுமியும், மேற்கே நாக பூஷணி அம்மனும், வடக்கே சரஸ்வதியும் காட்சி தருகின்றனர். கோமுகம் அருகே சண்டேசர் எழுந்தருளியுள்ளார். இங்கே அனைத்து தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தில் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, முருகனுக்கு கார்த்திகை, சஷ்டி, பெருமாளுக்குரிய ஏகாதசி, ஐயப்பனுக்கு மண்டல பூஜை, துர்க்கைக்கு நவராத்திரி, ஆடிப்பூரம் என்பது மட்டுல்லாது தைப்பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற நாளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ஆடிப்பூரத் தேர்த் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. கொடி ஏற்றுத்துடன் ஒவ்வொரு நாளும் விதம்விதமான அலங்காரத்துடன் அம்பிகை காட்சி தருவதுடன், பூரம் அன்று அழகிய அசைந்தாடும் திருத்தேரில் எழுந்தருளி லண்டன் மாநகர வீதிகளில் உலா வருவது அற்புதக் காட்சியாகும்.

வேட்டி அணிந்த ஆடவரும், புடவை கட்டிய பெண்டிரும், பாவாடை தாவணியில் இளமங்கையரும், இசைக்கருவிகள் முழங்க தேர் இழுத்து உலா வந்து ஆங்கில மண்ணில் தமிழர் பண்பாட்டைப் பறை சாற்றுவது வார்த்தை களால் வருணிக்க முடியாத ஒன்றாகும். இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.