ஈர மண் விபூதியாக மாறும் அதிசயம்!

185

ஈர மண் விபூதியாக மாறும் அதிசயம்!

மலைக்குகையில் இருக்கும் ஈரமான மண் ஆனது திருநீறாக மாறும் அதிசயம் சுருளி மலையில் வீற்றிற்கும் வேலப்பர் கோயிலில் நிகழ்கிறது.

தேனி மாவட்டம் சுருளி மலையில் அமைந்துள்ள கோயில் தான் சுருளி வேலப்பர் கோயில். நாம் இன்று இந்த கோயிலின் வரலாறு பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சுருளி மலையில் முருகன் வேலப்பராக குடி கொண்டதால் இந்த மலை நெடுவேள்குன்றம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சுருளி மலையில் சிவபெருமான், விஷ்ணு, விநாயகர் என்று அனைத்து தெய்வங்களும் காட்சி தருகின்றன.

கோயிலின் வரலாறு:

மகாவிஷ்ணுவின் மகள் வள்ளி. இவரை மலையரசனாக இருக்கும் நம்பிராஜன் வளர்த்தார். வள்ளியை முருகனுக்கு மணமுடித்து கொடுத்ததோடு, திருமண சீர் வரிசையாக தனது எல்லை ஆட்சிக்குட்பட்ட மலைப்பிரதேசங்களை கொடுத்தார். அதில், இந்த மலையும் ஒன்று. சனி யாரையும் விட்டு வைப்பதில்லை. அதற்கு சான்று, தேவர்களையும், சிவனையும் பிடித்தார். ஒரு கட்டத்தில் தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது, தேவர்களோ, தங்களை காத்தருளும்படி இங்குள்ள முருகப்பெருமானை தஞ்சம் அடைந்தனர்.

முருகனோ அவர்களுக்கு அடைக்கலம் தந்து அவர்களை காத்தருளினார். இந்த மலைப்பிரதேசத்தில் சுருதியுடன் கூடிய அருவி கொட்டுவதால், சுருதி எனப்பட்ட தீர்த்தமானது சுருளி என்றானது. நாளடைவில் முருகனுக்கும் சுருளி வேலப்பர் என்று பெயர் வந்தது. முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதால் தான் என்னவோ சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி திருமணத்தை காண்பதற்கு அனைவரும் வட திசை நோக்கி புறப்பட்டனர். அப்போது தென் திசையானது மேல் நோக்கி நின்றது. இதனை சரி செய்ய அகத்திய முனிவர் தென் திசை நோக்கி புறப்பட்டார். அதன் பின், இமயமலையில் உள்ள குகை ஒன்றில் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் மணக்கோலத்தில் காட்சியளித்தார். இதனால், இந்த குகையான கைலாச குகை என்று அழைக்கப்படுகிறது.

குகையின் சிறப்பம்சம்:

இந்த கைலாச குகையில், சர்ப்ப குகை, பாடையா குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை, திருநீறு (விபூதி) குகை என்று பல குகைகள் தனித்தனியாக தீர்த்தங்களுடன் உள்ளன. திருநீறுக் குகையில், ஈர மண்ணானது காய்ந்த பின்பு திருநீறாக மாறுவது இங்குள்ள அதிசயமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி, 48 நாட்கள் இங்குள்ள நீரில் இருக்கும் இலை, தழைகள் பாறை போன்று காட்சியளிப்பது, நீர் விழுந்ததால் மரமும் பாறை போன்று காட்சியளிப்பது, பாசம் பிடித்த பாறையானது வழுக்குத் தன்மையற்று இருப்பது போன்றவை அதிசங்களாக கருதப்படுகிறது.

குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு சுருளி வேலப்பர் மகன் ஸ்தானத்தில் இருந்து அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து வைத்தார் என்று கூறப்படுகிறது. இதனால், ஆண் பிள்ளை இல்லாதவர்களும், ஆதரவற்று இருப்பவர்களும் சுருளி மலைக்கு வந்து சுருளி வேலப்பரை மனதார வழிபடுகின்றனர்.

சுருளி வேலப்பர் வழிபாடு பலன்கள்:

சுருளி வேலப்பரை மனதார வழிபட்டு வர பாவங்கள் நீங்கும், வேண்டிய வரம் கிடைக்கும், தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.