உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோயில்!

185

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோயில்!

உடுமலைப்பேட்டை மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் மாங்கல்ய மாரியம்மனாக சுயம்பு மூர்த்தியாக, அருள்பாலிக்கிறார்.

பல்லாண்டுகளுக்கு முன்பு, பக்தர் ஒருவர் தாம் எங்கே செல்கிறோம் என்ற நினைவே இல்லாமல், தானாகவே வனப்பகுதிக்குள் சென்றார். நீண்ட தூரம் சென்ற அவர் ஓரிடத்தில் நினைவு திரும்பி நின்றபோது, அங்கே சுயம்பு வடிவில் அம்பாள்இருந்ததைக் கண்டார்.ஊருக்கு திரும்பிய அவர் வனத்தில் அம்பாளைக் கண்டதை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் ஒன்று கூடி அம்பாள் இருந்ததை வனத்தைச் சீரமைத்து கோயில் எழுப்பினர்.

பிரகாரத்தில் செல்வகணபதி, செல்வமுத்துக்குமரன், தலவிருட்சத்தின் அடியில் அஷ்டநாக தெய்வங்கள் உள்ளன.

இக்கோயிலில், வருடந்தோறும் மார்கழி திருவாதிரையில், 108 தம்பதியர்களை வைத்து “மாங்கல்ய பூஜை’ நடத்தப்படுகிறது. இப்பூஜையில், அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தி விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடத்தி, பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்படுகிறது. பூஜை செய்த தாலியை பெண்கள் அணிந்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் பிரச்னைகள் இன்றி, சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.

நோன்பு சாட்டுதல், கம்பம் போடுதல், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி கொடியேற்றம், பூவோடு  மாவிளக்கு, திருககல்யாணம், அம்மன் ரதா ரோகணம், தேரோட்டம், பரிவேட்டை, வாணவேடிக்கை, கொடியிற்க்கம், மஞ்சள் நீராட்டு , மகாபிஷேகம் முதலியன முக்கிய நிகழ்வுகள்.

நோன்பு சாட்டுதல்:

பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாயக் கிழமையன்று  நோன்பு சாட்டுதல்  எனும் பூஜை நடைபெற்று நகர மக்கள் அனைவருக்கும் பறை சாற்றி அறிவிக்கப்படும். பின்னர் அடுத்த எட்டாவது நாள் செவ்வாய்க் கிழமை “திருக்கம்பம் ” நாட்டுதல் நடைபெறும்.

அடுத்த நாள் “கொடியேற்று விழா” வெகு விமரிசையாக நடைபெறும். கொடியேற்று விழா அன்று கொடி மர பூஜை, கொடி வஸ்திர பூஜை, அஸ்திர பூஜை, பலிதானங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று கொடியேற்றப்படும். திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்குகின்றன. மக்கள் நன்றாக வாழ வேண்டும என்ற வேண்டுகோளின்படி “ஆத்மாவையும், தர்மத்தையும் கீழநிலையிலிருந்து உயர் நிலைக்குக் கொண்டு செல்ல அருள்புரியும் “அன்னை” மேலும் சிறப்பாக் கருணை நோக்கம் கொண்டு அருள்புரிய ஆயத்தமாக காத்திருக்கிறாள் என்பதைக் கொடியேற்றம் உணர்த்தும். இது “ஸ்திதி” எனும் காக்கும் தொழிலைக் குறிக்கும்.இப்படித் தொடங்கும் திருவிழா ஒவ்வோரு நாளும் எழுந்தருளும்

திருமேனி உற்சவர்  சமம், விசாரம், சந்தோஷம், சாது சங்கமம் எனும் நான்கு அறங்களை நான்கு கால்களாகக் கொண்ட ரிஷபம், யானை, காமதேனு, சிங்கம், மயில், அன்னம், குதிரை எனும் வாகனங்களில் பலவித புஷ்ப அலங்காரங்களில் அருள் தரும் கோலத்துடன் வீதி வலம் வந்து வாழ்த்தியருளுவாள்.

எண்ணியன முடித்திட வேண்டி பக்தர்கள் அக்கினிச்சட்டியைக் கைகளில் ஏந்தி அம்மனுக்கு வழிபாடு செலுத்துவார்கள் . தம்வாழ்வினில் விளக்கேற்றிடும் வண்டமிழ் அன்னைக்கு மாவிளக்கு வைத்து மங்கையர் வழிபடுவர்.

மேற்படி திருவிழாக் காலங்களில் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழச்சிகள் மக்கள் மகிழும் வண்ணம் நடைபெறும். 15-ஆம் நாள் மாலையில் அம்மனுக்கு திருக்கல்யாணம் சிறப்புடன் நடைபெற்று, அடுத்த நாள் திருத்தேர் விழா. பல்வேறு ஊர்களிலிருந்தும் சிற்றூர்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து  கலந்து இறையருள் பெறுவார்கள

திருவிழா:

பங்குனி – சித்திரையில் 19 நாள் பிரதானம், தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, ஆடிவெள்ளி மற்றும் பவுர்ணமி. கோயில் மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. தல விநாயகரின் திருநாமம் சக்தி விநாயகர்.

பிரார்த்தனை:

கண்நோய், அம்மை நோய் தீர, திருமணத்தடை, புத்திரதோஷம், நாகதோஷம் நீங்க வேண்டலாம்.

அம்பாளுக்கு அவல், தேங்காய் பூ, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், அன்னதானம் செய்தல், முடிகாணிக்கை செலுத்துதல் நேர்த்திகடன் ஆகும்

உடும்புமலை, கரகிரி:

அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் “சக்கரபுரி’ என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் “உடும்புமலை’ என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.