உப்பிலா உணவு உண்ட உப்பிலியப்பன்!

172

உப்பிலா உணவு உண்ட உப்பிலியப்பன்!

தென் திருப்பதி என்ற சிறப்புப் பெயர் பெற்ற கோயில் உப்பிலியப்பன் கோயிலாகும்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் அமையப்பெற்றுள்ள ஸ்தலம் உப்பிலியப்பன் கோயில். இந்த கோயிலுக்கு தென் திருப்பதி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

உப்பிலியப்பன் பெயர்க் காரணம்:

உப்பிலியப்பனின் பழமையான பெயர் திருவிண்ணகர். இவருக்கு ஒப்பாக நிகராக யாரும் இல்லை என்பதால், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன். இதன் மூலமாக முதலில் ஒப்பிலியப்பன் என்ற பெயர் வந்தது.

காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்ற பெயரானது உப்பிலியப்பன் என்றானது. பூமாதேவியை திருமணம் செய்த பிறகு அவர் சமைத்த உப்பில்லா உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றும் கூட வந்தது என்று சொல்லப்பட்டது.

உப்பிலியப்பன் கோயில் வேறு பெயர்கள்:

  1. ஒப்பிலியப்பன் கோயில்
  2. திருவிண்ணகர்
  3. மார்க்கண்டேய ஷேத்திரம்
  4. ஆகாசநகரம்
  5. செண்பகவனம்
  6. தென் திருப்பதி

உப்பிலியப்பன் தல வரலாறு:

மார்க்கண்டேய மகரிஷி:

மிருகண்டு மகரிஷியின் புதல்வன், மார்க்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்றும், திருமால் தான் தனக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்றும் கடும் தவம் செய்தார். அப்போது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தை ஒன்றை கண்டெடுத்தார். அந்த குழந்தைக்கு பூமாதேவி என்று பெயரிட்டார். பூமாதேவியை அன்பாகவும், பாசமாகவும் வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த பூமாதேவிக்கு தனது ஆசைப்படி திருமாலை மணமுடிக்க எண்ணினார்.

திருமால்

அப்போது திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடத்தில் மார்க்கண்டேய மகரிஷியின் குடில் பகுதிக்கு வந்தார். அவர், பூமாதேவியை தனக்கு மணமுடித்து தரும்படி கேட்டார். ஆனால், மகரிஷியோ மறுப்பு தெரிவித்ததோடு, மகளுக்கு உப்பு போட்டு சமையல் செய்ய தெரியாது என்றார். ஆனால், திருமாலோ விடவேயில்லை. மகரிஷி கண்மூடி பெருமானை வேண்டினார். மகரிஷி கண் திறந்து பார்த்தபோது உப்பிலியப்பன் தோன்றினார். உன்னிடம் வளர்ந்தது பூமாதேவி தான். வந்திருப்பது திருமால் தான் என்று உரைத்து அவர்களுக்கு மனமுடித்தார். மார்க்கண்டேய மகரிஷியின் விருப்பமும், ஆசையும் நிறைவேறியது.

திருப்பதி பெருமாளின் அண்ணன்

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சிரவண நட்சத்திர நாளில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமண தடை நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் திகழ்வதால், உப்பிலியப்பன் கோயில் சென்று அவரை தரிசனம் செய்து வந்தால் திருப்பதி சென்ற பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

உப்பிலியப்பன் கோயில் அமைவிடம்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது. இந்தப் பகுதியில் உப்பிலியப்பன் மற்றும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் சிறந்த தலங்களாக அமைந்துள்ளன. திருநாகேஸ்வரத்திற்கு தெற்கில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.