கன்னியாகுமரி அதிசய சாஸ்தா கோயில்!

105

கன்னியாகுமரி அதிசய சாஸ்தா கோயில்!

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி என்ற ஊரில் உள்ள கோயில் அதிசய சாஸ்தா கோயில். இந்தக் கோயிலில் சாஸ்தா மூலவராக காட்சி தருகிறார். பங்குனி உத்திர நாளை முன்னிட்டு சாஸ்தாவுக்கு விழா நடக்கிறது. அப்போது சாஸ்தா குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.

பொதுவாக சாஸ்தா இரண்டு கால்களையும் குத்திட்டு யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இந்தக் கோயிலில் சுவாமி பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலது கையில் கதாயுகம் இருக்கிறது. மார்பில் பதக்கமும், பூணூலும் அணிந்திருக்கிறார்.

சுருள் முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இது போன்ற அமைப்பில் வேறு எங்கும் சாஸ்தா கோயில் இல்லை. எதிரில் யானை மற்றும் குதிரை வாகனங்கள் உள்ளன. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் இங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. கோயில் பிரகாரத்தில் மாடன் தம்பிரான், பூதத்தார், ஈனன், வன்னியர் ஆகிய தெய்வங்கள் இருக்கின்றனர். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறிய உடன் சாஸ்தாவுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர். அத்திரி மகரிஷி தனது மனைவி அனுசுயாவுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தார். அனுசுயா தன் கணவர் மீது கொண்ட பக்தியை உலகத்திற்கு அறிவித்து அவளைப் போன்று பெண்கள் கணவருடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்த மும்மூர்த்திகளும் துறவி வேடத்தில் வந்தனர்.

அனுசுயா அவர்களை சாப்பிட அழைத்தாள். நிர்வாண நிலையில் பரிமாறினால் தான் தாங்கள் சாப்பிடுவோம் என்று துறவிகள் நிபந்தனை விதித்தனர். இதைக்கேட்ட அனுசுயா சற்றும் கலங்கவில்லை. தன் கணவர் அத்திரியின் பாதத்தை பூஜித்த தீர்த்தத்தை கையில் எடுத்தாள். அதை மும்மூர்த்திகள் மீது தெளித்தாள்.

மூவரும் குழந்தைகளாயினர். பின்பு மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் அனுசுயா, அத்திரிக்கு காட்சி கொடுத்தனர். இவ்வாறு அத்திரி ஆஸ்ரமம் அமைத்து தங்கியதால் இத்தலம் ஆஸ்ரமம் என்று அழைக்கப்பட்டு ஆஸ்ராமம் என்று திரிந்தது. அத்திரி உண்டாக்கிய தீர்த்தம், இந்தக் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இதை யாக குண்ட தீர்த்தம் என்பார்கள்.

சிவனுக்குரிய வில்வமே இத்தலத்தில் விருட்சம். இங்குள்ள 3 வில்வ மரங்களில் 3 நிலை, 5, நிலை, 9 இலை என்று வெவ்வேறு எண்ணிக்கையில் கிளை விடுவது சிறப்பு. பல்லாண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவை குல தெய்வமாக வழிபட்டனர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் கட்ட வேண்டுமென எண்ணியவர்கள் அவருக்கு ஒரு சாஸ்தா சிலை வடித்தனர்.

இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மணக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உனர்ந்தார். வந்தவர் அவரது கண்ணில் மையை தடவ கண்பார்வை கிடைத்தது. மீண்டும் கண்பார்வை கிடைத்து வியந்து சாஸ்தாவை வழிபட அவர் காட்சி கொடுத்து அருளினார்.

கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா என்று பெயர் பெற்றார். அஞ்சனம் என்றால் கண், கண்டன். அதாவது சாஸ்தாவின் மற்றொரு பெயரான மணிகண்டன் என்பதாகும்.