கரிவலம் வந்த நல்லூர் வெயிலுகந்த அம்மன் கோயில்!

460

கரிவலம் வந்த நல்லூர் வெயிலுகந்த அம்மன் கோயில்!

திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூர் என்ற பகுதியில் உள்ள கோயில் வெயிலுகந்த அம்மன் கோயில். இந்தக் கோயிலில் வெயிலுகந்த அம்மன் மூலவராக காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமி, ஆடி மாதம், பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு திருவிழா கொண்டாடப்படுகிறது.

விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், பைரவர், காளி, பேச்சியம்மன், நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. இந்தக் கோயிலிலிருந்து 1 கிமீ தொலைவில் பால்வண்ணநாதர் கோயிலும், 8 கிமீ தொலைவில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலும் உள்ளன. மனக்கவலை நீங்கி நிம்மதி கிடைக்க இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சாற்றி அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

வெயில் உகந்த அம்மனை வேலு கந்த அம்மன் என்றும் சொல்வார்கள். சூரசம்ஹாரத்திற்கு சென்ற முருகப் பெருமானிடம், அம்பாள், தனது சக்தியை வேலாக மாற்றி அவரிடம் கொடுத்தாள். வேலவனுக்கு உகந்த வேல் கொடுத்ததால், அவள் வேலுகந்த அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இதுவே நாளடைவில் வெயிலுகந்த அம்மன் என்றானது.

ஒரு காலத்தில் கரிவலம் வந்த நல்லூர் என்ற ஊரானது கருவை என்று அழைக்கப்பட்டது. அப்போது இந்த ஊரை வீரபாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்தான். இவருக்கு வரதுங்க ராம பாண்டியன், அதிவீர பாண்டியன் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். அப்போது தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கு புத்திரர்கள் இல்லை. இதன் காரணமாக தனக்கு ஒரு புதல்வனை சுவீகாரம் செய்து தர வேண்டும் என்று வீரபாண்டியனுக்கு கோரிக்கை வைத்தான்.

வீரபாண்டியனும் தனது இளைய மகனான் அதிவீர பாண்டியனை சுவீகாரம் செய்து கொடுத்தான். இதன் காரணமாக கரிவலம் வந்த நல்லூரில் வரதுங்க ராம பாண்டியன் ஆட்சி பொறுப்பேற்றான். அவனுக்கு சிவகாமசுந்தரி என்ற பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகையால் அடுத்தடுத்து 27 பெண்களை திருமணம் செய்தான். எனினும், குழந்தையே இல்லை.

இதையடுத்து கரிவலம் வந்த நல்லூரில் உள்ள் பால்வண்ண நாதருக்கு பல பூஜைகள் செய்தான். மேலும் இந்த ஜென்மத்தில் இல்லையென்றாலும், அடுத்த ஜென்மத்திலாவது தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்று வெயிலுகந்த அம்மனிடம் வேண்டுகோள் வைத்தான். அவளும் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்தாள்.