கர்ப்பம் தரிக்காது: சாபமிட்ட முப்பந்தல் இசக்கியம்மன்!

206

கர்ப்பம் தரிக்காது: சாபமிட்ட முப்பந்தல் இசக்கியம்மன்!

திருமணத்திற்கு முன்னர் கர்ப்பமான நிலையில், தனக்கும், தனது குழந்தைக்கும் நியாயம் கிடைக்காத விரக்தியில் இனிமேல் இந்த ஊர் பெண்கள் எவருக்கும் கர்ப்பம் தரிக்காது என்று சாபமிட்டு தற்கொலை செய்து கொண்டவள் தான் இந்த இசக்கி.

முப்பந்தல் பெயர்க்காரணம்:

தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் இணைந்து ஔவைபிராட்டியாருக்கு விழா எடுத்தனர். இதன் காரணமாக, முப்பந்தல் எனும் பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது.

இசக்கியம்மன் தல வரலாறு:

திருநெல்வேலி மாவட்டம் முப்பந்தல் அருகிலுள்ள பழவூர் என்ற ஊரில் நாட்டியமாடும் பெண்மணி ஒருத்தி தனது மகளான இசக்கியுடன் வாழ்ந்து வந்தாள். இசக்கி மீது ஆசைப்பட்ட ஒருவன் அவரை ஏமாற்றி கர்ப்பிணியாக்கியுள்ளான். ஆனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளான். இதையடுத்து குழந்தை பெற்றெடுத்த இசக்கி பஞ்சாயத்து கூட்டினாள். ஆனால், அவளது கர்ப்பத்திற்கு அவன் காரணம் என்பதை பஞ்சாயத்து ஏற்றுக் கொள்ளவில்லை.

கர்ப்பம் தரிக்காது – இசக்கியின் சாபம்:

இதனால், மனமுடைந்த இசக்கி இந்த ஊரில் எவருக்கும் கர்ப்பம் தரிக்காது போகட்டும் என்று சாபமிட்டு தனது குழந்தையோடு தற்கொலை செய்து கொண்டார். அப்போது பஞ்சாயத்து நடந்த இடத்திலுள்ள ஆலமரத்தின் கிளையானது ஒடிந்து விழுந்தது. இதில், பஞ்சாயத்து நடத்திய ஊர் பெரியவர்கள் முதல் இசக்கியை ஏமாற்றியவன் வரை அனைவரும் இறந்தனர்.

இசக்கியன் சாபத்திற்கு ஆளனதைத் தொடர்ந்து அந்த ஊர் மக்கள் குழந்தை பாக்கியமின்றி தவித்தனர். இந்த நிலையில் தான் முப்பந்தல் அருகில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அது என்ன சத்தம் என்று எல்லோரும் சென்று பார்த்தபோது, சுயம்புவாய் உருவான ஒரு அம்மனின் உருவம் தென்பட்டுள்ளது.

இந்த ஊரையும், ஊர் மக்களையும் காக்கவே தான் இந்த நிலை வந்ததாகவும், இசக்கிக்கு துரோகம் செய்ததால் அந்நிலை வந்ததாக அசரீரி ஒலித்துள்ளது. இதையடுத்து இசக்கியின் நினைவாக இந்த அம்மனுக்கு இசக்கியம்மன் என்று பெயரிட்டு கோயில் கட்டி வழிபடுகின்றனர்.

கோயில் கருவறையில் அம்மன் வடக்குப் பார்த்து காட்சி தருகிறாள். கருவறையின் சுற்றுச் சுவரில் வைஷ்ணவி, துர்க்கை அம்மன், பிரத்தியங்கார தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

மேலும், கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், பால முருகன், ஔவையாருக்கு ஔவையாரம்மன் என்ற பெயரில் தனி சன்னதியும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இசக்கியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து தை மாதத்தில் அம்மனுக்கு மலர் அபிஷேகமும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

முப்பந்தல் பிடிமண்:

முப்பந்தலில் இருந்து பிடிமண் எடுத்து அதன் மூலமாக இசக்கியம்மன் விருதுநகர், தூத்துக்குடி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் கோயில் கொண்டுள்ளார். யாரேனும் நோய்வாய்பட்டால் இங்குள்ள இசக்கியம்மனுக்கு சேவல் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட நோய் குணமாகும் என்பது ஐதீகம்.

இசக்கியம்மன் அமைவிடம்:

கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை நாகர்கோயிலிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆரல்வாய்மொழிக்கும் காவல்கிணறுக்கும் இடையில் உள்ளது முப்பந்தல்.