காட்டினாயனப்பள்ளி சுப்பிரமணியசுவாமி கோயில்!

106

காட்டினாயனப்பள்ளி சுப்பிரமணியசுவாமி கோயில்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டினாயனப்பள்ளி என்ற ஊரில் உள்ள கோயில் சுப்பிரமணியசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக காட்சி தருகிறார். வள்ளி தெய்வானை அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆடிக்கிருத்திகை, தைப்பூசம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுகிறது. முக்கியமான நாட்களில் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார். சைவ, வைணவ பேதமின்றி திகழும் கோயில் இது.

வள்ளி தெய்வானை சமேதராக சுப்பிரமணியசுவாமி விளங்க அவருக்கு அருகில் ஆனைமுகன், ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாளும், ஆஞ்சநேயரும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். அவர்களுக்கு உற்சவ மூர்த்தங்களும் உண்டு.

இந்தக் கோயிலில் வள்ளி தெய்வானை சமேதராக வீற்றிருக்கும் சுப்பிரமணியசுவாமியை வழிபட்டவர்களுக்கு சகல தோஷங்களும் விலகி சந்தோஷமான வாழ்வு அமைந்திருக்கிறது. குறிப்பாக திருமண வரன் அமைந்துள்ளது என்று சொல்லப்படுகிறது. கோயிலைச் சுற்றியுள்ள மக்கள் தங்களது மகன், மகள் திருமணத்தை இந்தக் கோயிலிலேயே நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு பால் குடம் எடுத்து காவடி சுமந்து தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோயிலில் விசாலமான முன் மண்டபத்தில் கொடி மரம் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்த ஆலயத்தையொட்டி மலைமீது ஆஞ்சநேயர் அருளுகிறார். அவரை தரிசிக்க எழுநூறு படிகள் ஏறிச் செல்லவேண்டும். படியேறும் வழியில் சாது சாமியின் ஜீவசமாதி உள்ளது. அதன் மேல் அவரது திருவுருவம் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது.

ஆறுமுகன் குடி கொண்டுள்ள இத்தலத்தில் பல வருடங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபட்டு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சாது சாமி என்ற ஒரு மகான், முருகப் பெருமானின் அருட்கடாட்சம் நிறைந்துள்ள இந்த இடத்தில் அவனுக்கு ஒரு கோயில் எழுப்புங்கள். ஊர் மக்களையும், தன்னை வழிபட வருபவர்களையும் அவனே காத்தருள்வான்! என்று கூறியிருக்கிறார். அவரது அருளுரையின்படி கோயில் கட்டப்பட்டது.