குச்சுப்புல்லினால் அமைத்த கூரை குச்சனூர் சனீஸ்வரன் கோயில்!

144

குச்சுப்புல்லினால் அமைத்த கூரை குச்சனூர் சனீஸ்வரன் கோயில்!

தமிழ்நாட்டிலேயே தனக்கு என்று தனியாக கோயில் கொண்டுள்ள சனீஸ்வரன் எழுந்தருளியுள்ள ஒரு இடம் குச்சனூர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுரபிநதி என்று அழைக்கப்படும் சுருளி ஆற்றின் கரையில் தான் இந்த சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ளார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குச்சனூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரரை மனமுருக வேண்டிக் கொண்டால் சோதனைகள் கூட வாழ்க்கையில் சுகமான அனுபவங்களாக மாறும்.

குச்சனூர் சனீஸ்வரன் கோயில் வரலாறு:

தினகரன் எனும் மன்னன் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால் இறைவனிடம் வேண்டி வந்தார். அப்போது, ஒரு நாள் உருவமே இல்லாமல் ஒலி வடிவில் அசரீரி கேட்டது. பிராமண சிறுவன் வருவான் என்றும், அவனை வளர்க்க வேண்டும். அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்ட து. அது போலவே பிராமணச் சிறுவன் வந்தான். அவனுக்கு சந்திரவதனும் என்று மன்னன் பெயர் சூட்டினார்.

அதன் பின்பு, அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தினகரன் மன்ன்ன் சதாகன் என்று பெயர் சூட்டினார். மிகவும் அறிவாளியாக திகழ்ந்த சந்திரவதனனை அரசனாக முடிசூட்டினான். இந்த நிலையில், தான் மன்னன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. தோஷத்தால் அவதிப்பட்டு பல துன்பங்களை அனுபவித்து வந்த தனது வளர்ப்புத் தந்தை படும் கஷ்டத்தை தாக்கிக் கொள்ள முடியாமல் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனி பகவானின் உருவத்தை படைத்து தந்தையின் துயரத்தை நீக்க வேண்டி பிரார்த்தனை செய்தான்.

சந்திரவதனனின் வழிபாட்டால் மனமிறங்கிய சனி பகவான், அவன் முன் தோன்றினார். முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் சனி தோஷம் பிடிக்கிறது. அவரவர் செய்த பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்கு கஷ்டங்கள், பிரச்சனைகள், துன்பங்கள் வருகின்றன. அதுபோலத்தான் உனது தந்தையின் பாவ வினைகளுக்கேற்ப அவருக்கு துன்பங்கள் வருகின்றன என்று சனி பகவான் கூறினார்.

தன்னை எடுத்து வளர்த்து நாட்டின் மன்னனாக்கிய தனது தந்தையின் கஷ்டங்களை தனக்கு தந்து அவரது துன்பங்களை குறைக்கும்படியாக சனிபகவானிடம், சந்திரவதனன் வேண்டினான். சந்திரவதனனின் வேண்டுதலை ஏற்ற சனி பகவான், ஏழரை நாழிகை காலம் சனி தோஷம் பிடிக்கும், அதற்குரிய துன்பங்களும் வரும் என்றார்.

சனி தோஷத்தின் ஏழரை நாழிகை கால துன்பத்தை சந்திரவதனன் அனுபவித்தான். அதன் பின் மீண்டும் தோன்றிய சனி பகவான், இந்த ஏழரை நாழிகை சனி தோஷம் கூட முன் ஜென்மத்தில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்பவே உனக்கு வந்தது. இதே போன்று தங்கள் பாவங்களை குறைகளை உணர்ந்து இந்த இடத்திற்கு வந்து என்னை வணங்குபவர்களு சனி தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு குறைந்து அவர்களுக்கு நன்மை அளிப்பேன் என்று கூறி சனி பகவான் மறைந்தார்.

பின்பு, அதே இடத்தில் சனி பகவான் சுயம்புவாக தோன்றி மக்களுக்கு அருள் பாலித்தார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய வழிபாடு ஒரு சிறந்த வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக செண்பகநல்லூரில் கோயில் அமைத்தார். அதற்கு குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாடு செய்து, அதனை சிறந்த வழிபாட்டு தலமாக்கினான். நாளடையில் செண்பகநல்லூர் குச்சனூர் என்றாகிவிட்டது.

குச்சனூரில் எழுந்தருளியுள்ள சனி பகவானின் தலம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய ஒரு வரலாற்று தலம் என்று கூறப்படுகிறது.

வழிபாடுகளும், சிறப்புகளும்:

இந்த கோயில்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இவ்வளவு ஏன், ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா என்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று ஆடி சனிக்கிழமை என்பதால், சிறப்பான வழிபாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.

இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை வரும் சனி பெயர்ச்சியின் போதும் சனி பெயர்ச்சி திருவிழா நட த்தப்படுகிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து எள் விளக்கேற்றியும், காகத்திற்கு அன்னமிட்டும் வழிபட்டு செல்கின்றனர்.

ஆடி திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடப்பதோடு திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு, முளைப்பாரி, கரகம் கலக்குதல், சோனைக் கருப்பசாமிக்கு பொங்கல், மஞ்சள் நீராட்டு விழா என்று நிகழ்ச்சிகள் நடக்கும்.