குட்டி ஜப்பான் (சிவகாசி) காசி விஸ்வநாதர் கோயில்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கோயில் காசி விஸ்வநாதர் கோயில். இந்தக் கோயிலில் காசிவிஸ்வநாதர் மூலவராக காட்சி தருகிறார். தாயார் விசாலாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும், வைகாசி பிரம்மோற்சவம், ஆனியில் நடராஜருக்கு திருமஞ்சனம், ஆடியில் விசாலாட்சி அம்பாளுக்கு தபசுத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா (பிட்டுத் திருவிழா), புரட்டாசி நவராத்திரி கொலு பூஜை, ஐப்பசியில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், கார்த்திகை திருவிழா, மார்கழியில் திருவாதிரை திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி சிவராத்திரி விழா மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.
சிவன், காசியிலிருந்து வந்து தங்கிய இடம் என்பதால், சிவன் காசி என்று அழைக்கப்பட்ட இந்த ஊரானது சிவகாசி என்று மாறியது. வடக்கில் காசி, தெற்கில் தென்காசி நடுவில் சிவகாசி என்ற ஊர் உள்ளது. திருப்பதிக்கு எப்படி ஒரே எழுத்தும், இறுதி எழுத்தும் ஒன்றாக இருக்கிறதோ அதே போன்று சிவகாசிக்கும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றாக இருப்பது இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
இத்தலத்தில் மூலவர் விஸ்வநாதர், தாயார் விசாலாட்சி, துர்க்கை, வள்ளி, தெய்வானையுடன் முருகன், விநாயகர், நடராஜர், மீனாட்சி, வீரபத்திரர், பைரவர், சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் போன்ற சனகாதி முனிவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கிய நிலையில் உள்ள சன்னதிகள் உள்ளன.
விமானத்தில் அடிக்கடி பயணம் மேற்கொள்ள, தொழில் வளம் சிறக்க இந்தக் கோயிலில் உள்ள காசி விஸ்வநாதரை தரிசனம் செய்கின்றனர். பௌர்ணமி, சங்கடஹரசதுர்த்தி மற்றும் பிரதோஷ காலங்களில் சிவனுக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பற்று ஆசையை விடுவதற்காக காசிக்கு செல்கின்றனர். எல்லோரும் காசிக்கு செல்வதில்லை. வயதான பெரியவர்களில் காசிக்கு செல்ல முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காசிக்கு செல்ல முடியாதவர்கள் சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். காசி விஸ்வநாதருடன் விசாலாட்சி தாயார் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். இவர்களை வணங்கி வழிபட மன அமைதி கிடைக்கும்.
சிவகாசியில் கோயில் கட்டிய பராங்குச மன்னன் தனது தவ வலிமையால் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். அவன் துறவுநிலை மேற்கொண்ட பின் பராசரர் என்று அழைக்கப்பட்டான். அதன் பிறகு தினந்தோறும் ஆகாய மார்க்கமாக காசிக்கு சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு சிவகாசியிலும் இறங்கி காசி லிங்கத்தை வழிபட்டு தென்காசி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.
எனவே, அடிக்கடி விமானத்தில் பயணம் மேற்கொள்ள விரும்புவர்கள் தொடர்ந்து 11 வாரம் சிவகாசி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வந்தால் பாதுகாப்பான பயணம் அமையும் என்பது நம்பிக்கை. வெளிநாட்டிற்கு வேலை செல்பவர்களும், தொழிலதிபர்களும் சிவகாசி காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னதாக சிவகாசிக்கு பல ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து சென்றார்கள். எப்போதெல்லாம், அவர்கள் வருகிறார்களோ அப்போதெல்லாம் சிவகாசி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்துவிட்டு செல்ல மறக்கவே இல்லையாம். வருமானம் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் கிராமமாய் இருந்த சிவகாசி நகரமாகிவிட்டது.
தங்களது வளர்ச்சிக்கு காரணம் இந்த காசி விஸ்வநாதரே என்பது வணிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
காலண்டர், அச்சுத்தொழில், தீப்பெட்டி, பட்டாசு ஆகிய தொழில்களில் உலகப் புகழ் பெற்று குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் அளவிற்கு சிவகாசி வளரக் காரணமாக காசி விஸ்வநாதர் அமைந்துவிட்டார். வணிகர்கள் தங்களது தொழில் வளம் பெருக காசி விஸ்வநாதருக்கு 11 வாரம் சிவ வழிபாடு தொழில்களை செய்து வெற்றி பெறுகின்றனர்.
தென்காசியில் அரிகேசரி பராங்குச மன்னன் சிவன் கோயில் ஒன்றை கட்டினான். அங்கு பிரதிஷ்டை செய்வதற்கு காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை கொண்டு வர தனது மனைவியுடன் சென்றான். அங்கு புனித நீரான கங்கையில் நீராடி ஒரு காராம் பசு மீது லிங்கத்தை ஏற்றிக் கொண்டு தென்காசி சென்றான். பல நாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி உள்ள இடத்தில் வந்து தங்கினான். அப்போது சிவகாசி வில்வனக் காடாக இருந்தது.
மறுநாள், அவனுடன் வந்த அரசிக்கு (மனைவி) பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டது. உடன் வந்த காராம்பசுவும் அவனுடன் வர மறுத்தது. இதனால், சிவலிங்கத்தை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வில்வ வனத்தடியிலேயே காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவலிங்கத்தை மன்னன் பிரதிஷ்டை செய்தான். இதன் காரணமாக காசி விஸ்வநாதரின் பெயரால் சுவாமிக்கு விஸ்வநாதர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
அரிகேசரி பராங்குச மன்னனுக்கு பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள், இந்தக் கோயிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், ரத வீதிகளை அமைத்தனர். சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் பணிகள் 1445ம் ஆண்டில் துவங்கப்பெற்று 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிறைவு பெற்றதாக தகவல் சொல்லப்படுகிறது.