கூழையகவுண்டன்புதூர் மொக்கணீஸ்வரர் கோயில்!

176

கூழையகவுண்டன்புதூர் மொக்கணீஸ்வரர் கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் கூழையகவுண்டன்புதூர் என்ற ஊரில் உள்ள கோயில் மொக்கணீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் மொக்கணீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மீனாட்சி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வில்வம் மரம் கோயிலில் தல விருட்சமாக திகழ்கிறது. மொக்கணீச்சரம் என்பதே இந்த ஊரின் புராணப் பெயராக இருந்துள்ளது.

திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். அளவில் சிறியதான இந்தக் கோயிலில் மீனாட்சி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள். முன் மண்டபத்தில் மாணிக்கவாசகர் அருள் பாலிக்கிறார். இவருக்கு குரு பூஜை சிறப்பாக நடக்கிறது. அருகில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார்.

கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபம் இருக்கிறது. இதில், மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளது. பிறரை நம்பி ஏமாந்தவர்கள், நம்பிக்கை துரோகத்திற்கு ஆளானவர்கள் இந்தக் கோயிலில் வேண்டி மன நிம்மதி பெறுகின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர். கொள்ளு வைக்கும் பைக்கு மொக்கணி என்று பெயர். ஆகையால், இத்தல இறைவன் மொக்கணீஸ்வரர் என்று பெயர் பெற்றார். அளவில் சிறிய கோயிலான இந்தக் கோயிலில் மீனாட்சி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். இத்தல விநாயகர் மூத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதி வழியாக இரு வணிகர்கள் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றனர். அதில் ஒருவர் சிவபக்தர். தினந்தோறும் சிவ வழிபாடு செய்யாமல் எந்த செயலையும் துவங்கமாட்டார். அவர்கள் ஒருநாள் இரவு இங்கு தங்கினர். மறுநாள் சிவ பக்தர், சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், அங்கு லிங்கம் எதுவுமில்லை. அவருடன் வந்த நண்பர், சிவபக்த நண்பரின் பக்தியை கேலி செய்யும் விதத்தில், அவருக்கு தெரியாமல் குதிரைக்காக கொள்ளு வைக்கும் பையில் மணலை நிரப்பி சிவலிங்கம் போன்று தோற்றம் உருவாக்கி அதற்கு மாலைபோட்டு ஒரு இடத்தில் வைத்தார்.

இதையடுத்து, நண்பா, இதோ சிவலிங்கம். இதனை பூஜித்துக் கொள் என்றார். அப்பாவி சிவபக்தரும் அதை நம்பி கோணிப்பை லிங்கத்துக்கு பூஜை செய்தார். பூஜை முடிந்ததும், ஏமாந்தாயா, இது லிங்கம் இல்லை, கோணிப்பை என்று கூறிய நண்பர், அதனை எடுத்துக் காட்ட முயன்றார். ஆனால், அவரால், அதனை அசைக்கக் கூடிய முடியவில்லை.

உண்மையில் அது லிங்கமாக மாறியிருந்தது. இந்த அதிசயம் கண்டு நண்பரும் மனம் திருந்தி, அவரும் சிவபக்தரானார்.