சாஸ்தாநகர் ஐயப்பன் கோயில்!

89

சாஸ்தாநகர் ஐயப்பன் கோயில்!

சேலம் மாவட்டம் சாஸ்தாநகர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில். இந்தக் கோயிலில் ஐயப்பன் மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் மகர ஜோதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தினந்தோறும் கணபதி ஹோமம் செய்து கோயிலை சுத்தம் செய்தும் பூஜைக்கு பின்னர் இரவு ஹரிவராசனத்துடன் கோயில் நடை சாற்றப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செய்யும் நெய், அபிஷேகத்திற்கு தேவைப்படும் நெய் அபிஷேக சீட்டு இந்தக் கோயிலில் வழங்கப்படுகிறது. நீராஜனம் எனப்படும் சனி நிவர்த்தி பூஜை இந்தக் கோயிலில் மிகவும் சிறப்பு.

கோயிலுக்குள் நுழைந்ததும் பலிபீடமும், கொடி மரமும் தான் முதலில் உள்ளது. தொடர்ந்து இடப் பக்கத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. பிறந்த குழந்தையைப் போன்று சாந்தமான உருவத்தில் ஹரிஹர மைந்தன் காட்சி தருகிறார். வலப்பக்கத்தில் அவரது சகோதரன் ஆனைமுகன் காட்சியளிக்கிறார். இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வோர் அமர்வதற்கு தேவையான இட வசதியும் இந்தக் கோயிலில் உள்ளது.

திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்தக் கோயிலில் உள்ள ஐயப்பனை பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும், ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

நீராஜனம் எனப்படும் சனி நிவர்த்தி பூஜை வேறு எந்த கோயிலிலும் இல்லை. திருநள்ளாறு சனி பகவான் கோயிலில், ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இந்தப் பூஜை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து மனமுருகி ஐயப்பனை தியானிக்கின்றனர். இவர்களுக்காக அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையும் நடக்கிறது. மேலும், சனி தோஷம் உள்ளவர்களுக்காக நீராஜனம் என்ற சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல் நவக்கிரக ப்ரீதியும் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சகஸ்ர கலசாபிஷேகமும் நடக்கிறது. இந்த கலசாபிஷேகத்திற்கு இந்தியாவிலுள்ள புண்ணிய நதிகளிலிருந்து புனித நீர் கொண்டுவரப்படுகிறது. அப்போது வேள்வி நடத்தி புண்ணிய நதிகளின் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஐயப்பனுக்கும் பூஜை செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு தங்குவதற்கும் இடமும், உணவும் ஐயப்பன் டிர்ஸ்ட் மூலமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஐயப்பனுக்கு சன்னிதானம் அமைக்க வேண்டும் என்பதற்காக ஐயப்ப பக்தர்கள் சேலத்தில் டிரஸ்ட் ஒன்றை தொடங்கினர். இதன் மூலமாக ஐயப்பனுக்கு சன்னதி அமைக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. சேலத்தில் கோயில் கட்டலாம் என்று முடிவு செய்த போது எந்த இடத்தில் கட்டுவது என்று டிரஸ்ட் நிர்வாகிகள், குரங்கு சாவடி சென்றாய பெருமாள் கோயில் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது, திடீரென்று ஒரு ஒளி தோன்றி எந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று காட்டியதாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு அந்த இட த்தை வாங்கி கோயில் கட்டுவதற்கான வேலைகளை தொடங்கினர். கோயிலின் வரைபடத்தை காணிப்பையூர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பூதிரி வரைந்து கொடுத்துள்ளார். இந்த நம்பூதிரி குருவாயூர் மற்றும் சபரிமலை கோயில்களை நிர்மானித்த பரம்பரை வழி வந்தவர். அதன் பிறகு மகாபலிபுரம் கணபதி ஸ்தபதி ஐயப்பன் கோயிலை கட்டி முடித்தார்.