சிவாநந்தீஸ்வரர் கோயில்!

162

சிவாநந்தீஸ்வரர் கோயில்!

திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் என்ற ஊரில் உள்ளது சிவாநந்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக சிவாநந்தீஸ்வரர் காட்சி தருகிறார். உற்சவர் சோமஸ்கந்தர், தாயார் ஆனந்தவல்லி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் சிவன், சக்தி தட்சிணாமூர்த்தியாக தனி சன்னதிகளில் இருக்கிறார். இவரது இடது கையில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடியே காட்சி தருகிறார்.

பிரார்த்தனை:

பிரிந்திருக்கும் தம்பதியினர் தட்சிணாமூர்த்திக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் கள்ளி மலர்களால் அரச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும், திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

தல பெருமை:

சக்தியுடன் இணைந்த தெட்சிணாமூர்த்தி:

சிவபெருமானை மட்டும் வழிபடுவதை வழக்கமாக கொண்டவர் பிருகு முனிவர். ஒரு நாள் சிவனை வழிபடுவதற்கு கயிலாயம் சென்றிருந்தார். அப்போது சிவனும், பார்வதியும் அமர்ந்திருந்தனர். பிருகு முனிவர் சிவனை மட்டும் வழிபட்டு அவரை சுற்றி வந்தார். இதைக் கண்ட பார்வதி கோபம் கொண்டாள். பிருகு முனிவர் தன்னையும் சேர்த்து வழிபட வேண்டும் என்று நினைத்த பார்வதி தேவி, சிவனை ஒட்டியபடி அமர்ந்தார்.

ஆனால், பிருகு முனிவர் வண்டு உருவம் எடுத்து சிவபெருமானை மட்டும் வழிபட்டு அவரை சுற்றி வந்தார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சிவன் தனது இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். அப்போதும் கூட சிவன் தான் பெரியவர் என்பதை மட்டும் தெளிவாக கொண்டிருந்தார்.

இதையடுத்து பிருகு முனிவர் பூலோகத்தில் சிவதல யாத்திரை மேற்கொண்டார். அப்போது அகத்திய முனிவர் பூஜித்த கள்ளில் (ஒரு வகையான மரம்) வனமாக இருந்த சுவாமியை கள்ளில் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சிவன், அவரது முன்பு தோன்றி சிவமும் சக்தியும் ஒன்று தான். சக்தி இல்லாமல் சிவன் இல்லை, சிவன் இல்லாமல் சக்தி இல்லை என்பதை பிருகு முனிவருக்கு உபதேசம் செய்தார். மேலும், சக்தியை தனது மடியில் அமர வைத்து சக்தியுடன் இணைந்த தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்தார். அதன் பிறகு தான் பிருகு முனிவர் உண்மையை உணர்ந்தார்.

ஆனந்தவல்லி அம்மன்:

சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர், தான் செய்தது தவறு என்று உணர்ந்து அம்பாளிடம் மன்னிப்பு வேண்டினார். இதனால், மனமகிழ்ந்த அம்பாள், தன்னையும், சிவனையும் வழிபட்டு ஆனந்தமாக இருக்கும்படி அருள் புரிந்தாள். இதனால், அம்பாள் ஆனந்தவல்லி என்ற பெயர் பெற்றாள்.

கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் சுவாமிக்கு இடது புறம் சன்னதியில் அருள் பாலிக்கிறாள். அம்பாளின் இடது கையானது பாதத்தை நோக்கி காட்டியபடி வலது கை அருள் வழங்கும் கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு குறையாத ஆனந்தத்தையும், அருளையும் தந்தருள்வாள் என்பதை உணர்த்தும் கோலம் தான் இந்த ஆனந்தவல்லியின் கோலம் என்று பலரும் கூறுகிறார்கள்.

பிரம்ம முருகன்:

ஆனந்தவல்லி அம்பாள் மற்றும் சிவாநந்தீஸ்வரர் சன்னதியில் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் இத்தல இறைவன் திருக்கள்ளீஸ்வரர் என்றும், இத்தலம் திருக்கள்ளில் என்றும் பெயர் பெற்றது. ஆனந்தவள்ளி மற்றும் சிவா நந்தீஸ்வரர் சன்னதிக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் தனி சன்னதியில் அமைந்து சோமாஸ்கந்த வடிவமாக இந்தக் கோயில் இருக்கிறது.

சிவாநந்தீஸ்வரர்:

இவர் தனது வலது கையில் ஜெபமாலை, இடது கையில் தீர்த்த கலசம் ஆகியவற்றுடன் பிரம்மாவின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் உள்ள நந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவரது பெயரில், சிவனை சிவா நந்தீஸ்வரர் என்றும், தீர்த்தத்தை நந்தி தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர். கோயில் பிரகாரத்தில் விநாயகர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னதிகள் உள்ளன.

பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம்:

பொருட்கள் திருடு போயிருந்தால், பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்தால் பொருட்கள் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி பொருட்கள் திரும்ப கிடைத்தால் பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

தல வரலாறு:

சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் நடந்த போது, வடக்குப் பகுதி உயர்ந்தும், தெற்குப் பகுதி தாழ்ந்தும் காணப்பட்டது. இதனால், பூமி சமநிலையை இழந்தது. இதையடுத்து, சமநிலைக்காக சிவபெருமான், அகத்திய முனிவரை தென் பகுதிக்கு அனுப்பி வைத்தார். சிவனின், திருமணக் காட்சியை காண விரும்பிய அகத்திய முனிவர், தான் செல்லும் இடமெல்லாம், சிவனின் திருமணக் காட்சியை தரிசிக்கும் வரன் பெற்றார்.

தென் பகுதிக்கு வந்த அகத்திய முனிவர் திருப்பாலைவனம் தலத்தை வணங்கிவிட்டு அங்கி தங்கியிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், சோமஸ்கந்தராக காட்சி தந்தார். அதன் பிறகு அகத்திய இந்தக் கோயிலுக்கு வந்து சிவனை வழிபட்டார். சிவன், அம்பாளுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளித்தார்.

மேலும், முருகனோடு சோமாஸ்கந்தராகவும் காட்சி கொடுத்தார். தனக்கு அருள் புரிந்தது போன்று இந்தக் கோயிலுக்கு வந்து அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று அகத்திய முனிவர் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார். அகத்திய முனிவர் வேண்டுதலின் படி சிவபெருமானும் சுயம்புவாக எழுந்தருளி சிவாநந்தீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.