சுருளிமலை பூதநாராயணசுவாமி கோயில்!
தேனி மாவட்டம் சுருளிமலை என்ற ஊரில் உள்ள கோயில் பூதநாராயணசுவாமி கோயில். இங்கு பூதநாராயணன் மூலவராக காட்சி தருகிறார். சுரபிநதியே இங்கு தீர்த்தமாக உள்ளது. சுருதிமலையே இந்த ஊரின் புராணப் பெயராக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் 3 வார திருவிழா, ஆடி மற்றும் தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி ஆகிய நாட்கள் இங்கு சிறப்பான அபிஷேக ஆராதனை உண்டு.
இங்கு பெருமாள் சுருளியாண்டவ லிங்கமாக அருள் பாலிக்கிறார். இந்த மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார். சுருளியாறு, வெண்ணியாறு, கன்னிமார் ஊற்று ஆகிய 3 மூலிகை நீர்களும் சங்கமிக்கும் இத்தலத்திற்கு அருகிலேயே சுருதியுடன் கூடிய சுருளி எனும் சுரபிநதி நீர் அருவியாக கொட்டுகிறது. கானகத்தின் நடுவே பல மூலிகைகள் கலந்து அற்புத சக்தியுடன் விழும் இந்த அருவியில் நீராட தீராத பல நோய்களும் தீரும். சுற்றுப்பிரகாரத்தில் உக்கிர நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, வல்லப கணபதி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
முன்னோர்கள் முக்தியடைய காசி, ராமேஸ்வரம் சென்று புண்ணிய காரியம் செய்ய முடியாதோர் அமாவாசை நாளில் இங்கு வந்து திதி கொடுக்கின்றனர். இத்தலம் புண்ணியங்கள் செய்யும் தலமாக மட்டுமின்றி சிறந்த சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இவருக்கு அவல், பழங்களை நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். இத்தலத்தில் விநாயகர் வல்லபகணபதி என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.
இங்குள்ள சுரபி நதியில் நீராடி சுவாமியை வணங்கிட பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும். துன்பங்கள் நிவர்த்தியடைந்து நல்வாழ்வு கிட்டும். வேண்டும் வரம் கிடைக்கும். தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். நினைத்த காரியம் வெற்றி பெற, சுவாமிக்கு மாலைகள் சாற்றி தேங்காய், பழம் அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைத்து அன்னதானம் செய்யப்படுகிறது.
மதுரையை எரித்த கண்ணகி ஆவேசத்துடன் தெற்கே வந்த போது நெடுவேள்குன்றம் எனும் இச்சுருளிமலை வழியாகவே கடந்து சென்று பின் கூடலூர் வண்ணாத்திப்பாறை மலைக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது. இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திக்கு உதாரணமாக உள்ள இம்மலையைக் குறித்து இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அழகாக கூறியுள்ளார்.
புண்ணிய தீர்த்தங்களையும், பல அற்புதங்கள் புரியும் எண்ணற்ற மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
ஒரு முறை சிவனை நோக்கி கடும் புரிந்த ராவணேஸ்வரன் ஈரேழு உலகம் அண்டசராசரங்கள், நவக்கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், தேவர்கள் ஆகியோர் தனக்கு கீழே கட்டப்பட்டு நடக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் பலனாக அவன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான்.
ராவணின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட எண்ணி பாதிக்கப்பட்ட அனைவரும் யாவரது கண்களுக்கும் புலப்படாமல் ககனமார்க்கமாக சென்று, மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது தேவர்களைக் காணாத ராவணன் சனி பகவானை அனுப்பி அவர்களை கண்டறிந்து வரும்படி பணித்தான்.
அது முடியாமல் போனதால் நாரதரிடம், தேவர்களின் மறைவிடத்தை கண்டறியும்படி அவருக்கு ஆணையிட்டான். அப்படி தேடி வரும் போது ஒரு புற்றின் நடுவே மகரிஷி தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். நாரதர் அவரிடம் தேவர்கள் இருப்பிடம் பற்றி கேட்க, அவர் தேவர்கள் ஆலோசனை நடத்தும் இடத்தைக் கூறினார்.
நாரதர் மூலமாக இச்செய்தியை அறிந்து கொண்ட ராவணேஸ்வரன், கடுங்கோபம் கொண்டு தேவர்களை அழிக்க தனது அரக்கர் படையுடன் புறப்பட்டான். அவனிடமிருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு மகாவிஷ்ணு மகரிஷி தவம் செய்த இடத்தில் பஞ்ச பூதங்களின் மொத்த வடிவில் பூத சொரூபத்துடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நின்றார்.
அவரது பூதலோகத்தைக் கண்டு பயந்த ராவணன் தனது அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். அப்போது ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு அந்த இடத்திற்கு வந்த தேவர்கள் பூத நாராயணனாக உக்கிரத்துடன் இருந்த மகாவிஷ்ணுவிற்கு அன்னம் படைக்க அதனை உண்ட அவர் தனது விஸ்வரூபத்தை அடக்கி ஒளிமயமாக காட்சியளித்தார்.
இவ்வாறு தேவர்களுக்கு பூத நாராயணனாக காட்சி தந்த மகாவிஷ்ணு இத்தலத்தில் வீற்றுள்ளார்.