தலை எழுத்தை மாற்றி அருளும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

162

படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கு தனி கோவில் உள்ள ஒரே தலம் , திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் . இந்த கோவிலில் உள்ள பிரம்மதேவர் தன்னை வழிப்படும் மக்களின் தலையெழுத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கை . பல யுகங்களுக்கு முன் , பிரம்மாவின் மனதில் ஒரு எண்ணம் . படைக்கும் தொழிலை செய்யும் தனக்கும் 5 தலை , அழிக்கும் தொழிலை செய்யும் சிவனுக்கும் 5 தலை . நானும் சிவனும் சமமானவர்கள் என்று இறுமாப்புடன் இருந்தார் . இதை சொல் மற்றும் செயல் மூலமாகவும் உணர்த்தவும் செய்து எம்பெருமானின் கோவத்துக்கு ஆளாகினர் . வெகுண்டு எழுந்த சிவபெருமான் அவரின் ஒரு தலையை கொய்து வீசி , படைக்கும் தொழிலையும் பிடுங்கி கொண்டார் . சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எரிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் . அதற்காக பிரம்மன் பரிகாரம் செய்ய தேர்வு செய்த தலம் தான் இந்த திருப்பட்டூர்.

அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட 12 தலங்களில் உள்ள லிங்கங்கள், இங்கே பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், 12 சந்நிதிகளாக, 12 சிறிய ஆலயங்களாக இன்றைக்கும் காட்சி தருகின்றன. இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்கள் மற்றும் திருப்பட்டூர் தலம் என 13 தலங்களுக்கும் சென்று தரிசித்த பலன்கள் கிடைக்கும். நம் வாழ்க்கையில் இழந்ததையும் தொலைத்ததையும், தேடுவதையும் நாடுவதையும் நிச்சயம் பெறலாம் என்பது ஐதீகம்!

பிரம்மாவுக்கு சாப விமோசனம் தரும் போது, தன் அடியவர்களுக்காக, பக்தர்களுக்காக சிவனார், பிரம்மாவிடம் என்ன சொல்லி அருளினார் தெரியுமா? ‘உன் சாபம் போக்கிய இந்தத் திருவிடத்துக்கு, என்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் விதி கூட்டி அருள்வாயாக!’ என்றார் சிவபெருமான். அதாவது, இங்கே, இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களின் தலைவிதியை நல்லவிதமாக, திருத்தி எழுதி, நல்வாழ்வு மலரச் செய்வாயாக என அருளினார் ஈசன். அதன்படி, எவரொருவர் பக்தி சிரத்தையுடன், ஆத்மார்த்தமாக, திருப்பட்டூருக்கு வந்து சிவ தரிசனம் செய்து, பிரம்மா சந்நிதியில் மனமுருகி வேண்டி நிற்கிறார்களோ, அவர்களின் தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா.

அதனால்தான் திருப்பட்டூர் வந்தால், நல்லதொரு திருப்பம் நிச்சயம். தேக நலம் கூடும். ஆயுள் அதிகரிக்கும் என உறுதிபடச் சொல்கிறார்கள் பக்தர்கள். நடப்பவற்றுக்கெல்லாம் தானே ஓர் சாட்சியாக இருந்து, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும் பொருளையும் அள்ளித் தந்து வாழவைக்கிறார் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்கிறார் கோயிலின் பாஸ்கர குருக்கள்.பிரம்மபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, பிராகாரத்துக்குள் அடியெடுத்து வைத்ததுமே, விமானத்துடன் கூடிய தனிச்சந்நிதியில் உள்ள பிரமாண்டமான பிரம்மாவை கண்ணாரத் தரிசிக்கலாம்.நான்கு முகங்கள். நான்கு தலைகளிலும் அழகிய கிரீடம். நான்கு திருக்கரங்கள். அதில் இரண்டு திருக்கரங்களை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு! மற்றபடி வலது கரத்தில் ஜப மாலை, இடது கரத்தில் கமண்டலம். பத்ம பீடம் என்று சொல்லப்படுகிற, தாமரை மலரில் அமர்ந்து, தவ நிலையில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.

புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தேர்வு செய்த திருத்தலம் இதுவாகும்.தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.பொதுவாக பிரம்மாவுக்கு மஞ்சள்காப்பு செய்து வழிபடுவது சிறப்பு. பிரம்மா குரு அல்லவா. எனவே வியாழக்கிழமையிலும் சிவனாருக்கு உகந்த திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து வணங்கிச் செல்வது, மிகுந்த பலன்களைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அனைவரும் சென்று அருள்மிகு பிரம்மபுரீஸ்வரையும் , பிரம்மாவையும் தரிசித்து அருள் பெறுக .