தலை எழுத்தை மாற்றும் பிரம்மா கோவில் – திருபட்டூர்!

137

தலை எழுத்தை மாற்றும் பிரம்மா கோவில் – திருபட்டூர்

திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மசம்பத் கௌரி உடனுறை பிரம்மபுரீசுவரர் திருக்கோயில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியிலிருந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது.

ஆலயச்சிறப்பு:

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநாயகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.
பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.
“”என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக, என வரமும் கொடுத்தார். அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.

ஆலயத்தின் திருவிழா:

இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும். பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.

பிரம்மனின் திருஉருவம்:

சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.
கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

விஷேச நந்தி:

இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

குழந்தைகளுக்கு அருளும் கால பைரவர்:

கால பைரவர் இங்கு மேற்கு திசையை நோக்கி அருள்பாளிக்கிறார். சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

திருபட்டூரின் பெருமை:

சங்க காலப் பாடல்களில் இத்திருக்கோயில் மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை நக்கீரனார் தம்முடைய 395வது புறநானூறு பாடலில் இக்கோயிலில் உறையும் சாஸ்தாவைப் புகழ்கிறார். சேக்கிழார் பெருமான் பெரிய புராண பாடலை தில்லையம்பலத்தில் தொடங்கி திருப்பிடவூர் என்னும் திருப்பட்டூரில் முடித்ததாக வரலாறு.

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்:

ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும்.

பரிகாரங்கள்:

ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.

விஷேச பூஜைகள்:

குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது. மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

பலன்கள்:

திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

பக்தர்களின் நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

“குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு:
குருர் தேவோ மகேச்வர:
குரு சாக்ஷ௱த் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ”
என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது.

இங்கு மஞ்சள் நிறம் மிகவும் சிறப்பு:

பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

பிரம்மனுக்கு மஞ்சள் காப்பு:

பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும்.

பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.

நரசிம்மர் மண்டபம்:

நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.
நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

எலும்பு நோய்க்கு பூஜை:

பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் “பதஞ்சலி பிடவூர்’ எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.