திருஅன்பில் ஆலந்துறை!

137

திருஅன்பில் ஆலந்துறை!

ஊரின் பெயர் அன்பில், கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆயிற்று. ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் விளங்கும் இத்தலத்தில் மூலவர் சத்யவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மா வழிபட்ட மூர்த்தம் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமமும் உண்டு.

கோயிலின் உள்ளே சப்த மாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.

இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர். ஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது கொள்ளிட ந்தியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தரால் கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார்.

காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி.

அச்சிலை இன்றும் எழிலுற இவ்வாலயத்தில் காட்சி தருகிறது. பார்த்து இன்புற வேண்டிய சிற்பம். காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு தலம் சென்ற சம்பந்தர் அதன் பின்னர் அருகிலுள்ள பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை ஆகிய தலங்கள் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.

“கணை நீடெரி மால் அரவம் வரை வில்லா

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணை மாமயிலும் குயில் சேர் மட அன்னம்

அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.”

——(திருஞானசம்பந்தர் தேவாரம்)

பொருளுரை : நீண்டு எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக் கொண்டு பூட்டி வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டிய மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் எரித்த இறைவர், தத்தம் பெடைகளோடு கூடிய பெரிய மயில்களும், குயில்களும் சேர்ந்து வாழும் அன்னங்களும் உறையும் பொழில் சூழ்ந்த அன்பிலாலந்துறையார் ஆவார். ஆலய முகவரி : அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில், அன்பில் அஞ்சல், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்,

திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைஷ்ணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அன்பில் வடிவழகிய நம்பியின் ஆலயம் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. அன்பில் மாரியம்மன் கோவிலும் சிவாலயத்தில் இருந்து அருகில் உள்ளது. திருச்சி மற்றும் லால்குடியில் இருந்து அன்பில் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.