திருச்சாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோயில்!

139

திருச்சாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோயில்!

திருநீலநக்க நாயனார் நாள் தோறும் திருச்சாத்த மங்கையில் உள்ள அயவந்தி என்ற கோவில் இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு திருவாதிரை நாளன்று மனைவியுடன் வழிபாடு செய்யக் கோவிலுக்குச் சென்றார்.

கருவறைக்குள் சென்று வழிபாடு செய்யத் தொடங்கினார். பக்கத்திலிருந்த மனைவியார் வழிபாட்டுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுத்தார். வழிபாட்டு நிறைவில் இறைவன் முன் அமர்ந்து ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்கத் தொடங்கினார். மெய்ம்மறந்து ஐந்தெழுத்தை ஓதினார்.

அப்போது சிலந்திப் பூச்சியொன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. இதனைக் கண்ட மனைவியார் உடனே பக்கத்தில் சென்று, பச்சிளம் குழந்தை மீது சிலந்தி விழுந்தால் தாய் வாயால் ஊதி உமிழ்ந்து வெப்பக் கொடுமையை நீக்குவதைப் போலச் சிவலிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை வாயால் ஊதி உமிழ்ந்தாள்.

வாயின் உமிழ் நீர் சிவலிங்கத்தின் மீது பட்டது. இதனைக் கண்ட திருநீலநக்கநாயனார் கண்களை மூடிக் கொண்டு மனைவியாரைப் பார்த்து. ‘அறிவற்றவளே! இச் செயலை ஏன் செய்தாய்? ’ என்று கேட்டார். சிவலிங்கத்தின் மீது வீழ்ந்த சிலந்தியை ஊதி உமிழ்ந்ததாக மனைவியார் கூறினார்.

‘வேறு வகையில் போக்கியிருக்கலாம்; ஊதி உமிழ்ந்தது தவறு, அதனால் வழிபாடு தவறு உடையதாயிற்று என்று கூறி’ மனைவியைக் கோவிலிலேயே விட்டுச் சென்று விட்டார். அஞ்சிய மனைவியார் இரவு முழுவதும் கோவிலிலேயே தங்கி விட்டார்.

இரவிலே திருநீலநக்கநாயனார், கனவில் இறைவன் தோன்றி ‘உம்முடைய மனைவியார் தாயன்போடு எம்மை ஊதி உமிழ்ந்த இடம் தவிரப் பிற இடங்களிலெல்லாம் சிலந்தியால் உண்டான கொப்புளங்கள் தோன்றியுள்ளன. அவற்றைப் பார்’ எனக் காட்டினார்.

உடனே நாயனார் இறைவனைத் தொழுது வணங்கி விடிந்ததுதம் கோவிலுக்குச் சென்று கண்ணீர் சிந்தி அழுதார். பிறகு மனைவியாரை அழைத்துச் சென்றார். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் ‘மங்கையர்க்கரசி’ என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது!