திருச்சி தாயும் ஆனவர் கோயில்!

148

திருச்சி தாயும் ஆனவர் கோயில்!

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது ஐதிகம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.

எல்லா உயிர்க்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் (தாயும் ஆனவர்) என்று பெயர் பெற்றார்.

திரிசிரன் (மூன்று தலைகளை கொண்ட அசுரன்) வழிபட்ட இடம் ஆதலால் இஃது ‘திரிசிராப்பள்ளி ‘ என்று பெயர் பெற்றது. உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான்.

அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை.

வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, “செவ்வந்தி நாதர்’ என்ற பெயரும் உண்டு.