திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில்!

143

திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில்!

கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை என்ற ஊரில் உள்ள கோயில் நந்தீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் நந்தீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி, சோமவாரத்திலும், பிரதோஷ நாளிலும் விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

இந்தக் கோயிலில் சிவபெருமானே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான் அடக்கி இழுத்து வந்த போது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை இப்போதும் இந்தக் கோயிலில் காண முடியும். காளை அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

27 நட்சத்திர மண்டபம் கொண்ட கண துவாரங்கள் இந்தக் கோயிலில் உள்ளன. இந்த நட்சத்திர மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தை சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மரக்கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கோயில் பிரகாரத்தில் கணபதி, விஷ்ணு, சாஸ்தா, நாகர் ஆகியோருக்கு என்று தனித்தனி சன்னதிகள் உள்ளன. சிவபெருமானே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய இந்தக் கோயிலை விட ஏற்ற கோயில் எதுவுமே இல்லை எனலாம். அறிந்தோ, அறியாமலோ கொலைப்பழி பாவம் ஏற்பட்டவர்கள் நந்தீஸ்வரரை வணங்கி மனம் திருந்தப் பெறலாம். இத்தல இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் பக்தர்கள் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பொதுவாக பிரகார வலம் வரும் போது 3 முறை சுற்றி வருவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், இந்தக் கோயிலில் உள்ள மண்டபத்தை ஒரு முறை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றி வந்ததற்கான பலன் கிடைக்கிறது. 27 நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களும் இந்தக் கோயிலுக்கு சென்று ஒரு முறையேனும் இந்தக் கோயிலிலுள்ள மண்டபத்தை சுற்றி வரலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

சிவராத்திரி திருநாளின் போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது என்பது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இதில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலும் ஒன்று. பரசுராமர் தனது தாயை கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தனது தாயைக் கொன்ற பாவம் தீர பரசுராமர் இந்தக் கோயிலில் நந்தீஸ்வர்ரை வழிபட்டு தனது பாவம் நீங்கப் பெற்றுள்ளார்.

ஒரு காலத்தில் காளை ஒன்று இந்தப் பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. அந்தக் காளையை யாராலும் அடக்க முடியவில்லை. ஊர்மக்கள் சுயம்பு லிங்கமாய் எழுந்தருளியிருந்த சிவன் கோயிலுக்கு வந்து காளையை அடக்கும்படி சிவனிடம் வேண்டினர். இதையடுத்து, சிவபெருமான் அந்தக் காளையை இழுத்துவந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். அப்போது காளை இருந்த இடம் பள்ளமாகிவிட்டது. அந்த பள்ளத்தை விட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது.

காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது. இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால் திருநந்தீஸ்வரம் என்று இந்த ஊருக்கு பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.