திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்!

83

பஞ்சவர்ணேஸ்வரர்: தினந்தோறும் நிறம் மாறும் சிவலிங்கம்!

தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநல்லூர் என்ற ஊரில் உள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் (கல்யாணசுந்தரேஸ்வரர்) கோயில். இந்த கோயிலில் மூலவராக கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருக்கிறார். சமேத கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி அமைந்துள்ளனர். இந்த கோயிலில் உள்ள இறைவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். இவர், தினமும் 5 நிறத்தில் காட்சியளிப்பதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மாசி மகத்தின் போது கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் தான் இந்த கோயிலில் உள்ள குளத்தில் புனித நீராடினாலும் கிடைக்கும் என்பது ஐதீகம். பாண்டவர்களின் தாயான குந்தி தேவி, பஞ்ச பூதங்களினால் குழந்தை பெற்றதால், அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்குவதற்காக குந்தி தேவி நாரத முனிவரிடம் யோசனை கேட்கிறார்.

அதற்கு நாரதரோ, 7 கடல்களில் புனித நீராடினால் தோஷம் நீங்கும் என்கிறார். அதற்கு குந்தி தேவியோ நான், பெண் என்னால் எப்படி 7 கடல்களில் நீராட முடியும்? வேறு ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கிறாள். அதற்கு நாரத முனிவரோ கும்பகோணம் சென்று கல்யாணசுந்தரேஸ்வரரை வழிபடு. அதற்குள்ளாக வழி சொல்கிறேன் என்று நாரதர் கூறுகிறார்.

கல்யாணசுந்தரேஸ்வரரை வழிபாடு செய்துவிட்டு வருவதற்குள்ளாக நல்லூர் தல குளத்தில் 7 கடல்களின் நீரையும் நாரதர் கலந்துவிடுகிறார். அப்போது, மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி தேவி, தனது தோஷம் நீங்க 7 கடல்களின் நீர் கலக்கப்பட்ட நல்லூர் தல குளத்தில் நீராடுகிறாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும், இந்த குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

தாமிர நிறம், தங்க நிறம், நவரத்தின பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் என்ன நிறம் என்று கூறமுடியாத தோற்றம் என்று தினந்தோறும் 5 நிறத்தில் காட்சி தருவதால், பஞ்சவர்ணேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எட்டு கைகளுடன் கூடிய காளி இந்த கோயிலில் காட்சி தருகிறாள். இந்த கோயிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி மாசி மகத்தின் போது கோயிலில் உலா வருவார்.

மாடக்கோயிலின் படிகள் வழியாக சோமாஸ்கந்த மூர்த்தி இறங்கும் போது அடியார்கள் வெண்சாமரம் மற்றும் விசிறி வீசுவார்கள். அப்படியிருந்தும் சோமாஸ்கந்த மூர்த்தியின் முகத்தில் வியர்வை துளிகள் தென்படுவதைக் காணலாம். இந்தக் கோயிலின் தல விருட்சமாக வில்வம் இருக்கிறது. வில்வ மரத்தை ஆதிமரம் என்று அழைக்கின்றனர். முதன் முதலாக தோன்றிய வில்வ மரம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும், நினைத்த காரியம் நிறைவேறும். கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தி வேண்டிக் கொள்கின்றனர்.