திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்!

110

திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள திருநாரையூர் பகுதியில் பொல்லாப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் – காட்டுமன்னார்கோவில் இடையே, சிதம்பரத்திலிருந்து 17 கிலோமீட்டர், காட்டுமன்னார்கோவிலில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் பொல்லாப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவராக சௌந்தர்யேஸ்வரர் இருக்கிறார். உடனுறை திரிபுரசுந்தரி. இந்த கோயிலில் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது.

திருநாரையூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது பொல்லாப் பிள்ளையார் கோயில். முருகப் பெருமானுக்கு எப்படி அறுபடை வீடுகள் இருக்கிறதோ, அதே போன்று இல்லை இல்லை இந்தியா முழுவதும் 10 படை வீடுகள் விநாயகப் பெருமானுக்கு இருக்கிறது. தமிழகத்தில் அறுபடை வீடுகள் இருக்கிறது. அதில், முதல் படை வீடாக இருப்பது திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் கோயில்.

இரண்டாவது படை வீடாக திருவண்ணாமலை, 3ஆவது படை வீடாக திருக்கடவூர், 4ஆவது படை வீடாக மதுரை, 5ஆவது படை வீடாக திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்), 6ஆவது படை வீடாக காசி அமைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2 படை வீடுகள் அமைந்துள்ளன.

சௌந்தர்யேஸ்வரர் கோயிலில் உள்ள பொல்லாப் பிள்ளையார் சன்னதியில் தினமும் பூஜித்து வந்தவர் அனந்தேச சிவாச்சாரியார். இவரது மனைவி கல்யாணி அம்மையார். இவர்களது மகன் தான் நம்பியாண்டார் நம்பி. தினந்தோறும் இறைவனுக்கு பூஜித்துவிட்டு பிரசாதத்தை அங்குள்ளவர்களுக்கு கொடுத்துவிட்டு அனந்தேச சிவாச்சாரியார் வீடு திரும்புவார். அப்போது, வீட்டில் குழந்தையாக இருந்த நம்பியாண்டார் நம்பி, பிரசாதம் எங்கே என்று தனது தந்தையிடம் கேட்கும் போது, அதனை விநாயகர் சாப்பிட்டுவிட்டார் என்று அனந்தேசர் கூறுவார். இதையே உண்மை என்று நம்பியாண்டார் நம்பி நம்பிக் கொண்டிருந்தார்.

அப்படி, ஒரு நாள், அனந்தேசர் வெளியூர் செல்ல நேரிட்டதால், நம்பியாண்டார் நம்பியிடன் விநாயகருக்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்ய கல்யாணி அம்மையார் நைவேத்தியம் படையல் கொடுத்து அனுப்பினார். நம்பி கோயிலுக்கு சென்று பக்தியுடன் பூஜை செய்துவிட்டு தாயார் கொடுத்தனுப்பிய நைவேத்தியத்தை பிள்ளையார் முன்பு வைத்து விநாயகப் பெருமானை சாப்பிடும்படி வேண்டினார். ஆனால், பிள்ளையார் சாப்பிட வரவில்லை. இதனால், ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ணிய நம்பி, தனது தலையை கருங்கல்லில் முட்டி மோதி அழுதுள்ளார்.

அப்போது, பிள்ளையார் நம்பி முன் தோன்றி நம்பியை தம் திருக்கரத்தால் (தும்பிக்கை) தாங்கி தடுத்தருளியுள்ளார். அதன்பின், பிள்ளையார் துதிக்கையை வலப்புறமாக நீட்டி அந்த நைவேத்தியத்தை சாப்பிட்டார். பின், கோயிலிலிருந்து வீடு திரும்பிய நம்பி தனது தாயிடம் பிள்ளையாருக்கு பூஜித்ததைப் பற்றி, பிள்ளையார் நைவேத்திய படையலை சாப்பிட்டது பற்றியும் கூறினான். ஆனால், யாரும் நம்பவில்லை. இதனால், மறுநாளும், நம்பியிடமே நைவேத்தியம் செய்து பிள்ளையாருக்கு பூஜை செய்ய கொடுத்து அனுப்பினர்.

நம்பி கோயிலுக்குள் சென்று பூஜை செய்வதை நம்பியின் தந்தை அனந்தேசர் மறைந்திருந்து பார்த்தார். தனக்கு தரிசனம் தராத பிள்ளையார் தனது மகன் நம்பிக்கு தரிசனம் கொடுத்ததை நினைத்தும், பூஜித்ததையும் நினைத்து மெய்சிலிர்த்த அனந்தேசர் நம்பியை கட்டித்தழுவி இறைவனை வணங்கினார்.

இதையடுத்து, நம்பி அனைத்து கலைகளிலும் வல்லவராக திகழ விநாயகப் பெருமான் அருள் புரிந்தார். தொடர்ந்து, அவர் பல திருமுறைகளையும், பாடல்களையும் பாடினார். திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகியவை 11–ம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்தி பாடியவை ஆகும்.

திருநாரையூரில் உள்ள பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தோன்றிய காரணத்தால், பொள்ளாப் பிள்ளையா என்று அழைக்கப்பட்டார். பொள்ளா என்றால், செதுக்கப்படாத என்பது பொருள். அதாவது, சுயம்புவாக தோன்றியவர். நாள்டைவில் பொல்லாப் பிள்ளையார் என்றானது.