திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில்!

59

மழலைச் செல்வம் கிடைக்க வழிபாடு செய்ய வேண்டிய திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில்

காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் பாதையில் வட மேற்கில் 10 கிமீ தொலைவில் உள்ள பாலுச்செட்டி சத்திரம் என்னும் ஊரில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில்.
ஆலயத்தின் சிறப்பு:

இங்க அருள்பாளிக்கும் மூலவர் விஜயராகவப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் மரகதவல்லித் தாயார். தீர்த்தம் ஜடாயு தீர்த்தம், விமானம் விஜயகோடி விமானம், ப்ரத்யக்ஷம் – ஜடாயு. 108 திவ்யதேசங்களில் ஒன்று திருப்புட்குழி. ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்வதைக் கண்ட ஜடாயு அவனோடு போரிட்டார். ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். இதனால் ஜடாயு உயிரிழந்தார். அவருக்கு ராமச்சந்திரமூர்த்தி இறுதிச் சடங்குகளைச் செய்து மோட்சமளித்தார். ஜடாயுவுக்கு மோட்சமருளிய தலம் திருப்புட்குழி என்று சொல்லப்படுகிறது. இங்கு ஜடாயுவுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இங்கிருக்கும் தீர்த்தம் ஜடாரித் தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

தல வரலாறு:

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 58வது திவ்ய தேசமாகும். சீதையை ராவணன் சிறை எடுத்து செல்லும் வழியில், ஜடாயு சீதையை மீட்க போரிட்டு ராவணனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்த நேரத்தில், சீதையைத் தேடி அவ்வழியே வந்த இராம லக்ஷ்மண்ரிடம் ராவணன் கடத்திச் சென்ற விவரத்தை தெரிவித்து, தனது இறுதி காரியங்களை ராமரே செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் என வேண்டி உயிர்விட்டது ஜடாயு.

இதன்படி ராமர் ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகளை செய்தபோது தீயின் வெப்பம் தாளாமல் ஸ்ரீதேவி தாயார் இடம் மாறியதாக புராணங்கள் கூறுகிறது. இத்தலத்தில் பெருமாளுக்கு இடது புறம் தாயார் சன்னதியும் வலதுபுறம் ஆண்டாள் சன்னதியும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. ராமர் தன் அம்பினால் ஏற்படுத்திய தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார் எனவே இங்குள்ள தீர்த்தம் ஜடாயு புஷ்கரணி என அழைக்கப்படுகிறது.

அசையும் கல் குதிரை:

மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்து அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளுடன் ஒரு கல் குதிரை வாகனம் உள்ளது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என உறுதியுடன் இருந்து உயிர் விட்டாராம். எனவே இவரை நினைவு கூறும் வகையில் திருவிழாவின் எட்டாம் நாளன்று அவரது பெயர் கொண்டு பெருமாள் வீதி உலா வருகிறார்.

ஆலயத்தின் திருவிழா:

தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி, திருக்கார்த்திகை நடைபெறும்.

குழந்தை பாக்கியம் தந்தருளும் தாயார்:

குழந்தை பாக்கியம் அருளும் திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோயிலின் வழிபாட்டு முறை குறித்து ஒரு சிறப்பு இருக்கிறது. ஜாதக ரீதியாக ஐந்தாம் பாவம் என்று சொல்லப்படும் புத்திர ஸ்தானம் பாதிக்கப் பட்டிருந்தாலும், அதற்கு உரியவனாகக் கூறப்படும் குரு பாதிக்கப்பட்டிருந்தாலும் குழந்தைப்பேறு தாமதப்படும் அல்லது தடைப்படும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் எல்லா குறைபாடுகளுக்கும் தீர்வளிக்கும் இறைவன் இந்த வருத்தத்திற்கும் மருத்துவம் செய்கிறார்.

குழந்தை பாக்கியத்திற்கான வேண்டுதல்:

ஜடாயு தீர்த்தத்தில் நீராடிய பெண்கள் ஈர உடையுடன் பெருமாளைத் தரிசனம் செய்யவேண்டும். பின்னர் புடவைத் தலைப்பில் பயறு கொடுக்கப்படும். பச்சைப்பயறு அல்ல வறுத்த பயறு. அதன்மேல் துளசியைக் கொண்டு தீர்த்தம் சேர்க்கப்படும்.

தாயாரின் பிரசாதமாகக் குங்குமமும் அதில் சேர்க்கப்படும். அதனை அப்படியே முடிந்து கையில் பூவுடன் சேர்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஜடாயு தீர்த்தத்தில் நீராடி, மரகதவல்லி சமேத விஜயராகவ பெருமாளைச் சரணடைந்துவிட்டால், உங்கள் இல்லத்தில் மழலை வசந்தம் நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.