திருப்புவனம் கம்பகரேசுவரர் கோயில்!

276

திருப்புவனம் கம்பகரேசுவரர் கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் என்ற ஊரில் உள்ள கோயில் கம்பகரேசுவரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் கம்பகரேசுவரர் மூலவராக காட்சி தருகிறார். தர்மசம்பர்த்தினி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வில்வமரம் தல விருட்சமாக விளங்குகிறது. திருப்புவனேசுரம் இந்த ஊரின் புராணப் பெயராக இருந்துள்ளது. பங்குனி உத்திரம், சரப உற்சவம், சரபேசர் சிறப்பு பூஜைகள், வெள்ளி, ஞாயிறு, சனி, அஷ்டமி, பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இவை தவிர சரப ஹோமம் நடக்கும்.

முருகனுக்கு கார்த்திகை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம், தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு ஆகிய நாட்களிலும் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் சரபேசுவரர் 7 அடி உயரத்தில் தனி சன்னதியில் பிரம்மாண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

கோயில் சுற்றுப்பிரகாரத்தில் பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரது சன்னதிகள் உள்ளது. சரப தீர்த்தம் உள்ளிட்ட 9 தீர்த்தங்கள் இந்தக் கோயிலில் உள்ளது. சரபேசரை வணங்கி வழிபட வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் வழக்குகள், பில்லி சூனியங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோஷங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோஷங்கள், கிரக தோஷங்கள் என்று அனைத்தும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மனம் விரும்பிய வாழ்க்கை, உத்தியோக உயர்வு ஆகிய நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். சுவாமி கம்பகேசுவரரை வழிபட நடுக்கங்கள், நரம்புத் தளர்ச்சி, தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சனைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

அம்பாள் தருமத்தை வளர்த்தி காப்பவள் என்பதால் அவளை வணங்குவோருக்கு பாவங்கள் நீங்கப் பெறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியமும் கிடைக்கப் பெறும். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சரபேசருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்கிறார்கள். அபிஷேகம், பூஜை சகஸ்ரநாம அர்ச்சனை, யாகம் ஆகியவை செய்கிறார்கள். புதிய வஸ்திரம் சாற்றுகின்றனர். சரப யாகம் செய்கின்றனர். சரபேசருக்கு சந்தனக்காப்பு சாற்றுகிறார்கள்.

செவ்வரளிப்பூ, மரிக்கொழுந்து, வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ, ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நிவர்த்திக்கடனாக உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சரபேசருக்கு தயிர் அபிஷேகம் (வியாதி நீக்கம்), பால் அபிஷேகம் (ஆயுள் விருத்தி) ஆகியவற்றை செய்வதும் பக்தர்களது நிவர்த்திக்கடனாக உள்ளது. பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் சுவாமிக்கு செய்யலாம்.

சுவாமிக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் படைத்தல், அம்பாளுக்கு சேலை வழங்குதல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சிவன், விஷ்ணு, காளி (பிரத்யங்கிரா தேவி), துர்க்கை (சூலினி துர்க்கை) ஆகிய 4 மூர்த்திகளும் சேர்ந்த அம்சமே சரபேசர்.

ஹிரண்யனை வதம் செய்த நரசிம்மசுவாமி அந்த உதிரம் தன் உடலில் இருப்பதால் ஆக்ரோஷமும், அகங்காரமும் அடைகிறார். அவரை சாந்தப்படுத்தவே தேவர்கள் சிவபெருமானை வேண்டுகின்றனர். நரசிம்மரின் துளி ரத்தம் பூமியில் பட்டால் ஆயிரம் தீவினை செய்யக்கூடிய குழந்தைகள் தோன்றும் அபாயம் ஏற்பட்டது.

மகாவிஷ்ணுவின் உடம்பு ஆதலால், அமிர்தம் கலந்துள்ள அந்த குழந்தைகளை அழிக்க முடியாது. இந்த சிக்கலை தீர்க்க சிவபெருமானால் மட்டுமே முடியும் என்பதால், தேவர்கள் அவரிடம் முறையிட்டனர். சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக் கால், நான்கு கை, இரண்டு இறக்கைகளில் ஒன்றில் பிரத்யங்கிரா பத்ரகாளியாகவும், மற்றொன்றில் சூலினி என்ற துர்க்கையாகவும் உருவெடுத்து இறக்கைகளால் சிவபெருமான் பறவை ரூபம் எடுக்கிறார்.

பிறகு அந்த நரசிம்மத்தை தன் இரண்டு கால்களால் ஆகாயத்தில் துரத்திச் சென்று காற்று மண்டலத்திற்கு சென்று தனது வஜ்ரத்தால் நரசிம்மத்தை அமுக்க அசுர ரத்தங்கள் பீறிட்டி வெளியேறி பூமியில் விழாது காற்றோடு கலக்கிறது.

அசுர ரத்தம் வெளியானவுடம் சாந்தமடைந்த நரசிம்மர், சிவபெருமானை வழிபடுகிறார். சுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன். அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி. அக்னி பகவான், தேவேந்திரன், மாந்தாதா வரகுணபாண்டியன், சூரியன், சந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம்.

அம்பாளுக்கு 4 கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில், அருள் பாலிக்கிறாள். வரகுணபாண்டியன் என்ற மன்னன் போருக்கு செல்கிறான். செல்லும் வழியில் குதிரை வேகமாக செல்கிறது. அப்போது பாதையின் குறுக்கில் அந்தணர் வர குதிரையின் வேகத்தை அடக்குவதற்குள் குதிரை காலில் விழுந்து விதிப் பயனால் அந்த அந்தணர் உயிர் விடுகிறார்.

அதன் பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுணபாண்டியனை பிடிக்கிறது. அதாவது பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. அந்த தோஷம் நீங்க திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த பிரம்மஹத்தி தோஷமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அந்த தோஷத்திலிருந்து விடுபட்ட வரகுணபாண்டியன் தனது தோஷம் நீங்கியவுடன் திருப்புவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த அந்தணரின் ஆவி பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்தப் பயத்தினால் அவருக்கு நடுக்கம் ஏற்படுகிறது.

அந்த நடுக்கத்தை கம்பகரேசுவரர் போக்குகிறார். மன்னனுக்கு ஏற்பட்ட நடுக்கத்தை தீர்த்ததால் நடுக்கம் தீர்த்த நாயகர் என்ற பெயர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.