திருப்போரூர் கந்தசுவாமி கோயில்!

189

திருப்போரூர் கந்தசுவாமி கோயில்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள முருகன் கோயில் தான் திருப்போரூர் கந்தசுவாமி கோயில். தமிழில் திருப்போரூர் என்பதற்கு புனிதப் போரின் இடம் என்பது பொருள். இந்த கோயிலை சுப்பிரமணிய சுவாமி கோயில் என்றும் கூறலாம்.

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோயிலில் மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கிய முஸ்லீம் மன்னரின் சிலை ஒன்று பொறிக்கப்பட்டது. மேலும், தாரகன் என்ற அசுரனை வதம் செய்த முருகப் பெருமாண் குடிகொண்ட கந்தசுவாமி கோயில் தான் இந்த திருப்போரூர் கந்தசுவாமி கோயில்.

தல வரலாறு:

முருகப்பெருமான் அசுரர்களை அழிப்பதற்கு அவர்களுடன் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆகிய 3 இடங்களில் போர் புரிந்தார்.

திருச்செந்தூர் (கடல் வழி மார்க்கம்) கடலில் போரிட்டு மாயையை அடக்கினார்.

திருப்பரங்குன்றத்தில் (நில மார்க்கம்) நிலத்தில் போர் செய்து வினைப் பயன் அழித்தார்.

திருப்போரூரில் (ஆகாய மார்க்கம்) விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். இங்கு கந்தசுவாமியாக எழுந்தருளியுள்ளார்.

அகத்திய முனிவர் பொதிகை செல்லும் வழியில் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமியை தரிசனம் செய்துள்ளார். தாரகன் என்ற அசுரனுடன் போர் நடந்ததால், இந்த தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்றெல்லாம் பெயர் வந்தன.

கந்த சஷ்டி கவசத்தில் பாலதேவராய சுவாமி, இந்த தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மண்ணில் புதைந்து போனது. தொடர்ந்து, கந்தசுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. அப்போது, மதுரையில் வாழ்ந்து வந்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகப் பெருமான் இது குறித்து அவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

முருகப் பெருமான் கனவில் தோன்றி இது குறித்து கூறியதைத் தொடர்ந்து சிதம்பர சுவாமி திருப்போரூர் வந்து முருகன் சிலையை எடுத்து அதற்கு பிரதிஷ்டை செய்துள்ளார். மேலும், காட்டுப்பகுதியை சீரமைத்து புதிதாக கோயிலும் எழுப்பியுள்ளார். அதோடு, கந்தசுவாமியை போற்றி 726 பாடல்கள் பாடியுள்ளார். திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் சிதம்பர சுவாமிக்கு தனியாக சன்னதியும் உள்ளது.

தல சிறப்பு:

கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். ஆகையால், பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்தனர். முருகப் பெருமானுக்கு பூஜைகள் நடந்த பின், இந்த யந்திரத்திற்கு பூஜைகள் செய்யப்படும். பிரம்மா, சிவன் மற்றும் பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக முருகப் பெருமான் விளங்குகிறார். ஏனென்றால், பிரம்மாவின் அட்சர மாலை, கண்டிகை, சிவனைப் போன்று ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த நிலை மற்றும் பெருமாளைப் போன்று இடது கையை தொடைல் வைத்துக் கொண்டு ஊருஹஸ்த நிலை என்று மும்மூர்த்திகளின் அம்சமாக திகழ்கிறார்.

கந்தசுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள குன்றில் கைலாசநாதர், பாலாம்பிகை கோயில் உள்ளது. மலையில் சிவனும், அடிவாரத்த்ல் முருகனும் அமைந்த தலமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது.

திருப்போரூர் கந்தசுவாமி முருகன் சிலை கண்டெடுக்கப்பட்ட போது அது ஒரு பனை மரத்தில் செய்யப்பட்ட பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாத்திரத்தை தற்போதும் கோயிலில் வைத்திருக்கிறார்கள். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்று முருகப் பெருமான் இருந்த பானை செல்வத்தை கொடுப்பதாக ஐதீகம்.

பிரார்த்தனை:

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் யந்திர முருகனை வழிபட வேண்டும். மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு அம்மனை வழிபட வேண்டும்.