திருமண தடை நீக்கும் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவில்

313

கீர்த்தி கொண்ட மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோவில்களில் ஒன்று, வேலூர் அருகில் அமைந்துள்ள சேண்பாக்கம். ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள் புரிகிறார்.

செல்வ விநாயகர்எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக, விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு தொடங்குவது வழக்கம். அப்படிச் செய்வதால், செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் தடங்கல்கள் இன்றி நல்லபடியாக நடந்தேறும் என்பது வழிவழியாக தொடர்ந்து கொண்டிருக்கும் நம்பிக்கை. ஒரு சிலர் காகிதத்தில் எழுதத் தொடங்கும் போது கூட, பிள்ளையார். சுழி போட்டு எழுதத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

விநாயகப் பெருமான், அகிலத்தையே தன் கட்டைவிரல் அசைவில் வைத்திருக்கும் சிவபெருமானின் மூத்த மகனாக போற்றப்படுகிறார். முருகப்பெருமானுடைய அண்ணனாக வணங்கப்படுகிறார். அதே நேரத்தில் ‘ஓம்’கார தத்துவத்தையே, தலையாக கொண்டிருக்கும் விநாயகர் மூல முதல்வனாகவும், ஞான முதல்வனாகவும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்பது சொல் வழக்கு. எந்த பொருளிலும் விநாயகரை செய்துவைத்து வழிபட முடியும். இருப்பினும் விநாயகப் பெருமானின் புகழ்பாடும் அற்புத ஆலயங்கள், தமிழக மெங்கும் பரவிக்கிடக்கின்றன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார், முக்குறுணி விநாயகர், கள்ள வாரணப் பிள்ளையார் என்று பல பெயர்களிலும் கணபதி பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அப்படிப்பட்ட அற்புத கீர்த்தி கொண்ட மகாகணபதி எழுந்தருளியிருக்கும் கோவில்களில் ஒன்று, வேலூர் அருகில் அமைந்துள்ள சேண்பாக்கம். ஒரே கருவறையில் பதினோரு சுயம்பு லிங்கங்களாக விநாயகப்பெருமான் திருவருள் புரிகிறார். இந்த ஆலயத்தின் பிரதான விநாயகராக ‘செல்வ விநாயகர்’ அருள்கிறார். தலமரமாக வன்னிமரம் போற்றப் படுகிறது. இது மிகவும் தொன்மையான தலம் என்று கூறப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் செண்பக காடாக இருந்ததால் இப்பகுதி ‘செண்பக வனம்’ என அழைக்கப்பட்டு, பின் அதுவே மருவி ‘சேண்பாக்கம்’ என்று அழைக்கப்பட்டதாக பெயர்க் காரணம் சொல்லப் படுகிறது. மேலும் இத்தலத்தில் சுயம்புவாக விநாயகர் இருப்பதால் ‘ஸ்வயம்பாக்கம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, பிற்காலத்தில் ‘சேண்பாக்கம்’ என்று மருவியதாகவும் கூறுகிறார்கள்.

மராட்டிய அமைச்சரான துக்காஜி, தனது தேரில் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கி பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்பளித்தது. பயந்து போனார் துக்காஜி. அப்போது விநாயகர் அசரீரியாக ‘இவ்விடத்தில் ஏகாதச வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வந்து ஆலயம் எழுப்பு’ என்று ஆணையிட்டார்.

அதன்படி இவ்விடத்தில் லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து பிரதிஷ்டை செய்தார் துக்காஜி. மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இருப்பதை இப்போதும் பார்க்க முடியும்.

ஆதிசங்கரருக்கு சுயம்பு மூர்த்தங்களை தரிசனம் செய்வதில் மிகவும் விருப்பம். சேண்பாக்கத்தில் 11 சுயம்பு மூர்த்திகள் இருப்பதை அறிந்து அவர் இத்தலத்திற்கு வந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் லிங்க வடிவிலேயே இருப்பதைக் கண்டார். பின் தன் ஞானதிருஷ்டியால் அனைத்து லிங்கங்களும் விநாயகரே என்பதை அறிந்தார். சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஈசான்ய மூலையில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரரும் இந்த ஆலயத்தை வழிபட்டிருக்கிறார் என்பதிலிருந்தே இந்தக் கோவிலின் பழமையும் சிறப்பும் விளங்கும்.

பாலவிநாயகராக பூமியில் இருந்து வெளிப்பட்ட விநாயகப்பெருமான், நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று வரிசையாக வளைந்து ஓம் வடிவத்தில் இருக்கும் அற்புதம் மனதை கொள்ளை கொள்ளும். விநாயகர் அருவமும், உருவமுமானவர் எனும் தத்துவத்தை கண்முன் நிறுத்தி, தத்துவங்கள் சொல்லும் ஞான மூர்த்திகளாக இந்த திருத் தலத்தில் அமைந்து அருள்பாலித்து வருகிறார்.

ஆலயத்தில் நவக்கிரக மேடை அமைந்துள்ளது. இதில் இருக்கும் சனி பகவான், விநாயகரைப் பார்ப்பது போல் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள், சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து தீபம் ஏற்றி விநாயகரை வழிபாடு செய்தபின், ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அமைத்துள்ள இடத்திலுள்ள நவக்கிரகத்தையும் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பாலவிநாயகருக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

செல்வவிநாயகர் கோவில் என்று அழைக்கப்படும் இத்தலம், வேலூர் நகருக்கு வடமேற்கில் வேலூரில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிகின்ற பாதையில் 1 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றின் தென்கரையில் சேண்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.