திருவல்லீஸ்வரர் கோயில்!

157

திருவல்லீஸ்வரர் கோயில்!

சென்னை மாவட்டம் பாடி, திருவலிதாயம் என்ற பகுதியில் உள்ளது திருவல்லீஸ்வர்ர் கோயில். இந்தக் கோயிலில் திருவல்லீஸ்வரர் (திருவலிதமுடையநாயனார்) மூலவராக காட்சி தருகிறார். தாயார் ஜெகதாம்பிகை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்தக் கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இந்த கோயிலில் விநாயகர் வரசித்தி விநாயகர் என்ற திருநாமம் பெற்று பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

திருவல்லீஸ்வரரை வழிபட திருமணத் தடை, நோய்கள் தீரும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கிட ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பௌர்ணமியில் திருவல்லீஸ்வரரை வழிபட நற்பேறு கிடைக்கும். வியாழக்கிழமைகளில் இந்தக் கோயிலில் உள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷம் நீங்கும்.

தல பெருமை:

குரு கோயில்:

வியாழன் தான் செய்த தவறு காரணமாக தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். வியாழனை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி இந்தக் கோயிலில் உள்ள மூலவர் திருவல்லீஸ்வர்ரை வழிபட்டால் பாவம் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்றார். அதன்படியே இந்தக் கோயிலுக்கு வந்த வியாழன் புனித தீர்த்தத்தில் நீராடி திருவல்லீஸ்வரரை வணங்கி அவரது அருள் பெற்றார்.

புனித தீர்த்தத்தில் நீராடி திருவல்லீஸ்வரரை வழிபட தோஷங்கள் நீங்கும். குரு பகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரம்மபுத்திரிகளான கமலி மற்றும் வல்லி ஆகிய இருவரையும் விநாயகப் பெருமான் இந்தக் கோயிலில் வைத்து தான் திருமணம் செய்து கொண்டார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக கமலி மற்றும் வல்லி ஆகியோருடன் விநாயகர் இருக்கும் அவரது உற்சவர் சிலை இங்கு உள்ளது.

இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். கோயிலுக்குள் நுழைந்ததும் கோயில் பிரகாரத்தில் சுவாமியை பார்த்தவாறு தனி சன்னதியில் குரு பகவான் காட்சி தருகிறார். சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில், ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அபிஷேகப் பிரியரான சிவபெருமான் தனக்கு பூஜை செய்யப்படுவதை உரிமையாக பெற்றுக் கொள்பவர் என்பதால் பலிதாயர் என்று அழைக்கப்படுகிறார். பலி என்றால் பூஜை என்பதையும், தாயம் என்றால் உரிமை என்பதையும் குறிக்கிறது.

தல வரலாறு:

வியாழன் பகவானின் மகன் பரத்வாஜர். இவர், கரிக்குருவியின் (வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான், பறவையாக பிறந்த தைக் கண்டு மனம் வருந்திய பரத்வாஜர், ஒவ்வொரு சிவாலயங்களுக்கும் சென்று சிவபெருமானை வணங்கி வழிபட்டு வந்தார். அப்படி அவர் வந்து வழிபட்ட தலம் பாடி திருவலிதாயம். இந்தக் கோயிலுக்கு வந்த போது கொன்றை மரத்தடியில் சிவலிங்கம் எழுந்தியிருப்பதைக் கண்டார்.

இதையடுத்து, சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். மேலும், பரத்வாஜருக்கு விமோட்சனம் கொடுத்து பறவைகளின் தலைவனாக ஆகும்படி அருளினார். ஆதலால், இத்தலம் திருவலிதாயம் என்றும், சிவபெருமான் வலியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.