திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில்!

120

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில்!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் (சுவேதாரண்யேசுவரர்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பொதுவாக புதன் பகவானை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத கிரகம் என்று தான் சொல்வார்கள். அதாவது, அலி கிரகம். ஆனால், இந்த திருவெண்காட்டில் உள்ள ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர்ர் கோயிலில் புதன் பகவான் ஆண் கிரகமாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த கோயிலில், தீர்த்தம், மூர்த்தி மற்றும் தல விருட்சம் என்று மூன்றுமே உள்ளது. இந்த தலத்தில் ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் – திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளார்.

ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரமானது 5 நிலைகளை கொண்டுள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும், இடது புறம் அக்னிதீர்த்தம் உள்ளது. கரையில் விநாயகர், மெய்க்கண்டார் சன்னதிகள் உள்ளன. மேலும், பிரகாரத்திற்கு அருகிலுள் சூரிய தீர்த்தம் உள்ளது. கரையில் சூரிய தீர்த்த லிங்க சன்னதி உள்ளது.

பிரார்த்தனை:

இந்த கோயிலில் கல்வி, தொழில்காரகனான புதன் பகவானுக்கு என்று தனிக்கோயிலும் உள்ளது. கல்வியில் மேன்மையடைய, தொழில் சிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பிள்ளைப்பேறுக்காக காத்திருப்பவர்கள் இந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள புதன் பகவானை வழிபட்டால் நன்மை உண்டாகும்.

ஆலமர விருட்சகத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. இந்த இடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்த குடும்பத்தினருக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த கோயிலில் வழிபடுவோருக்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்கள் நம்புகின்றனர்.

மேலும், திருமணம் வரம் கை கூடி வரும், குழந்தைப் பாக்கியமும் கிடைக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும். நரம்பு தொடர்பான அனைத்து நோய்களும் தீரும் கோயிலாக இந்த கோயில் அமைந்துள்ளது. காசி கங்கையில் நீராடி வழிபட்டால் 7 தலைமுறை பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால், திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால் 21 தலைமுறைகளின் பித்ரு சாபங்கள் அனைத்தும் நீங்கும்.

அதோடு, வேலை வாய்ப்பு அமையவும், வியாபாரம், தொழில் விருத்தியடையவும், உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றிற்காகவும் சுவேதாரண்யேஸ்வர்ரை வழிபட்டால், கை மேல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

நவக்கிரகங்களில் ஒன்றான புதன் பகவானுக்குரிய கோயில் இந்த சுவேதாரண்யேஸ்வரர். இந்த கோயிலில் புதன் பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது. கல்வி, தொழில்காரகனான புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி, வெண்காந்தாள் மலர் கொண்டு, பாசிப்பயிறு பொடியில் காரம் சேர்த்து நிவேதனம் செய்ய வேண்டும். உடலில் உள்ள நரம்பு தொடர்பான வியாதிகள், திருமண தடை, குழந்தை பேறு கிடைக்க புதன் பகவானுக்கு 17 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

மேலும், மஞ்சள் பொடி, திரவிய பொடி, தேன், சந்தனம், பால், தயிர், விபூதி, தைலம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, மா ஆகியவற்றால் கூட அபிஷேகம் செய்யலாம்.

தல பெருமை:

காசிக்கு சமமான 6 தலங்களில் திருவெண்காடு தலமும் ஒன்று. இந்த கோயிலில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் என்று எல்லாமே மூன்றுதான். சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இந்த கோயிலில் காணலாம். இவர், நவதாண்டவம் புரிந்ததால், இவரை, ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கின்றனர். அக்னி, சூரியன், சந்திரன் ஆகியோர் சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.

சுவேதாரண்யர் (திருவெண்காடர்):

இவர் லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என்ற பல பெயர்களைக் கொண்டுள்ளார்.

அகோர மூர்த்தி:

சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இந்த கோயிலில் காணலாம். இவர், மருத்துவ அசுரனை அழிப்பதற்காக சிவனின் ஈசானிய முகத்திலிருந்து தோன்றியவர்.

சிவபெருமானின் வீரச் செயல் நிகழ்ந்த கோயில் இது. இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு இல்லாமல் வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. தன்னை நம்பி வந்து தன்னிடம் சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே. ஆகையால், அகோர மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு இந்த அகோர மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

பிள்ளையிடுக்கி அம்மன்:

இந்த ஊரின் வட எல்லை பகுதிக்கு திருஞான சம்பந்தர் வந்த போது அவருக்கு ஊர் எங்கும் சிவலோகமாகவும், மணமெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. இதனால், இந்த ஊரில் காலை வைக்க பயந்த திருஞான சம்பந்தர், அம்மா என்று அழைத்தார். அவரது குரலைக் கேட்ட பெரிய நாயகி அம்மன், திருஞான சம்பந்தரை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றார். இப்படி, திருஞான சம்பந்தரை தனது இடுப்பில் தூக்கிச் செல்லும் பெரியநாயகி அம்மன் சிலையானது கோயில் பிரகாரத்தில் உள்ளது.

புதன் பகவான்:

அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்கு உட்பட்டவர் வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான். இவர், தாயின் அரவணைப்போடும், சேய் போன்றும் அன்னையர் கோயிலுக்கு இட து பக்கத்தில் தனது கோயிலை அமைத்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். புதன் பகவான் ஆணும் இல்லை, பெண் இல்லை. இவர் ஒரு அலி வடிவம் பெற்றிருந்தார். தனது தோஷம் நீங்க இந்த கோயிலில் உள்ள திருவெண்காடரை வழிபட்டு அவரது அருளால் ஆண் வடிவம் பெற்று நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர், செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் 5ஆவது காண்டத்திற்கு அதிபதியாக ஆனார். இதனால், புதன் பகவானுக்குரிய நவக்கிரக தலங்களில் திருவெண்காடு சிறப்பு பெற்றது.

பிரம்ம வித்யாம்பாள்:

மாதங்க முனிவருக்கு மகளாக தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யேஸ்வரரை நினைத்து கடும் தவம் புரிந்தார். இதனால், அவரை தனது கணவராக பெற்றார். ஆகையால், திருவெண்காடரின் சக்தி வடிவமானாள். பிரம்ம தேவனுக்கு வித்தை கற்றுக் கொடுத்ததால், பிரம்ம வித்யாம்பிகை என்று அழைக்கப்பட்டாள். கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க பிரம்ம வித்யாம்பாளை வழிபடுவது சிறப்பு.

நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அதில், இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வ செழிப்பு), வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். வலது கீழ்க்கரம் அபயகரம். இடது கீழ்க்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவது. அதாவது, பணிந்தவர் எவரும் தெய்வம் போன்று உயரலாம் என்பதே பிரம்ம வித்யாம்பாளின் தோற்றத்திற்கு காரணமாக விளங்குகிறது.

தனி சன்னதி கொண்ட புதன் பகவான்:

கல்வி, அறிவு, புத்திக்கூர்மை, பேச்சுத்திறமை, ஜோதிடம், இசை, கணிதம், மருத்துவம், சிற்பம், மொழிகளில் புலமை, புலவர் ஆகியவற்றில் சிறப்பு பெற்றவர் புதன் பகவான். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் புதன் பகவானுக்கு என்று தனி சன்னதியும் உள்ளது. இந்த சன்னதிக்கு நேர் எதிரில் புதன் பகவானின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும் உள்ளது.

ஒருவரது ஜாதகத்தில் புதன் சரிவர அமையாவிட்டால் அறிவுக்குறைபாடு ஏற்படும். நரம்புத்தளர்ச்சி வரும். புத்திர பாக்கியமும் கிடைக்காமல் போய்விடும். இந்த குறைபாடுகள் கொண்டவர்கள் தங்களது தோஷ நிவர்த்திக்காக இந்த கோயிலுக்கு வந்து புதன் பகவானின் சன்னதிக்கு எதிரில் உள்ள சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, புதன் பகவானை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும், இசைக்கலைஞர்கள், திரைப்பட கலைஞர்களும் புதன் பகவானை வழிபட நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். காசிக்கு சமமான ஆறுதலங்களில் திருவெண்காடு தலமும் ஒன்று. காசியிலுள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவெண்காட்டில் மூர்த்திகள் மூன்று (திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), தீர்த்தங்கள் மூன்று (அக்னி தீர்த்தம், சூர்ய தீர்த்தம், சந்திரன் தீர்த்தம்), தல விருட்சம் மூன்று (வடவால், வில்வம், கொன்றை) என்று மும்மூன்றாக அமையப்பெற்றுள்ளது.

காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போன்று இந்த கோயிலில் ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வர்ர் கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், யுகம் பல கண்ட கோயில் என்ற பெருமை பெற்றுள்ளது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் வரக் காரணமாக இருந்த கோயிலும் இது ஆகும்.

அகோர பூஜை:

புத பகவானுக்கு தனி சன்னதி கொண்டுள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்தியான சிவபெருமானுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அனைத்து விதமான துன்பங்களையும் அழிக்க கூடிய சக்தி இந்த அகோர பூஜைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்க்கது.

தல வரலாறு:

பிரம்ம தேவனிடம் பெற்ற வரத்தால் மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு தொந்தரவும், கஷ்டங்களும் கொடுத்து வந்தான். இதனால், தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் வேண்டினர். இதையடுத்து, சிவபெருமானின் அருள் வாக்கின்படி தேவர்கள் அனைவரும் வேற்று உருவத்தில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அப்போது, மருத்துவன் என்ற அசுரன் திருவெண்காட்டிலும் வந்து போர் செய்தான்.

மேலும், சிவனை நினைத்து தவம் புரிந்து சூலாயுதம் பெற்றான். அந்த சூலத்தால் ரிஷப தேவரை தாக்கி காயப்படுத்தினான் அசுரன். காயத்துடன் சிவனிடம் முறையிட்டார் ரிஷப தேவர். கோபம் கொண்ட சிவபெருமான் தன்னுடைய 5 முகங்களில் ஒன்றான ஈசானிய முகத்திலிருந்து அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர மூர்த்தியை பார்த்த அடுத்த கணமே அவரிடம் சரணடைந்தான் மருத்துவன் அசுரன். சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிஷப தேவர், சுவேதாரண்யேஸ்வரர் சுவாமியின் நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.