திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்!

249

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் என்ற ஊரில் உள்ளது எறும்பீஸ்வரர் கோயில். பொன்னி நதி பாய்ந்து புலமெல்லாம் வளம் பெற்றது திருச்சி. சோழநாட்டு – திருச்சி மாவட்டத்தின் தென்கரையில் 7ஆவது கோயிலாக இந்த திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது.

எறும்புகளுக்கும் அருள் புரிந்த ஈஸ்வரன் எழுந்தருளிய இடம் என்பதால், இந்த ஊர் எறும்பியூர் எனப்பட்டது. 21 தலைமுறையில் செய்த பாவங்களையும் போக்கும் பிரம்ம தீர்த்தம் இந்த கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் முருகன், ரதிதேவி அக்கினி, நைமிச முனிவர், கட்டாங்குழி சுவாமிகள், பிரம்மா, திருமகள் ஆகியோர் வணங்கி வழிபட்ட கோயில்.

தாரகாசுரன் என்ற அசுரன் தனது வரத்தின் காரணமாக  தேவர்களையும், முனிவர்களையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். மேலும், இந்திரனை தோற்கடித்து விண்ணுலகைக் கைப்பற்றினான். தனது தோல்வியைத் தொடர்ந்து இந்திரன், பிரம்ம தேவனிடம் முறையிட்டான். அப்போது, தென் கைலாயமான மணிக்கூடப்புரத்து பெருமானை வழிபடுவாயாக! அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான். அவன் மூலமாகவே அந்த தாரகாசுரன் என்ற அசுரன் அழையப்படுவான் என்று வழி கூறினார்.

தாரகாசுரன் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக இந்திரன் மற்றும் தேவர்கள் ஆகியோர் எறும்பு வடிவம் எடுத்து இறைவனை கரு நெய்தல் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஆனால், எண்ணெய் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட மிகவும் சிரமமாக இருந்துள்ளது. இதன் காரணமாக தனது வடிவத்தை புற்றுமண்ணாக மாற்றி எறும்புகளுக்கு திருவருள் செய்தார். இதனால், எறும்பீசர் என்று அழைக்கப்பட்டார்.

தலப்பெயர்கள்:

திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரம்மபுரம், இலக்குமிபுரம், மதுவனம், குமாரபுரம், இரத்தினக்கூடம், மணிக்கூடம் என்று பல பெயர்களால் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. எறும்புக்கு புற்றுமண்ணால் ஆன சுயம்பு நாதரான இந்த இறைவன் எறும்பீசர், மதுவனேஸ்வரர், மணி கூடாசலபதி, பிபிலிகேசுவரர், திரும் பெறும்பூர் ஆள்வார், திருவெறும்பியூர் உடையார் நாயனார் என்று கூறப்படுகிறது.

இந்த கோயிலில் நந்தி தேவரின் வலது புறம் தெற்கு நோக்கிய சன்னதியில் அம்மன் சன்னதி அமைந்துள்ளது. நறுங்குழல் நாயகி, சௌந்தர நாயகி, மதுவன ஈஸ்வரி, ரத்னாம்பாள், சுகந்த குழலாள் என்ரு பல திருநாமங்களில் அம்பாள் அருள் புரிந்து வருகிறார்.

இறைவனின் புகழைக் கூறும் திருநாவுக்கரசர் பாடிய திருக்குறுந்தொகை திருத்தாண்டகம்:

‘இன்பமும் பிறப்பும் இறப்பினொடு

துன்பமும் உடனே வைத்த சோதியான்

அன்பனே ! அரனே ! என்றரற்று வார்க்கு

இன்பனாகும் எறும்பியூர் ஈசனே !”

– திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை

இது தவிர திருவெறும்பியூர் புராணம் ஒன்றும் இத்தலத்து இறைவனின் புகழை பறைசாற்றுகிறது.

கல்வெட்டுக்கள்:

இந்த கோயிலில் கிட்டத்தட்ட 49 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பரகேசரிவர்மன், ராஜகேசரிவர்மன், மூன்றாம் ராஜராஜசோழன், சுந்தரபாண்டியன் என்று பல்வேறு அரசர்கள் இந்த கோயிலில் திருப்பணிகள் செய்த விவரங்கள் இந்த கல்வெட்டுகள் மூலமாக அறியப்படுகிறது.

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவம், ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, பிரதோஷ வழிபாடு, பௌர்ணமி கிரிவலம் என்று அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.