தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில்!

114

தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில்!

வேலூர் மாவட்டம் வசூர் என்ற ஊரில் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. வள்ளியை மணம் புரிய வந்த கந்தன் வள்ளிமலை நோக்கி செல்லும் போது தீர்த்தகிரி மலையில் தங்கி சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக முருகனின் பாதச் சுவடுகள் உள்ளது.

முருகப் பெருமானுக்கும், வள்ளிக்கும் சம உயரத்தில் இங்கு சிலை அமைந்துள்ளது. மலை கூட்டத்தில் சின்ன மலையின் மீது முருகனின் கோயில் உள்ளது. மலை அடிவாரத்தில் செல்வ விநாயகர் அமர்ந்துள்ளார். அதுவும் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். மலையின் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்வதற்கு 222 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. படியேறியதும், 10 படிகளை கடந்து வலதுபுறம் முருகனின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இடது புறம் கன்னிமார்கள் சன்னதியும், வலது பக்கம் விழுதுகள் இல்லாத கல்லால மரமும் காட்சி தருகின்றது. கோயிலின் மேற்கு, கிழக்கு, தென்கிழக்கு, வட கிழக்கு ஆகிய பக்கங்களில் ஆலமரம், அத்திமரம், அரசமரம், நாவல் மரம் ஆகியவை காணப்படுகிறது. கோயிலுக்கு அடியில் ஒரு பாறையின் கீழ் இன்றும் சுனை நீர் பொங்கி வழிந்து கொண்டிருகிறது. இதனால், இந்த கோயில் தீர்த்தகிரி என்று அழைக்கப்படுகிறது.

வள்ளியை காதலித்து மணந்த முருகப்ப் பெருமான் தனது மனைவிக்கும் சமமான இடம் தர வேண்டும் என்பதற்காக தன்னுடைய உயரத்திற்கு இணையாக தனது மனைவியையும் பாவித்துள்ளார். தன்னில் பாதி தனது மனைவி என்பதை இதன் மூலம் பக்தர்களுக்கு காண்பிக்கிறார். வள்ளியை காதலித்து மணந்த முருகப் பெருமானின் கோயில் என்பதால், இங்கு அதிகளவில் காதல் திருமணம் தான் நடக்கிறது. மேலும், இந்த கோயிலில் திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வில் எல்லா செல்வங்களும் பெற்று இன்புற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் ஆடி கிருத்திகை 3 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர, சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்தரம், விளக்கு பூஜை, பால்குட அபிஷேகம் ஆகியவையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மலேசியா பத்துமலை முருகன் சிலையைப் போன்று இந்தக் கோயிலிலும் 108 அடி உயர முருகன் சிலை அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பத்துமலை முருகன் சிலையைச் செய்த சிற்பியே இந்தச் சிலையையும் வடிவமைத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தீர்த்தகிரி மலையில் பல தீர்த்தங்கள் இருந்தாலும் ராம தீர்த்தம் மிகவும் விசேஷமானது. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்கவே ராம பிரான் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றுள்ளதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. தீர்க்கவே முடியாத பெரிய பாவங்களைச் செய்தவர்களும் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணியர் கோயிலுக்கு வந்து ராம தீர்த்தத்தில் நீராடினால், அவர்களது பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால், அந்த தீர்த்தத்தில் நீராட விடாமல் குரங்குகள் தடுப்பதாக கூறப்படுகிறது. அதையும் மீறி அந்த ராம தீர்த்தத்தில் நீராடினால் அவர்களது தோஷங்கள் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.