தேனிமலை முருகன் கோயில்!

134

தேனிமலை முருகன் கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை என்ற ஊரில் உள்ள கோயில் சுப்பிரமணியசுவாமி கோயில். இந்தக் கோயிலில் முருகப் பெருமான் மூலவராக காட்சி தருகிறார். பொன்னமராவதியிலிருந்து (காரையூர் வழியாக) 7 கி.மீ, தூரத்தில் புதுக்கோட்டை செல்லும் வழியில் தேனிமலை அமைந்துள்ளது. இங்கு தான் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

தேனிமலை பெயர்காரணம்:

நில வளம், நீர் வளம் மிகுந்து திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசேல் என கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காணப்படுகிறது தேனிமலை கிராமம். இந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக மலை மேல் கோயில் கொண்டுள்ளார் சுப்பிரமணியசுவாமி.

இந்த மலையின் உச்சியில் தேனீக்கள் பெரிய பெரிய கூடுகளைக் கட்டுவது வழக்கம். ஆனால் தேனீ கூடுகளை மக்கள் எக்காரணம் கொண்டும் சேதப்படுத்துவதோ, அதிலிருந்து தேன் சேகரிப்பதோ இல்லை. மலையில் மூன்று பெரிய கூடுகளை தேனீக்கள் கட்டியிருந்தால் அந்த ஆண்டு விவசாயம் அமோகமாகவும், இரண்டு கூடுகளைக் கட்டியிருந்தால் சுமாரான விளைச்சலும் இருக்கும். ஒரு கூடு மட்டும் கட்டியிருந்தால் விளைச்சல் சரியாக இருக்காது என்பது இங்குள்ள மக்கள் ஆண்டாண்டு காலமாகக் கொண்டுள்ள நம்பிக்கை.

தேனீக்கள் இவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்திருப்பதால் மலையும், ஊரும் தேனிமலை என்றே அழைக்கப்படுகிறது. முற்பிறவியில் பாவச் செயல் புரிந்தோர் இப்பிறவியில் தேனீக்களாய் பிறந்து, இந்த மலையை கட்டிக் காத்து, சுப்பிரமணிய சுவாமியின் அருள் கடாட்சத்தால் சாப விமோசனம் நீங்கப் பெற்று, முக்தி பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

இம்மலையில் சித்தர்கள் பலர் தங்கியிருந்து முருகப் பெருமானின் திருவருள் பெற்று முக்தியடைந்ததாகவும், அந்த சித்தர்கள் சுப்பிரமணியசுவாமியை நாளும் தரிசிக்க இன்றும் வந்து செல்வதாகவும் மக்கள் நம்புகின்றனர். இங்கு பெருமானந்த சுவாமி என்கிற சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. இவர் இம்மலையில் நீண்ட காலம் தங்கியிருந்த குமரக்கடவுளை வழிபட்டு வந்ததாகவும், அவரை நாடி வந்த மக்களுக்கு அபிஷேக தீர்த்தம் வழங்கி நோய் தீர்க்க உதவியதாகவும் கூறப்படுகிறது.

தேனிமலையில் முருகன் ஆலயம் உருவான வரலாறு:

இந்த ஆலயம் உருவானது எப்படி?

ஒருசமயம் பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூர் வனப்பகுதிக்கு வேட்டையாட பரிவாரங்களுடன் கிளம்பிச் சென்றார் புதுக்கோட்டை மன்னர். காட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது மன்னருக்கு கடுமையான வயிற்றுவலி உண்டானது. அவருடன் வந்திருந்தவர்கள் சுற்று முற்றும் ஓடிச்சென்று யாராவது ஆட்கள் தென்படுகின்றனரா என்று தேடினர். அங்கு ஆடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், மன்னருக்கு ஏற்பட்ட வயிற்றுவலி பிரச்னையை எடுத்துச் சொல்லி, பக்கத்தில் எவரேனும் வைத்தியர் இருக்கிறாரா எனக் கேட்டனர்.

அதற்கு சிறுவன், இங்கு வைத்தியர் இல்லை. ஆனால் அதோ தெரிகிறதே தேனிமலை. அங்கு குமரக்கடவுளின் சக்திவேல் நிறுவப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்திலேயே சுனைகளில் பெருக்கெடுத்து ஓடிவரும் நீர் நிரம்பிய தீர்த்தக்குளம் உள்ளது. சக்திவேலுக்கு தீர்த்தக் குள நீரால் அபிஷேகம் செய்து கொஞ்சம் அபிஷேக தீர்த்தத்தை மன்னருக்கு அருந்த கொடுத்தால் தீராத வயிற்றுவலி உள்பட சகல பிணிகளும் தீரும் எனச் சொன்னான்.

மந்திரி பிரதானிகள் அப்படியே செய்ய, என்ன அதிசயம்! சற்றைக்கெல்லாம் மன்னரின் வயிற்றுவலி நீங்கி, சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டார். மகிழ்ந்த மன்னர், தேனிமலையில் உடனடியாக குமரக்கடவுளின் திருமேனியை ஸ்தாபித்து, கோயில் கட்ட ஆணையிட்டார். அவ்விதமாக உருவானதுதான் தேனிமலை முருகன் ஆலயம்.

அடிவாரத்தில் தேனிப் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. அங்கிருந்து மலை உச்சிக்குச் செல்வதற்கு வசதியாக இருநூற்று ஐம்பது படிகள் அமைத்துள்ளனர். செல்லும் வழியில் பக்தர்கள் இளைப்பாறிச் செல்வதற்கு வசதியாக மண்டபங்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் பார்த்த கோயில். ராஜகோபுரவாயில் தாண்டி உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்தால் கருவறை. மகாமண்டபத்தில் மயில் வாகனமும், அர்த்த மண்டபத்தில் விநாயகர், சிவன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நந்தி, நாகரும் அருள்கின்றனர். கருவறையில் மயில்மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சக்திவேலைத் தாங்கியபடி எழுந்தருளியுள்ளார்.

இரு கால பூஜை நடைபெறுகிறது. கார்த்திகை நட்சத்திர நன்னாளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இது தவிர தைப்பூசம், பெரிய கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரிய கார்த்திகைத் திருவிழாவையொட்டி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவது கண்கொள்ளாக் காட்சி.

கிரிவலப் பாதையில் விநாயகர், அண்டங் கருப்பர், இடும்பன், வேல்பாறை, குடவரைக் கோயில், பெருமானந்த சுவாமி ஜீவ சமாதி ஆகியவை அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் செவ்வாய் மற்றும் பௌர்ணமி நாட்களில் மலையை கிரிவலம் வந்தால் சகல பாக்யங்களும் சேரும் என்று கல்வெட்டுச் செய்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நோய் நொடிகள் நீங்கவும், மனக்குறைகள் நீங்கி வளமான வாழ்வை விரும்புபவர்களும் தவறாது சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் தேனிமலை என்பது சர்வ நிச்சயம்.