நரசிம்மரை வணங்கியவாறு காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்!

99

நரசிம்மரை வணங்கியவாறு காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது உலக புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில். 18 அடி உயரம் கொண்ட இந்த கோயிலுக்கு கோபுரம் என்று ஒன்று கிடையாது. இந்த கோயிலானது மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயாரின் கோயிலுக்கு நேரெதிரே உள்ளது. மேலும், எதிரேயுள்ள நரசிம்மரை பார்த்துக் கொண்டே இருகரங்கூப்பி வணங்கியவாறே காட்சி தருகிறார்.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து சேலம் செல்லும் வழியில் இந்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. ஒரே கல்லால் செய்யப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையானது 5 ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து இருப்பதாக கூறப்படுகிறது. கருவறைக்கு மேல் கோபுரம் இல்லாமல், இருப்பதால் மழை, வெயில் நேரடியாக ஆஞ்சநேயர் சிலை மீது விழும். ஆஞ்சநேயர் நிற்கும் இடமானது மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் புகழ் பெற்ற கோயில்களில் இந்த ஆஞ்சநேயர் கோயிலும் ஒன்று.

சஞ்சீவி மூலிகைக்காக, ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார். அதன் பிறகு வேலை முடிந்ததும், அங்கேயே வைத்துவிட்டு திரும்பி வந்தார்.  திரும்பி வரும் வழியில் சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார். அப்போது சூரியன் உதயமாகவே, சாளக்கிராமத்தை அப்படியே வைத்து விட்டு சந்தியாவந்தனம் செய்தார்.

சந்தியாவந்தனம் செய்து முடித்து கீழே வைத்திருந்த சாளக்கிராமத்தை தூக்க முயற்சித்தார். ஆனால், முடியவில்லை. அப்போது ஏதோ ஒரு வானொலி, முதலில் இராமனுக்கு உதவி செய்துவிட்டு அதன் பின் வந்து தூக்கு என்று சொல்லவே, ஆஞ்சநேயரும் இராமனுக்கு உதவி செய்ய சென்றுவிட்டார். இராமன் போரில் வெற்றி பெற்று சீதையை மீட்கிறார். அதன் பிறகு ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை தூக்க வருகிறார். ஆனால், சாளக்கிராமமானது நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்கிறது.

இதைக் கண்ட ஆஞ்சநேயரோ, நரசிம்மரை வணங்கியவாறு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இது தான் ஆஞ்சநேயர் கோயில் உருவான விதம்.