நிறங்களை மாற்றி அருள் தரும் அதிசய விநாயகர்!

99

நிறங்களை மாற்றி அருள் தரும் அதிசய விநாயகர்!

நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் தக்கலையிலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவிலும் உள்ளது கேரளபுரம் என்ற ஊர். இங்கு அழகுற அமைந்துள்ளது அருள்மிகு மஹாதேவர் அதிசய விநாயகர் திருக்கோயில்.

ஓடுகளால் வேயப்பட்ட கூரையுடன் கூடிய கலைநயம் மிக்க நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. பழமையான மதில்கள், பக்கவாட்டு நுழைவாயில்கள் எனத் திகழ்கிறது ஆலயம். உள்ளே நுழைந்ததும் வாயிலுக்கு நேராக அருள்மிகு மகாதேவர் சந்நிதி கொண்டிருக்கிறார். இடது புறத்தில் அரசமரத்தடியில் கூரை இல்லாமல்…வெண்பட்டு உடுத்தி அருகம்புல் மாலையுடன் அழகுக்கோலத்தில் தரிசனம் தருகிறார் அதிசய விநாயகர். பக்தர்கள் நின்று வணங்க வசதியாக, ஓட்டுக் கூரையுடன் கூடிய சிறிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள் முதலில் இவரை தரிசித்துவிட்டே ஆலய வழிபாட்டைத் தொடர்கிறார்கள். இந்தக் கோயில் ஆயிரம் வருஷத்துக்கு மேற்பட்டது என்கிறார்கள். சிவ க்ஷேத்திரமாக இருந்தாலும் கணபதிக்கு இங்கு கூடுதல் விசேஷம். இவர் ஆறு மாதம் வெள்ளையாகவும் ஆறு மாதம் கறுப்பாகவும் காட்சி தருவது, கலி யுகத்தின் அதிசயம்தான். உத்திராயன காலத்தில் கறுப்பாகவும் தட்சிணாயன காலத்தில் வெள்ளையாகவும் மாறிவிடுவார் இந்தப் பிள்ளையார்.

திருவிதாங்கூர் மன்னராக இருந்த கேரள வர்மா தம்பிரான் ராமேஸ்வரத்துக்கு கடலாடச் சென்றார். சமுத்திரத்தில் அவர் நீராடியபோது காலில் ஏதோ கல் இடறியிருக்கிறது. எடுத்துப் பார்த்தால் தோற்றத்தில் விநாயகரின் உருவுடன் திகழ்ந்ததாம் அந்தக் கல். பய பக்தியுடன் அதை எடுத்துவந்த மன்னர், திருவனந்தபுரம் செல்லும் வழியில் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்தாராம்.

ஆரம்பத்தில் ஆறு அங்குல உயரம் இருந்த பிள்ளையார், இப்போது சுமார் ஒன்றரை உயரம் வளர்ந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. அடுத்தமுறை குமரி தீரத்துக்குச் செல்லும் அன்பர்கள் அவசியம் கேரளபுரத்துக்கும் சென்று இந்த அதிசயப் பிள்ளையாரை வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்விலும் பல அதிசயங்களை நடத்துவார் இந்த அதிசய விநாயகர்.